Published : 11 Jun 2017 07:14 PM
Last Updated : 11 Jun 2017 07:14 PM

தேவையில்லாத ரன் அவுட்கள்; 75 ரன்களில் 9 விக்கெடுகளை இழந்து தெ.ஆ 191 ரன்களுக்குச் சுருண்டது

ஓவலில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை முதலில் பேட் செய்ய அழைத்த இந்திய அணி 191 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டியது.

75 ரன்களில் 9 விக்கெட்டுகள்... கடைசி 8 விக்கெட்டுகளை 51 ரன்களுக்குப் பறிகொடுத்தது.

அபாரமான கேப்டன்சி, பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றோடு தென் ஆப்பிரிக்காவின் மோசமான பேட்டிங்கும் இணைந்து கொள்ள 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

குவிண்டன் டி காக் அதிகபட்சமாக 72 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுத்திருந்த போது இந்திய அணி ரன் கொடுக்காமல் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆகி வெளியேற 116/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 75 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு மடிந்தது தென் ஆப்பிரிக்கா. தோனி 2 கேட்ச்களோடு 2 ரன் அவுட்களிலும் ஈடுபட்டு அசத்தினார்.

இந்திய அணியில் புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஹாட்ரிக் வாய்ப்பிலும் இருந்தார் ஆனால் கைகூடவில்லை. பும்ரா 2 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார். அஸ்வின் உண்மையில் ஆம்லாவை (35) வீழ்த்தியது ஒரு விதத்தில் திருப்பு முனை என்றே கூற வேண்டும், காரணம் தென் ஆப்பிரிக்கா 76 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து வலுவாகவே சென்று கொண்டிருந்தது.

முதல் 25 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பவுலர்கள் 75 பந்துகளை ரன் இல்லாத பந்துகளாக வீசி நெருக்கினர். மொத்தம் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 267 பந்துகளில் 141 பந்துகள் டாட் பால்கள், அதாவது பாதிக்கும் மேல் ரன் இல்லாத பந்துகளே.

தொடக்கத்தில் இந்திய பந்து வீச்சு அவ்வளவு பயங்கரமாகவெல்லாம் இல்லை, ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டி காக் ஆகியோர் ஏனோ பம்மி பம்மி ஆடினர். இதனால்தான் தொய்வு ஏற்பட்டது. முதல் 17 ஓவர்களில் மொத்தம் 4-5 பவுண்டரிகளே அடிக்கப்பட்டது.

ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கிய ஆட்டங்களில் ஆடி நீண்ட நாட்களாகிவிட்டது, ஆனால் இன்று நிச்சயம் ஒரு கைபார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரோ 2015 உலகக்கோப்பையில் மோஹித் சர்மாவின் த்ரோவில் ரன் அவுட் ஆனது போல், இன்றும் டுபிளெசிஸ் பாயிண்டில் ஆடிய பந்தை ஹர்திக் பாண்டியா அபாரமாகத் தடுத்து தோனிக்கு அனுப்ப டிவில்லியர்ஸ் டைவ் அடித்தும் பயனில்லை அதிர்ச்சிகரமாக ரன் அவுட் ஆனார் டிவில்லியர்ஸ். இத்தனைக்கும் 1 பவுண்டரியுடன் அவர் 12 பந்துகளி 16 ரன்கள் என்று நன்றாகவே ஆடிவந்தார். ரன்னே இல்லாததற்கு ஓடியது ஏன் என்று புரியவில்லை, இந்த ரன்னுக்கான அழைப்பும் டிவில்லியர்ஸுடையதுதான்.

ஆனால் இன்னொன்றையும் நாம் கூறியாக வேண்டும், இந்திய அணி பவுண்டரிகள் கொடுக்காமல் ஒன்று இரண்டு ரன்களையும் தடுத்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்திருக்கும், அதனால் இந்த ரன் அவுட் சம்பவித்திருக்கலாம். முதலிலிருந்தே தென் ஆப்பிரிக்காவின் கணிப்பு ரன் விஷயத்தில் தவறாகவே இருந்து வந்தது, முதலிலும் ஒரு ரன் அவுட் கோலி த்ரோ ஸ்டம்பிற்குச் சென்றிருந்தால் ஒரு ரன் அவுட் சம்பவித்திருக்கும்.

டேவிட் மில்லர் ஒரு அபாய வீரர். இவரும் மோசமாக ரன் அவுட் ஆனார். இந்த முறை டுபிளேசிஸ், டேவிட் மில்லர் இருவருமே ஒரே முனையில் இருந்தனர் விக்கெட் கீப்பருக்கு அடித்த மோசமான த்ரோ ரன்னர் முனைக்குச் செல்லும் போது இருவரும் பேட்டிங் முனையில் இருந்தனர், யார் ரன் அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்தார், இம்முறையும் டுபிளசிஸ் கிரீசை தொட்டு விட மில்லர் ஆட்டமிழந்தார்.

36 ரன்கள் எடுத்த டுபிளெசிஸ் 2 ரன் அவுட்களை பார்த்ததனால் பதற்றமடைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தை ஆடமுயன்று பவுல்டு ஆகி வெளியேறினார். கிறிஸ் மோரிஸ், பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க டுமினி ஒரு முனையில் 20 நாட் அவுட் என்று தனித்து விடப்பட தென் ஆப்பிரிக்கா 191 ரன்களுக்குச் சுருண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x