Published : 27 Jan 2017 09:16 AM
Last Updated : 27 Jan 2017 09:16 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்- ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி யின் ஆடவர் பிரிவில் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் இறுதிப் போட்டியில் கால்பதித்தனர். கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் மார்ட்டினா ஹிங்கிஸ், லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வியடைந்தது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 4-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவுடன் மோதினார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.

இதில் முதல் இரு செட்களை 7-5, 6-3 என்ற கணக்கில் பெடரரும் அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வாவ்ரிங்காவும் கைப்பற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் பரபரப்பானது. எனினும் தனது அனுபவத்தால் கடைசி செட்டை 6-3 என பெடரர் கைப்பற்றினார். முடிவில் சுமார் 3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-3, 1-6, 4-6, 6-3 கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பெடரர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மிர்ஜனா லுசிக் பரோனியை எதிர்த்து விளையாடினார். இதில் செரீனா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 50 நிமிடங்களில் முடிவடைந்தது.

இறுதிப் போட்டியில் செரீனா, தனது மூத்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாட உள்ளார். 13-ம் நிலை வீராங்கனையான வீனஸ், அரை இறுதியில் சக நாட்டை சேர்ந்த 35-ம் நிலை வீராங்கனையான கோ கோக வேன்டெவேக்கை எதிர்த்து விளையாடினார். சுமார் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

14 வருடங்களுக்கு பிறகு ஆஸ்தி ரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குள் வீனஸ் நுழைந்துள்ளார். பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அவர் தனது சகோதரியான செரீனாவை எதிர்த்து விளையாட உள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது இது 9-வது முறையாகும். 8 முறை நடைபெற்ற மோதல்களில் செரீனா 6 முறையும், வீனஸ் 2 முறையும் பட்டம் வென்றுள்ளனர். கடைசியாக 2009 விம்பிள்டன் இறுதிப்போட்டியில் இருவரும் பட்டம் வெல்ல நேரடியாக மோதினர். இதில் செரீனா வெற்றி பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா இதுவரை 6 முறை பட்டம் வென்றுள் ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அவர் இதுவரை 22 பட்டங்கள் கைப்பற்றி உள்ளார். இம்முறை ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடும் பட்சத்தில் கிராண்ட் ஸ் லாம் போட்டிகளில் 22 பட்டங்கள் வென்று 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஸ்டெபி கிராபின் சாத னையை செரீனா முறியடிக்கக்கூடும்.

பட்டம் வெல்லும் பட்சத்தில் அவர் இழந்த முதலிடம் தானாகவே வந்து சேரும். செரீனா இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இதில் 6 ஆஸ்திரேலிய ஓபன், 3 பிரெஞ்ச் ஓபன், 7 விம்பிள்டன், 6 அமெரிக்க ஓபன் பட்டங்கள் அடங்கும்.

வீனஸ் வில்லியம்ஸ் இதுவரை 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றி உள்ளார். விம்பிள்டனில் 5 முறையும், அமெரிக்க ஓபனில் 2 முறையும் மகுடம் சூடிய அவருக்கு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவை இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

பயஸ் ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி 3-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஷேம் குரோத் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஜூனியர் மகளிர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஜீல் தேசாய் 4-6, 3-6 என்ற நேர் செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா ரைபகினாவிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x