Published : 23 Jun 2016 09:12 PM
Last Updated : 23 Jun 2016 09:12 PM

இரட்டைப் பதவி விவகாரம் குறித்த கேள்விக்கு அதிருப்தியடைந்த அனில் கும்ப்ளே

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அனில் கும்ப்ளேவிடம் ஆதாய நோக்கத்திலான இரட்டைப் பதவி (Conflict of Interest) குறித்து கேட்கப்பட்ட போது அவர் சற்றே எரிச்சலடைந்து பதில் அளித்தார்.

விளையாட்டு மற்றும் ஆலோசனை வர்த்தகத்தில் உள்ள டென்விக் நிறுவனத்தில் அனில் கும்ப்ளேயின் ஈடுபாடு குறித்து அவர் பயிற்சியாளரானவுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, “பிசிசிஐ-யும் இது பற்றி அக்கறையுடன் உள்ளது, ஏற்கெனவே விவாதித்துள்ளோம் அதிகாரபூர்வமாக பயிற்சியாளர் பொறுப்பு ஏற்கும் முன் இந்த விவகாரத்துக்கு எளிதில் தீர்வு காணப்படும்.” என்றார்.

சிறிது நேரம் சென்ற பிறகு இந்தி நேர்காணலில் கேட்கப்பட்ட போது கும்ப்ளே தனது எரிச்சல் கலந்த அதிருப்தியை வெளியிட்டார், “எப்போது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்ற விவகாரம் எழுப்பப்படுகிறதோ கூடவே என் பெயரும் இழுக்கப்படுகிறது. நான் 18 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளேன். நான் ஆடும் போது எனது பெயருக்கு நடுவே ராதாகிருஷ்ணன் என்ற பெயர் இணைக்கப்பட்டது. இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஓய்வு பெற்ற பிறகு ‘இரட்டைப் பதவி’என்பது என்னுடன் இணைக்கப்படுகிறது. நான் பிசிசிஐ-யுடன் பேசிவிட்டேன் உரிய நடவடிக்கை அதிகாரபூர்வ பொறுப்பேற்பிற்கு முன் முடிந்து விடும்” என்றார்.

நான் விளையாடிய போது என்னுடன் ஆடிய கிரேட் பிளேயர்களான சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண் ஆகியோருடன் எனக்கு மைதானத்திலும் வெளியிலும் நல்ல உறவுகள் உள்ளன. எனவே நாங்கள் 5 பேரும் அமர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு எது நன்மை விளைவிக்குமோ அதனை ஆலோசித்து திட்டமிடுவோம். ஆர்வமுள்ள பிறரும் பங்கேற்பார்கள். நான் இதனை எதிர்நோக்குகிறேன்.

இது ஒரு பெரிய பொறுப்பு மிகுந்த பணியாகும். பயிற்சியாளர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை நான் அறிவேன். வீரர்கள் ஓய்வறைக்கு மீண்டும் திரும்புவதற்கு இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். வீரர்கள் தயார் செய்து கொள்வதற்கு உதவுவதற்கு இதுவே சரியான நேரம்.

என்னிடம் குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் உள்ளன. வரும் தொடர்களுக்கும் போட்டிகளுக்கும் என்னிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால் நான் தனியாக திட்டமிட முடியாது, ஒட்டுமொத்த அணியுடனும் நான் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது யோசனைகளையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்”

என்றார் அனில் கும்ப்ளே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x