Published : 02 Feb 2017 08:17 AM
Last Updated : 02 Feb 2017 08:17 AM

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகள் சாதனையுடன் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இதனையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடர் முழுதையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. குழி பிட்ச், நடுவர் பிழைகள் என்று இங்கிலாந்து தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி ரெய்னா, தோனி, யுவராஜ் அதிரடியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 119/2 என்ற நிலையிலிருந்து 3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு 16.3 ஓவர்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

சாஹல் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சிறந்த டி20 பந்து வீச்சு சாதனையை நிகழ்த்தினார், உலக அளவில் 3-வது சிறந்த பந்து விச்சாகும். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் (32), மீண்டும் ரூட் (42), இயன் மோர்கன் (40) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இங்கிலாந்தில் மொத்தம் 5 பேட்ஸ்மென்கள் டக் அவுட், இந்த ஐவரில் ஒருவரும் 2 பந்துகளுக்கு மேல் தாங்கவில்லை.

தோனி தனது 10 ஆண்டுகள் டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரைசதம் கண்டார் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 56 ரன்களுக்கு நன்றாக ஆடினார், திட்டமிட்டு ஆடினார்.

தொடக்கத்தில் கோலிக்கு மீண்டும் லெக்ஸ்டம்பைப் பதம் பார்க்கும் பந்துக்கு எல்.பி. மறுக்கப்பட்டது, ஆனால் அதே பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று ராகுல் ஓடிவராததால் பேட்டிங் முனைக்கு திரும்பும் முயற்சியில் ரன் அவுட் ஆனார் கோலி. ஆஸ்திரேலிய கேப்டன்கள் போல் இந்திய கேப்டன் கோலிக்கும் எல்.பி. கொடுக்கக் கூடாது என்ற புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

ராகுல் இரண்டு அபார பவுண்டரிகளுடன் மொயின் அலியை நேராக மைதானத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்தார், பந்து காணாமல் போனது. மிகப்பெரிய சிக்ஸ். ஆனால் 22 ரன்களில் ஸ்டோக்ஸிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ரெய்னா களமிறங்கி ஷார்ட் பிட்ச் சோதனைகளை எதிர்கொண்டார். ஒரு பந்து லெக் திசையில் சர்க்கிளுக்கு உள்ளே மிட் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே விழுந்தது. ஆனால் ஒரு பவுன்சர் டாப் எட்ஜில் சிக்சுக்குப் பறந்தது, ஸ்டோக்ஸ் கையைத் தள்ளிக் கொண்டு சென்ற சிக்ஸ் அது. பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். 45 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார்.

ரெய்னாவும், ராகுலும் 6 ஓவர்களில் 61 ரன்களை 2வது விக்கெட்டுக்காகவும், தோனியும் ரெய்னாவும் 6 ஓவர்கலில் 55 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகவும் சேர்த்தனர். யுவராஜ் சிங், ஜோர்டானின் புல் லெந்த் பந்தை எதிர்கொள்ள கிரீஸில் உள்ளே நின்று சிக்ஸ், சிக்ஸ், பவுண்டரி, பிறகு சிக்ஸ் என்று தொடர்ச்சியாக அடித்து 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து மில்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பாண்டியா ஒரு சிக்ஸ் அடித்தார். ரிஷப் பண்ட் 2-வது பந்தில் புல் ஷாட்டில் பவுண்டரி அடித்து 5 நாட் அவுட். பாண்டியா 11 நாட் அவுட், இந்தியா 202/6.

சாஹல் சாதனை பந்துவீச்சு:

இங்கிலாந்து இலக்கைத் துரத்தும் போது 2வது ஓவரை லெக் பிரேக் கூக்ளி பவுலர் சாஹல் வீச ஜேசன் ராய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறி ஸ்டாண்டுக்கு ஒரு சிக்ஸ் அடித்தார். சாம் பில்லிங்ஸ் முதல் டக்கில் சாஹலின் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

ராய், ரூட் இணைந்து 5 ஓவர்களில் 54 ரன்களை விளாசினர். மோர்கன், ரூட் இணைந்து 7 ஓவர்களில் 64 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

மோர்கன் அப்போது 21 பந்துகளில் 2 பவுண்ட்ரிகள் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் என்று ஆடிவந்தார் அப்போதுதான் சாஹல் புகுந்தார் அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ரூட்டை காலி செய்தார்.

பிறகு மீண்டும் 16-வது ஓவரில் மொயின் அலி, ஸ்டோக்ஸ், ஜோர்டான் ஆகியோரை வீழ்த்தினார், இடையில் பட்லர், பும்ராவிடம் அவுட் ஆனார். இங்கிலாந்து 119/2 என்ற நிலையிலிருந்து 127 ரன்களுக்குச் சுருண்டது. சாஹல் 25 ரன்கள்க்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய இந்திய டி20 சாதனையை நிகழ்த்தினார்.

பும்ரா மீண்டும் அபாரமாக வீசி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாஹல் தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x