Published : 03 Jan 2016 12:31 PM
Last Updated : 03 Jan 2016 12:31 PM

சென்னை ஓபன் நாளை தொடக்கம்: வாவ்ரிங்காவுக்கு முதல் நிலை அந்தஸ்து

20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி தொடரான இந்த போட்டி வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 4வது இடத்தில் உள்ளவருமான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 12வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), 19வது இடத்தில் உள்ள பெனோய்ட் பைர் (பிரான்ஸ்), 25வது இடத்தில் உள்ள ராபர்டோ பாடிஸ்டா (ஸ்பெயின்), 27வது இடத்தில் உள்ள குல்லேர்மோ கார்ஸியா (ஸ்பெயின்), 38 வது இடத்தில் உள்ள ஜிலெச் முல்லர் (லக்ஸம்பர்க்), 39வது இடத்தில் உள்ள வாசெக் போப்ஸில் (கனடா), 44வது இடத்தில் உள்ள போர்னா கோரிச் (குரோஷியா), 45வது இடத்தில் உள்ள அஜாஜ் பெடென் (இங்கிலாந்து) உள்ளிட்ட 32 வீரர்கள் ஒற்றையர் பிரிவில் கலந்துகொள்கின்றனர்.

வாவ்ரிங்கா

இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங் காவுக்கு முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், பிரான்ஸின் பெனோயிட் பேர், ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா ஆகியோர் நேரடியாக 2வது சுற்றில் கலந்துகொள்கின்றனர்.

ரஷ்யாவின் ருப்லேவ்(வைல்டு கார்டு), ஸ்பெயினின் அல் மக்ரோ ஆகியோர் தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரர்களுடன் மோதுகின்றனர். டேனியல் (ஜப்பான்)-கார்ஸியா லோப்பஸ் (ஸ்பெயின்), கிரால்டோ (கொலம்பியா)-ரசூல்(செக்.குடியரசு), கச்சனோவ் (ரஷ்யா)-முல்லர்(லக்ஸம்பர்க்), போர்னோ கோ ரிக் (குரோஷியா) -கிரனோலர்ஸ் (ஸ்பெயின்), ராம் (அமெரிக்கா)-கிரஜெக் (அமெரிக்கா), மில்மேன் (ஆஸ்தி ரேலியா)-டான்ஸ்கோய்(ரஷ்யா), போப்ஸில் (கனடா) பெடென் (இங்கிலாந்து), வன்னி (இத்தாலி) ஸ்டர்ப்(ஜெர்மனி), ராம்குமார் ராமநாதன்(இந்தியா)-கிமேனோ டிரெவர் (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றுப்போட்டிகளில் மோதுகின்றனர்.

இரட்டையர் பிரிவு

இரட்டையர் பிரிவில் முதல் நிலை அந்தஸ்து பெற்றுள்ள கிளாஷேன் (தென் ஆப்பிரிக்கா), ராம் (அமெரிக்கா) ஜோடி முதல் சுற்றில் மகேஷ் பூபதி(இந்தியா)-முல்லர் (லக்ஸம்பர்க்) ஜோடியை எதிர்கொள்கிறது.

இந்தியாவின் சோம்தேவ் வர்மன்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மோன்ரோ(அமெரிக்கா)- கஸ்டிலோ(சீனா) ஜோடியையும், மற்றொரு இந்திய ஜோடியான பாலாஜி-ராம்குமார் ராமநாதன் நியூஸிலாந்தின் டேனியல்-ஸிடாக் ஜோடியை சந்திக்கின்றன. லியாண்டர் பயஸ் (இந்தியா), கிரானோலர்ஸ்(ஸ்பெயின்) ஜோடி கார்ஸியா லோப்பஸ்(ஸ்பெயின்)-வாவ்ரிங்கா(ஸ்விட்சர்லாந்து) ஜோடியை தனது முதல் சுற்றில் எதிர்கொள்கிறது.

சோம்தேவ் வெற்றி

தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் சென்னை ஓபன் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.3.20 கோடி ஆகும். இதற்கிடையே தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. ஒற்றையர் பிரிவின் பிரதான சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 28 பேர் நேரடியாக கலந்து கொள்கின்றனர். மற்ற 4 இடங்களுக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.

இதில் இந்தியாவின் சோம்தேவ், சனம் சிங், சாகேத் மைனேனி, விஜய் சுந்தர் பிரசாந்த், பிரஜ்னீஷ் குணேஷ்வரன் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் சோம்தேவ் வர்மன் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் விஜய்சுந்தர் பிரசாந்தை தோற்கடித்தார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ்வார்டை இன்று சந்திக்கிறார்.

முன்னதாக ஜேம்ஸ்வார்டு, இந்தியாவின் ஜீவன் நெடுஞ் செழியனை 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். சாகேத் மைனேனி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சனம்சிங்கை தோற்கடித்தார். சனம் சிங் தனது அடுத்த சுற்றில் இன்று இத்தாலியின் தாமஸ் பேபினோவை எதிர்கொள்கி றார்.

வைல்டு கார்டு மூலம் தகுதி பெற்றிருந்த இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹஸ்டி லோவை தோற்கடித்தார். பாலாஜி இன்று நடைபெறும் ஆட்டத்தில் குரோஷியாவின் அன்டி பாவிக் குடன் மோதுகிறார். வைல்டு கார்டு பெற்ற மற்றொரு இந்திய வீரர் பிரஜ்னீஷ் குணேஷ் வரன் 3-6, 0-6 என்ற நேர்செட்டில் சுலோவேக்கியாவின் கோவலிக் கிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x