Published : 14 Nov 2013 07:48 PM
Last Updated : 14 Nov 2013 07:48 PM

சச்சின்... சச்சின்..! - வான்கடேவில் விண்ணைத் தொட்ட வரவேற்பு

இந்திய கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 200-வது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டியில் விளையாட காலடி எடுத்துவைத்தத் தருணம்... மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களால் எழுப்பப்பட்ட 'சச்சின்... சச்சின்..!' என்ற வரவேற்பு, விண்ணைத் தொடும் அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது.

ஒட்டுமொத்த மைதானத்தின் பார்வையும் ஒரே திசையை நோக்கி இருக்க, பல நாட்களுக்குப் பிறகு, ஒரு பேட்ஸ்மேன் பெவிலியனில் இருந்து இறங்கி வருவது டிவியில் ஒளிபரப்பப்பட்டது. கண்களைத் திறந்துகொண்டே, வெயிலில் தவம் இருந்த ரசிகர்களுக்கு, அவர்களது கிரிக்கெட் கடவுள் காட்சியளித்தார். ஆனந்தக் கூச்சல் காதைப் பிளக்க, தனது கடைசி போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் சச்சின்.

இந்திய பவுலர்களின் அபாரமான பந்துவீச்சால், ஆட்டத்தின் முதல் நாளின் தேனீர் இடைவேளைக்கு முன்பே, மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா 77 ரன்கள் சேர்த்திருந்தபோது அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழக்க, எதிர்பார்த்ததைவிட, சீக்கிரமாக பேட்டிங் செய்ய வந்தார் சச்சின்.

"சச்சின்... சச்சின்... சச்சின்!!!" என்ற உற்சாக கோரஸ் எதிரொலிக்க, 'கண்ணிமைக்க வேண்டாம்' என மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் எழுத்துக்கள் தோன்ற, பவுண்டரி எல்லையைத் தாண்டும் முன் வானத்தை ஒரு முறை பார்த்த பின், எப்போதும் போல அமைதியாக களத்தினுள் சச்சின் நுழைந்தார். அவரது பேட்டின் பிடி (கிரிப்), தேசியக் கொடியின் மூவர்ணத்தையும் தாங்கியிருந்தது.

சச்சின் களமிறங்கியபோது, மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் வரிசையில் நின்று, டெண்டுல்கரை பூரிப்போடு பார்த்தபடி கைதட்டி வரவேற்று கெளரவித்தனர்.

மும்பை கிரிக்கெட் வாரியம், சச்சினுக்காக 500 டிக்கெட்டுகளைக் கொடுத்திருந்தது. அவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் வந்திருந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். இளம் வயதில் டெண்டுல்கரின் பயிற்சியாளராக இருந்த ராமாகாந்த் அச்ரேகரும், பல மைல்கல் சாதனைகளைத் தாண்டிய தன் மாணவனின் இன்னொரு சாதனையைக் காண வந்திருந்தார்.

ஒட்டுமொத்தமாக, இந்தப் போட்டியின் துவக்க நாளே சச்சினுக்கு மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குமே மிகுந்த உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது.

சதத்தை எதிர்நோக்கி சகாப்தம்!

சதங்களின் நாயகனான சச்சின் தனது கடைசி போட்டியில், அதுவும் தன் சொந்த மண்ணில் சதம் அடித்து பிரியாவிடையின்போது ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போது எகிறியிருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 38 ரன்களுடன் களத்தில் இருக்க, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது தனது கடைசி போட்டியின் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர் 49 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். நாளை தனது ஆட்டத்தைத் தொடரும் சச்சின், சதம் அடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு மிகுதியாகி இருக்கிறது.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஓஜா, அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 182 ரன்களில் சுருண்டது.

இதனால், கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதால், முதல் இன்னிங்ஸ்சிலேயே சச்சினின் கடைசி ஆடுகள தரிசனத்தில் சதத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x