Last Updated : 29 Jan, 2014 12:07 PM

 

Published : 29 Jan 2014 12:07 PM
Last Updated : 29 Jan 2014 12:07 PM

சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்று: கேரளத்திடம் போராடி வீழ்ந்தது ஆந்திரம்: அந்தமானை பந்தாடியது கர்நாடகம்

சந்தோஷ் டிராபி தென் மண்டல தகுதிச்சுற்றில் கேரள அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆந்திரத்தைத் தோற்கடித்தது. இரண்டு கோல் வித்தியாசத்தில் தோற்றாலும் ஆந்திர அணி கடைசி வரை கடுமையாகப் போராடியே தோற்றது.

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்று சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கேரள அணியும், ஆந்திர அணியும் மோதின. முதல் ஆட்டத்தில் தமிழகத்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்ற கேரள அணி, இந்தப் போட்டியில் 4-4-2 என்ற பார்மட்டில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது.

அதேவேளையில் ஆந்திர அணி 4-5-1 என்ற பார்மட்டில் ஆடியது. முதல் 30 நிமிடங்களில் கேரள அணி சில கார்னர் கிக் வாய்ப்புகளையும், ஆந்திரம் ஒரு கார்னர் கிக் வாய்ப்பையும் கோட்டைவிட்டன. வெறித்தனமாக விளையாடிய ஆந்திர நடுகள வீரர் தாத்தம் நாயுடு, தனக்கு கிடைத்த ஒரு “த்ரோ இன்” வாய்ப்பில் கோல் கம்பத்துக்கு துல்லியமாக பந்தை வீசினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஆந்திரத்துக்கு கோல் கிடைக்காமல் போனது.

ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் வலது எல்லையில் நின்ற கேரள வீரர் கிப்சன் ஜஸ்டஸிடம் பந்து செல்லவே, அவர் பந்தை கோல் கம்பத்தை நோக்கி துல்லியமாக “பாஸ்” செய்தார். அங்கு நின்ற உஸ்மான் அதை கோலாக மாற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் கேரளம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே கேரளத்துக்கு 2-வது கோல் கிடைத்தது.

49-வது நிமிடத்தில் கேரளத்தின் கே.பி. அனீஷ், ஸ்டிரைக்கர் கண்ணனுக்கு பந்தை கடத்த அவர் அதை கோலாக்கினார். இதனால் கேரளம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தாத்தம் நாயுடு அபாரம்

இதன்பிறகு கேரளம் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்தபோதும், ஆந்திரத்தின் தாத்தம் நாயுடு கேரள வீரர்களின் கோல் கனவுகளை தலையால் முட்டி தகர்த்தார். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஆந்திரத்துக்கு மீண்டும் ஒரு “த்ரோ இன்” வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை வலது எல்லையில் இருந்து தாத்தம் நாயுடு வீசிய பந்தை கோல் கம்பத்தின் அருகில் நின்ற சயீத் கலீல் தலையால் முட்டி அற்புதமாகக் கோலடித்தார்.

அசத்திய ஆந்திர கோல் கீப்பர்

இதன்பிறகு கேரளம் ஆக்ரோஷமாக ஆடியது. அந்த அணியின் பல கோல் வாய்ப்புகளை ஆந்திர கோல் கீப்பர் ராஜி நாயுடு அற்புதமாகத் தகர்த்தார். இதனால் கேரள வீரர்களின் பலமுயற்சிகளுக்கு பலனில்லாமல் போனது. ஆனால் விடாப்பிடியாகப் போராடிய கேரள அணி 71-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது. இந்த கோலை உஸ்மான் அடித்தார்.

தோல்வி உறுதி என்றானபோதும்கூட ஆந்திர வீரர்கள் கடைசி வரை மனம் தளராமல் விளையாடினார்கள். கேரள அணிக்கு கண்ணன், உஸ்மான், ஷிபின்லால் ஆகியோரின் ஆட்டம் பலம் சேர்ப்பதாக அமைந்தது என்றால், ஆந்திரத்தின் மிகப்பெரிய பலமாகத் திகழ்ந்தது தாத்தம் நாயுடுதான். அவருடைய ஷாட்களில் இருந்த வேகம், ஆக்ரோஷமான போராட்டம் ஆகியவை கேரள வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அதுவும் “த்ரோ இன்” வாய்ப்புகளில் சென்னை ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார் தாத்தம் நாயுடு.

ஆந்திர மாநிலத்தில் கால்பந்துக்கென்று பெரிய வசதி வாய்ப்புகளோ, எதி்ர்காலமோ இல்லாதபோதிலும்கூட அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடியது மெய்சிலிர்க்க வைத்தது.

கர்நாடகம் 12 கோல்

முன்னதாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கர்நாடக அணி 12-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அணியை பந்தாடியது. கர்நாடகம் தரப்பில் குர்னிலால், டான்பாஸ்கோ ஆகியோர் ஹாட்ரிக் கோல்களை அடித்தனர். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் 2-வது தோல்வியைப் பதிவு செய்துள்ள அந்தமானின் பிரதான சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x