Published : 27 Jun 2017 03:18 PM
Last Updated : 27 Jun 2017 03:18 PM

டெஸ்ட் போட்டியிலிருந்து ஏபி.டிவில்லியர்ஸ் ஓய்வு பெறுகிறார்?

தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இதில் முனைந்து அவரை சமாதானப்படுத்தி ஆட வைத்தால் டிவில்லியர்ஸ் ஒருவேளை தன் முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் டிவில்லியர்ஸ் இது குறித்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது டெஸ்ட் போட்டிகளின் சுமையிலிருந்து விலகி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் அவரது இலக்கு 2019 உலகக்கோப்பையை வெல்வதிலேயே பிரதானமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் தற்போதைய பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவின் ஒப்பந்தம் நடப்பு இங்கிலாந்து தொடருடன் முடிவுக்கு வருகிறது, அவர் நீட்டிப்பு கேட்டு விண்ணப்பிக்கவில்லை, ஆனால் டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ரஸல் டொமிங்கோ தொடர வேண்டுமென்று விரும்புகின்றனர்.

ஆகவே பயிற்சியாளர் குறித்த முடிவும் டிவில்லியர்ஸ் முடிவின் மீது தாக்கம் செலுத்தலாம் என்று தெரிகிறது.

முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை பத்தியில் ஏறக்குறைய டிவில்லியர்ஸ் டெஸ்ட் ஓய்வை உறுதி செய்வது போல்தான் எழுதியுள்ளார்.

“கடந்த ஆண்டே ஒருகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக ஏபி முடிவெடுத்ததாகவே நான் நம்புகிறேன். ஆனால் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அவரை தொடர்ந்து ஆட ஊக்குவித்தது. நிறைய பயணங்கள் உடலில் செலுத்தும் தாக்கத்தைக் கருதி ஏதாவது ஒரு வடிவத்தை விட்டு விடுவது என்பது அவரது எண்ணமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் இன்னும் கொஞ்ச காலம் தன் கிரிக்கெட் வாழ்வை நீட்டிக்க டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளைத் துறக்க முடிவெடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்காக டிவில்லியர்ஸ் ஏற்கெனவே நிறைய தியாகங்களைப் புரிந்துள்ளார். எனவே அவர் இன்னும் 2 ஆண்டுகளில் வரவிருக்கும் 2019 உலகக்கோப்பையை தனது இலக்காகக் கருதி, அதனை வெல்ல திண்ணமாக நினைப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட இலக்காக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

டிவில்லியர்ஸ் யாருக்கு இன்னும் எதை நிரூபிக்க வேண்டும்? அவர் ஏற்கெனவே ஸ்டார்தான்” என்று கூறியுள்ளார்.

அவர் டிவில்லியர்ஸுக்கு கூறும்போது கேப்டன்சியிலிருந்து விலகி பேட்டிங் ஆற்றலை உலகக்கோப்பைக்காக பராமரிக்க வேண்டும் என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x