Published : 24 Feb 2014 10:13 AM
Last Updated : 24 Feb 2014 10:13 AM

டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலியை நியமிக்க வேண்டும்: இயான் சேப்பல்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனியை நீக்கிவிட்டு விராட் கோலியை கேப்டனாக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, அந்நிய மண்ணில் தொடர் தோல்வியை சந்தித்துவரும் நிலையில், இது தொடர்பாக இ.எஸ்.பி.என்.கிரிக்இன்போவுக்காக அவர் எழுதியுள்ள பத்தியில் கூறப் பட்டிருப்பதாவது: இந்திய அணியின் இப்போதைய கேப்டன் தோனி, தடுப்பாட்டத்தைக் கையாண்டு வெற்றியை கோட்டை விட்டுவிடுகிறார். ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரையில் தோனி சிறந்த கேப்டன்தான். அதேபோல் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சரியான நேரத்தில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தருவதிலும் அவர் மாஸ்டர்தான். ஆனால் ஒரு டெஸ்ட் கேப்டனாக அவர் சரியாக செயலாற்றவில்லை. தன்னிலை மறந்து பூங்காவில் சுற்றிக்கொண்டு இருக்கும் பேராசிரியரைப் போல் செயல்பட்டு வெற்றியை கோட்டை விடும் மனப்போக்கில் இருக்கிறார் தோனி.

அவருடைய தற்காப்பு உத்தி, எதிரணி பேட்ஸ்மேன்கள் எவ்வித சிக்கலுமின்றி சுதந் திரமாக விளையாடி ரன் குவிக்கக் காரணமாகிவிடுகிறது. அதன்விளைவாக சமீபத்தில் மெக்கல்லம்-வாட்லிங் ஜோடி ரன் குவித்ததைப்போல இந்தியா வுக்கு எதிராக மற்ற அணிகள் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்கடி குவித்து விடுகின்றன. 2011-12-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸி.க்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வி கண்ட போதே டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய அணி போராடிக் கொண்டிருந்த நேரங்களில் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை தோனியிடம் இல்லை. ஒரு கேப்டன் தனது அணிக்கு இக்கட்டான சூழலை உருவாக்க ஆரம்பித்துவிட்டாலே அவர் நீக்கப்பட்டுவிட வேண்டும். இக் கட்டான நேரத்தில் அணியின் சகவீரர்களை உற்சாகப்படுத்த முடியாமல், போட்டி அதுபோக்கில் போகட்டும் என்பதைப் போன்று தோனி செயல்படுகிறார். தோனி சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் அதற் காக அணி மோசமான தோல்வியைச் சந்திக்கும் வரை அவரை கேப்டன் பதவியில் வைத்திருப்பது சரியானதல்ல. சாதகமான மைதானங்களில் அவர் சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப் பாக இயக்குகிறார். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தோனி போராடுகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா “ஒயிட் வாஷ்” ஆனபோது தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்காத தேர்வாளர்களின் முடிவு சரியான துதான். ஏனெனில் அப்போது மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றிருந்தனர். அடுத்த கேப்டனாகக்கூடிய தகுதி ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஆனால் இப்போது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு தோனி யின் சரியான மாற்றாக கோலி இருக்கிறார். அவர் 19 வயதுக்குட் பட்டோருக்கான உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் இந் திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முக்கியமாக சரியான வயதில் இருப்பதோடு, தலைசிறந்த பேட்ஸ்மேனாக முதிர்ச்சி பெற்றிருக்கிறார். இவையெல்லாவற்றையும்விட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப் பிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி ரன் குவித்திருக்கிறார்.

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சாதிக்க கோலியைப் போன்ற கேப்டனின் உத்வேகம் தேவை. ஆனால் சாதகமற்ற சூழல்களில் விளையாடும்போது அதற்கேற்றவாறு சரியான பௌலர் களை தேர்வு செய்து போட்டியை கட்டுக்குள் வைக்கக்கூடியவராக கேப்டன் இருக்கவேண்டும்.

கோலி ஆக்ரோஷமிக்க பேட்ஸ்மேன் என்பதால் கேப்டன் பொறுப்பிலும் அதே போன்று செயல்படுவார் என எடுத்துக்கொள்ளக்கூடாது. ரிக்கி பாண்டிங்கை எடுத்துக் கொண்டால் அவர் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்தான். ஆனால் களத்தில் கேப்டனாக இருக்கும்போது அதுபோன்ற உணர்வோடு அவர் செயல்பட்டதில்லை.

கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்துவிட்டால் பல்வேறு விஷயங்களில் அவர் துணிச்சலாக முடிவெடுப்பதை காணலாம். தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் விராட் கோலியை கேப்டனாக்கும் வாய்ப்பு தேர்வாளர்களுக்கு கிடைத்துள்ளது. ஆசிய கோப் பையில் கோலி சிறப்பாக செயல்படும்பட்சத்தில் டெஸ்ட் அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x