Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முன்னணி அணிகளிடையே கடும் போட்டி

அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்புக்கு பெயர்போன இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. 5-வது முறையாக நடைபெறும் இந்த உலகக் கோப்பை போட்டி ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைகிறது.

முதல் நாளான இன்று முதல் மார்ச் 20-ம் தேதி வரை தகுதிச்சுற்று என அழைக்கப்படும் முதல் சுற்று ஆட்டங்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. இந்த ஆட்டங்கள் நிறைவடையும் மார்ச் 21-ம் தேதி அன்று, 2-வது சுற்று என்றழைக்கப்படும் சூப்பர் 10 ஆட்டங்கள் தொடங்குகின்றன. சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் பரமவைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

வாய்ப்பு எப்படி?

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னணி அணிகளாகக் கருதப்பட்டாலும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளிடையே கோப்பையை வெல்ல கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 ஓவர் உலகக் கோப்பையில் முத்திரைப் பதித்துவிட்ட ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து நழுவி வரும் டி20 உலகக் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என இரு அணிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல.

எப்போதுமே கணிக்க முடியாத அணியான பாகிஸ்தான், 2-வது முறையாக கோப்பையை வெல்ல இந்த முறை நல்ல வாய்ப்பாகும். சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது. கேப்டன் முகமது ஹபீஸ், ஷாகித் அப்ரிதி, சோயிப் மாலிக், உமர் அக்மல், சோஹைல் தன்வீர், சயீத் அஜ்மல் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.

தக்கவைக்குமா மே.இ.தீவுகள்?

கடந்த முறை இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடிய நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, வங்கதேசத்திலும் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெயில், டுவைன் ஸ்மித், மார்லான் சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, கேப்டன் டேரன் சமி ஆகியோர் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

கடந்த முறை சொந்த மண்ணில் கோப்பையை நழுவவிட்ட இலங்கை அணி இந்த முறை கோப்பையை வெல்வதில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வாகை சூடிய இலங்கை அணிக்கு குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனா, தில்ஷான், திசாரா பெரேரா, கேப்டன் மேத்யூஸ், மலிங்கா, மென்டிஸ் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். 2009, 2012-ல் இலங்கை அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மலிங்கா, மென்டிஸ் ஆகியோர் எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்துயிர் பெறுமா இந்தியா?

கடந்த சில மாதங்களாக தொடர் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்பை இழந்தது. காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடாத கேப்டன் தோனி மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது பலம் சேர்ப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கும் ஒரே நபர் விராட் கோலி மட்டும்தான்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, கேப்டன் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும். நீண்ட நாள்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் யுவராஜ் சிங் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவின் துரதிருஷ்டம்

தென் ஆப்பிரிக்க அணி எல்லா நேரங்களிலும் வலுவான அணியாக இருந்தாலும்கூட, இன்று வரை உலகக் கோப்பையை வென்றதில்லை. தொடர்ந்து துரத்தும் துரதிருஷ்டத்திலிருந்து இந்த முறையாவது தென் ஆப்பிரிக்கா தப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் தங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடினாலும்கூட, இந்திய துணைக் கண்டங்களில் இருபது ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடியதில்லை. இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். நியூஸிலாந்து அணியில் கோரே ஆண்டர்சன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், வங்கதேச மண்ணில் அவர்களின் ஆட்டம் எடுபடுமா என்பது தெரியவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு

டி20 உலகக் கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 29 ஒளிபரப்பு நிறுவனங்கள் 20 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளன. இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் நார்வே, நேபாளம், ஆப்கானிஸ்தான், பசிபிக் தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 180 கோடி பேர் உலகக் கோப்பையை ரசிப்பார்கள். இதற்காக 7 அல்ட்ரா மோஷன் கேமராக்கள், பறக்கும் கேமராக்கள் உள்பட 28 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 35 ஆட்டங்கள் தவிர, பயிற்சி போட்டிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.18 கோடி பரிசுத் தொகை

இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 18 கோடியாகும். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியே 70 லட்சமும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.3.35 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x