Last Updated : 12 Apr, 2014 11:39 AM

 

Published : 12 Apr 2014 11:39 AM
Last Updated : 12 Apr 2014 11:39 AM

சென்னை கால்பந்து லீக்: இந்தியன் வங்கிக்கு 2-வது வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியைத் தோற்கடித்தது. ஹிந்துஸ்தான் அணியின் பலவீனமான பின்களமே அதன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி, ஹிந்துஸ்தான் ஈகிள்ஸை சந்தித்தது.

ஆரம்பம் முதலே இந்தியன் வங்கி ஆதிக்கம் செலுத்தியது. அதேநேரத்தில் ஹிந்துஸ்தான் அணியின் பின்களம் ஆரம்பம் முதலே சொதப்பலாக இருந்தது. ஆனால் இந்தியன் வங்கியின் பின்களத்துக்கு வேயன் டி சில்வா, ஞானசேகரன், பரத் அருண், ஜோகன் ஆகியோர் மிகப்பெரிய பலமாக திகழ்ந்தனர்.

இந்தியன் வங்கி ஆதிக்கம்

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் இந்தியன் வங்கி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் அருண் கோல் கம்பத்தை நோக்கி பந்தை பாஸ் செய்தார். அப்போது ஹிந்துஸ்தான் தடுப்பாட்டக்காரர்கள் யாரும் முன்னேறி வராத நிலையில், பந்தை தடுக்கும் முயற்சியில் இறங்கிய கோல் கீப்பரும் கோல் கம்பத்துக்கு வெளியில் வந்தார். அப்போது 6 யார்ட் பாக்ஸில் இருந்த ஸ்டிரைக்கர் கௌரி தாசன் தலையால் முட்டி எளிதாக கோலடித்தார்.

சொதப்பிய பின்களம்

எனினும் இந்த முன்னிலை நீண்டநேரம் நிலைக்கவில்லை. 21-வது நிமிடத்தில் ஹிந்துஸ்தான் வீரர் பி.கார்த்திக் வலது எல்லையில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை “பாஸ்” செய்ய, அங்கிருந்த ஜெரிஸ் கெல்சி தலையால் முட்டி கோலாக்கினார். ஹிந்துஸ்தான் பின்கள வீரர்கள் தொடர்ந்து தடுமாற, 27-வது நிமிடத்தில் 18 யார்ட் பாக்ஸுக்கு வலது புறத்தில் இருந்த இந்தியன் வங்கி ஸ்டிரைக்கர் ஜான் வசமானது பந்து.

கடகடவென பந்தை கோல் கம்பத்தை நோக்கி நகர்த்திய ஜான், ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் வீரர்கள் இருவரைத் தாண்டி செல்ல, எதிர்முனையில் இருந்த ஹிந்துஸ்தான் பின்கள வீரர்கள் அதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் அதை எளிதாக கோலாக்கினார் நைஜீரிய வீரரான ஜான்.

முதல் பாதியில் 4 கோல்கள்

இதன்பிறகு ஹிந்துஸ்தானின் ஜெரிஸ் ஒரு வாய்ப்பை கோட்டைவிட, இந்தியன் வங்கியும் ஒரு கோல் வாய்ப்பை கோட்டைவிட்டது. இடதுப் பகுதியில் இருந்த அந்த அணியின் ஜான், கோல் கம்பத்தின் முன்னால் நின்ற எட்வினுக்கு பாஸ் செய்தார். அவர் அதை நிறுத்தி ஸ்டிரைக்கர் கௌரி தாசனிடம் கொடுத்தார். மிக எளிதான அந்த வாய்ப்பில் சரியாக பந்தை உதைக்காமல் கோட்டைவிட்டார் கௌரி.

பின்னர் இந்தியன் வங்கி சில கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோதும், அதை கோலாக்க முடியவில்லை. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மிட்பீல்டில் இருந்து பந்தை கடத்திச் சென்ற ஹிந்துஸ்தான் “ரைட் விங்கர்” பி.கார்த்திக், கோல் கம்பத்துக்கு முன்னால் இருந்த ஸ்டீபனுக்கு “பாஸ்” செய்தார்.

ஆனால் ஸ்டீபன் முன்னேறி செல்வதற்குள் பந்து அவரைக் கடக்க, இடது முனையில் இருந்து முன்னேறி வந்த ஜி.கார்த்திக் அதிரடியாக பந்தைத் திருப்பி கோலாக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்த சென்னை லீக்கில் முதல் பாதி ஆட்டத்திலேயே 4 கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டம் இதுதான்.

ஜான் 2-வது கோல்

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் இந்தியன் வங்கிதான் ஆதிக்கம் செலுத்தியது. இதனிடையே ஹிந்துஸ்தான் மத்திய நடுகள வீரர் சேனாவின் கோல் வாய்ப்பை அற்புதமாகத் தகர்த்தார் இந்தியன் வங்கி கோல் கீப்பர் அஜ்மல்.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய அடுத்த 15 நிமிடங்களில் இந்தியன் வங்கி அணியில் எட்வினுக்குப் பதிலாக ஸ்டெஜின் மாற்று வீரராக களம்புகுந்தார். இதன்பிறகு கோலடிப்பதில் தீவிரம் காட்டிய இந்தியன் வங்கி 67-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது. இடது மிட்பீல்டர் மெர்லின் கொடுத்த “பாஸில்” எவ்வித சிக்கலுமின்றி கோலடித்தார் ஜான்.

ஹிந்துஸ்தான் பின்கள வீரர்கள் சோலைமலை ராஜேஷ், ஷைன் ஜான் ஆகியோர் கோல் கம்பத்தின் அருகில் நின்றபோதும் ஜானை கோலடிக்க விடாமல் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்தியன் வங்கிக்கு 3-வது கோலே வெற்றிக் கோலாக அமைந்தது.

2-வது வெற்றி

இந்தியன் வங்கி அணியில் பின்களம், நடுகளம் என எல்லாமே வலுவாக இருந்தது. குறிப்பாக வேயன் டி சில்வா, ஹிந்துஸ்தானுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தார். ஆனால் ஹிந்துஸ்தான் அணியில் பின்களம் பலவீனமாக இருந்த நிலையில், மிட்பீல்டர்களும் முன்னேறி வந்து ஆடாதது பின்னடைவாக அமைந்தது. இந்தியன் வங்கி அணி அடித்த 3 கோல்களுமே எளிதான கோல்கள்தான்.

ஆனால் ஹிந்துஸ்தான் அடித்த இரு கோல்களுமே மிகத் துல்லியமான கோல்கள். அந்த அணியின் பின்களம் வலுவாக இருந்திருக்குமானால் போட்டியின் முடிவு ஹிந்துஸ்தானுக்கு சாதகமாக அமைந்திருக்கும்.

இந்த வெற்றியின் மூலம் தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள இந்தியன் வங்கி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியன் வங்கி தனது முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் சிட்டி போலீஸ் அணியைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்திருக்கும் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

சென்னை எப்.சி. வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்டார் ஜுவனைல் அணியைத் தோற்கடித்தது. அந்த அணியின் சந்தோஷ் 24 மற்றும் 51-வது நிமிடங்களில் கோலடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x