Published : 04 May 2017 08:06 AM
Last Updated : 04 May 2017 08:06 AM

ராகுல் திரிபாதி 93 ரன்கள் விளாசல்: கொல்கத்தா அணியை வீழ்த்தியது ரைசிங் புனே - 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் காயம் காரணமாக ராபின் உத்தப்பா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. உனத்கட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சுனில் நரேன், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷெல்டன் ஜேக்சன் 10 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஹிட்விக்கெட் ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் வீசிய 6-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிய கேப்டன் கதவும் காம்பீர் அடுத்த பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய யூசுப் பதானை 4 ரன்களில் இம்ரன் தகிர் வெளியேற்றினார். இதனால் 9.1 ஓவரில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி நெருக்கடியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் களமிறங்கிய கிராண்ட் ஹோம் மணீஷ் பாண்டேவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். தாக்குர் வீசிய 11-வது ஓவரில் மணீஷ் பாண்டே தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விரட்டினார். இம்ரன் தகிர் வீசிய அடுத்த ஓவரில் கிராண்ட் ஹோம் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

இந்த ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ஆனால் கிறிஸ்டியன் வீசிய அடுத்த ஓவரில் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர் 16.2 ஓவர்களில் 119 ஆக இருந்த போது உனத்கட் பந்தில் கிராண்ட்ஹோம் வெளியேறினார். அவர் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். பார்மில் இருந்த இரு பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணி மீண்டும் நெருக்கடிக்கு உள்ளானது.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் 1, நாதன் கவுல்டர் 6 ரன்களில் நடையை கட்டினர். கடைசி கட்டத்தில் சூர்ய குமார் யாதவ் 16 பந்துகளில், தலா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணியால் சற்று வலுவான ஸ்கோரை கொடுக்க முடிந்தது.

புனே அணி தரப்பில் உனத்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் புனே அணி பேட் செய்தது. ரஹானே 11 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் நிதானமாக விளையாட ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார்.

ஸ்மித் 9 ரன்னிலும், மனோஜ் திவாரி 8 ரன்னிலும் கிறிஸ்வோக்ஸ் பந்தில் போல்டானார்கள். அதிரடியாக விளையாடி திரிபாதி 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இவரது அதிரடியால் 10.3 ஓவரிலேயே புனே அணி 100 ரன்களை கடந்தது. திரிபாதிக்கு உறுதுணையாக நிதானமாக பேட் செய்த பென் ஸ்டோக்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தோனி 5 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.

வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார். கிராண்ட் ஹோம் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் கிறிஸ்டியன் சிக்ஸர் விளாச

புனே அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ்டின் 9, வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புனே அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் கொல்கத்தா அணி 4-வது தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டம்
டெல்லி - குஜராத்
இடம்: டெல்லி நேரம்: இரவு 8.00 மணி நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x