Last Updated : 24 Nov, 2014 04:12 PM

 

Published : 24 Nov 2014 04:12 PM
Last Updated : 24 Nov 2014 04:12 PM

கிரிக்கெட்டை அழிக்க நினைப்பதா?- சீனிவாசனின் இரட்டை ஆதாயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

பிசிசிஐயின் தலைவராகவும் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால் இரட்டை ஆதாயங்கள் பெறுவது தொடர்பான கேள்விகளை என்.சீனிவாசன் சந்திக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2013 ஐ.பி.எல்.-லில் சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் புகார்கள் எழுந்ததால் அது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை நவம்பர் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ஐசிசி தலைவர் என். சீனிவாசன் சூதாட்டம், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தன்னை மீண்டும் பிசிசிஐ தலைவராக நியமிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்தார்.

முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடந்தது. அப்போது என். சீனிவாசன் மற்றும் பிசிசிஐ ஆகிய இரு தரப்பினரிடமும் பல கேள்விகளை முன்வைத்து உச்ச நீதிமன்றம் கூறியதாவது:

முத்கல் கமிட்டியின் விசாரணை அறிக்கையை நாங்கள் உண்மை உபதேசமாகவே காண்கிறோம். சந்தேகத்தின் பலன் கிரிக்கெட்டுக் குத்தான் சாதகமாக இருக்க வேண்டும். தனிநபருக்கு அல்ல.

பிசிசிஐயின் தலைவராகவும் ஐபிஎல்-லில் ஒரு அணியின் உரிமை யாளராகவும் இருப்பதால் இரட்டை ஆதாயங்கள் பெறுவது தொடர் பான கேள்விகளை சீனிவாசன் சந்திக்கவேண்டும். அவருடைய ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முத்கல் அறிக்கை சீனிவாசன் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டாலும் அவரு டைய அணியைச் சேர்ந்தவர் சூதாட் டத்தில் ஈடுபட்டது ஒரு பிசிசிஐ உறுப்பினராக சீனிவாசனை பாதிக்காதா? பிசிசிஐதான் ஐபிஎல்-லை தொடங்கியது. எனவே இரண்டுக்கும் வித்தியாசங்கள் கிடையாது.

இந்தியாவில் கிரிக்கெட்டை மதம் போல கருதுகிறார்கள். சூதாட்டம் தொடர்ந்து நடந்தால், அது கிரிக்கெட்டை கொல்வதற்கு சமம். கிரிக்கெட் மேட்சின் முடிவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட் டால், எப்படி ரசிகர்கள் போட்டியை காண வருவார்கள்? கிரிக்கெட் எப்போதும் ஜெண்டில்மேன் விளையாட்டாக இருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முத்கல் அறிக்கை மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது.

தண்டனை உறுதி - விளையாட்டுத் துறை அமைச்சர்

ஐபிஎல் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அறிக்கை வெளிவந்த பிறகு அது பற்றி பரிசீலிப்போம் என்று விளை யாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

சச்சின் மறுப்பு

முத்கல் கமிட்டி அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க சச்சின் டெண்டுல்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில் நான் கருத்து தெரிவிக்கமுடியாது என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x