Published : 03 Jun 2017 07:02 PM
Last Updated : 03 Jun 2017 07:02 PM

இந்திய அணியின் ஒட்டுமொத்த பலமா? பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா? - ஞாயிறன்று பலப்பரிட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் ஞாயிறன்று மோதுகிறது.

இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கும், பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சிறந்த மோதலாக இந்த ஆட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் இந்த ஹை-வோல்டேஜ் ஆட்டத்துக்கு மழை அச்சுறுத்தலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 பெரிய தொடர் கிரிக்கெட் போட்டிகள் ஒருதலைபட்சமாகவே அமைந்துள்ளன. 2012 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 உலக டி20, 2015 உலகக்கோப்பை, 2016 உலக டி20 ஆகியவற்றில் இந்தியக் கையே ஓங்கியிருந்தது.

மேலும் இந்திய அணி ஒட்டுமொத்தமாக வலுவாக திகழ்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி எந்த நிலையிலிருந்தும் எழுச்சிபெற்று எதிரணியினரை வீழ்த்தும் திடீர்த் திறமை கொண்டது. புதிய அதிரடி ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் தன்னை நிரூபிக்க முனைப்புடன் இருப்பார்.

கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை எந்தவித பந்து வீச்சுக்கும் அச்சுறுத்தலாகவே விளங்கும்.

ஆனால் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஆமிர் மற்றும் அவருக்கு நிகரான திறமை கொண்ட ஜூனைத் கான், வஹாப் ரியாஸ்ஆகியோர் இங்கிலாந்து சூழ்நிலைகளில் அதிலும் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சோதனையாக இருக்கக்கூடும்.

கணிக்க முடியாத அணியாக திகழும் பாகிஸ்தான் அணி, போட்டியின் தினத்தில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும். இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறக்கும் தன்மை உள்ளது.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணியை சமநிலை அடையச் செய்யும் காரணியாக திகழ்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளாக குறுகிய வடிவிலான போட்டிகளில் அற்புதமான திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெற்றிகரமான டெஸ்ட் சீசனுக்கு பிறகு உமேஷ் யாதவின் பந்து வீச்சு மெருகேறி உள்ளது. அதேவேளையில் சிறந்த பேட்ஸ்மேன்களின் திறனை சோதிக்கும் வகையிலான பந்து வீச்சை முகமது ஷமி கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலது கை பேட்ஸ்மேன்களையே அதிகம் கொண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளராக இடம் பெறுவதில் ரவீந்திர ஜடேஜாவுடன் அஸ்வின் மல்லுக்கட்ட வேண்டியது இருக்கும்.

கேப்டன்ஷிப்பில் கோலியின் வளர்ச்சி எந்தவிதத்தில் உள்ளது என்பதை சோதிப்பதாக இருக்கும். பேட்டிங்கில் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 41.44 என்ற ஆரோக்கியமான சராசரியை வைத்துள்ளார். இங்கிலாந்தில் கோலி ஆடிய 14 ஒருநாள் போட்டிகளில் ஒரு நூறுடன் 38.54 என்ற சராசரியை வைத்துள்ளார்.

மேலும் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்த தொடரை கோலி அணுகுகிறார். இந்த விஷயத்தில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை இன்றைய ஆட்டம் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். தேவையில்லாத நேரத்தில் முக்கியத்துவம் அற்ற பிரச்சினையில் (கோலி-கும்ப்ளே மோதல்) இருந்து இந்திய அணி எளிதாக கடந்து செல்லும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.

ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமே பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக சிறப்பான சாதனைகளை வைத்துள்ளது. இதுவரை மோதி உள்ள 3 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளையும், இந்தியா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கை பாகிஸ்தான் அணியிடன் ஒப்பிடும்போது அதிக அனுபவமும், தரமும் கொண்டதாக உள்ளது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 6 மாதங்களுக்கு பிறகு சர்தேச போட்டியில் களமிறங்குகிறார்.

மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மீண்டும் அதுபோன்றதொரு செயல்திறனை வெளிப்படுத்த அவர் விரும்புவார்.

ரோஹித் சர்மா-ஷிகர் தவண் ஜோடியின் சராசரி ரன்குவிப்பு 38 ஆகும். ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடியான அசார் அலி - அகமது ஷேசாத் ஜோடியின் ரன்குவிப்பு சராசரி 33 ஆகவே இருக்கிறது.

3-வது இடத்தில் களமிறங்கும் கோலி உலக பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரது வரிசையில் 4-வது வீரராக உள்ளார். இதே இடத்தில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின், ஒருநாள் போட்டி சராசரி 45 ஆக உள்ளது.

22 வயதான அவர் பாகிஸ்தான் அணியின் சமீபகால சிறந்த கண்டுபிடிப்பாக திகழ்கிறார். 26 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது திறனை சோதித்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தின் முன்னால் எந்த மனநிலையில் அவர் விளையாடுகிறார் என்பதை பொறுத்தே அவரது சிறந்த பேட்டிங் வெளிப்படும்.

முகமது ஹபீஸ், கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோருடன் ஒப்பிடும் போது யுவராஜ் சிங், தோனி ஆகியோர் தரம் வாய்ந்த வீரர்களாகவும், சிறந்த திறனை வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர். வைரஸ் காய்ச்சல் காரணமாக இரு பயிற்சி ஆட்டங்களிலும் யுவராஜ் சிங் விளையாடவில்லை.

ஆனால் கடந்த இரு நாட்களாக அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். முதன்முறையாக துணைக்கண்டங்களுக்கு வெளியே நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க உள்ள கேதார் ஜாதவுக்கு சோதனை காத்திருக்கிறது.

முகமது அமிர், வகாப் ரியாஸ், ஜூனைத்கான் ஆகியோரை கொண்ட மூவர் கூட்டணியால் வேகப் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சற்று மேலோங்கிய அணியாகவே உள்ளது. ஆனால் இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரும் தாக்குதல் தொடுக்க சளைத்தவர்கள் இல்லை.

புவனேஷ் குமார் பாகிஸ்தானுக்கு எதிராக 21.55 என்ற பவுலிங் சராசரி வைத்துள்ளார், சிக்கனவிகிதமும் அபாரமான ஓவருக்கு 4.21 என்று உள்ளது.

ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x