Published : 28 Mar 2014 10:06 AM
Last Updated : 28 Mar 2014 10:06 AM

நெதர்லாந்திடம் திணறிய தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திக்குமுக்காடிய தென் ஆப்பிரிக்க அணி கடும் போராட்டத்துக்குப் பிறகு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தபோதிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 22 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

பின்னர் வந்த டூ பிளெஸ்ஸி 14 பந்துகளில் 24, டிவில்லியர்ஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 10.1 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா. இதனால் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பின்வரிசை வீரர்கள் விரைவாக வெளியேறினர். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்பிரிக்கா.

நெதர்லாந்து தரப்பில் ஆஷன் மாலிக் ஜமில் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மைபர்க் அதிரடி

இதையடுத்து பேட் செய்த நெதர்லாந்து அணியில் ஸ்டீபன் மைபர்க் வெளுத்து வாங்கினார். சோட்சோபி வீசிய 3-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் விளாசிய மைபர்க், சோட்சோபி வீசிய 5-வது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விரட்டினார். இதனால் முதல் 5 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது நெதர்லாந்து. இதனிடையே ஸ்வார்ட் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய மைபர்க் 25 பந்துகளில் அரைசதம் கண்டார்.

28 பந்துகளைச் சந்தித்த மைபர்க் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து டுமினி பந்துவீச்சில் போல்டு ஆனார். அப்போது நெதர்லாந்து 7.5 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்தது. நெதர்லாந்து வெற்றிபெற 72 பந்துகளில் 66 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது.

இதன்பிறகு டாம் கூப்பர் 13 பந்துகளில் 16 ரன்கள் சேர்க்க, வெற்றி வாய்ப்பை நெருங்கியது நெதர்லாந்து. எனினும் இம்ரான் தாஹிரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 18.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது. 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x