Last Updated : 20 Jan, 2016 08:51 PM

 

Published : 20 Jan 2016 08:51 PM
Last Updated : 20 Jan 2016 08:51 PM

என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனை: தோல்விக்கு பொறுப்பேற்கும் தோனி

கான்பெராவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியுற்றதற்குக் காரணம் தான் ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறியதுதான் என்று இந்திய அணியின் கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவண் அவுட் ஆகும் போது 277/2 என்ற நிலையில் அதே ஓவரில் தோனி அவுட் ஆக, சிறிது நேரத்துக்கெல்லாம் கோலியும் அவுட் ஆக இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இது குறித்து தோனி கூறியதாவது:

என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. என்னுடைய ரோல் என்ன? அந்த நிலையிலிருந்து அணியை இறுதி வரை நின்று வெற்றிக்கு இட்டுச் செல்வதுதான். எனவே அந்தத் தருணத்தில் என்னுடைய விக்கெட் திருப்பு முனையானது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் என்னுடைய அவுட் மிக முக்கியமானதாகப் போய்விட்டது. ஆட்டத்தை வெற்றிக்கான முடிவை நோக்கி கொண்டு செல்வது என்னுடைய பொறுப்புதான்.

அழுத்தம் என்பது இப்படித்தான் செய்துவிடும். எனக்குப் பிறகு இறங்கியவர்களில் சிலர் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாதவர்கள். பெரிய ஷாட்களை ஆடலாம், அப்படி ஆடுவது சரிதான். ஆனால் இன்னும் கொஞ்சம் போட்டிகளில் இவர்கள் ஆடினால், பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதன் அவசியத்தை உணர்வார்கள். பிட்சின் தன்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கிய பிறகு பெரிய ஷாட்களை ஆடலாம்.

இளம் வீரர்கள் நிச்சயம் அனுபவத்தின் மூலம் முதிர்ச்சியடைவார்கள், இது அவர்கள் ஆடும் ஆரம்பக்கட்ட போட்டிகளே, ஆனால் அழுத்தம் என்றால் என்னவென்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

ரஹானே காயமடைந்ததும் ஒரு காரணியே. அவருக்கு கையில் தையல் போட வேண்டியதாயிற்று, மரத்துப் போகும் மருந்தும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அவர் கைகளில் உணர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பின்னால் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

3-0 தோல்விக்குப் பிறகு மீண்டும் எழுச்சியுறுவது கடினம் என்றனர். ஆனால் இந்தப் போட்டியில் சாதனை வெற்றியைப் பெறும் அளவுக்கு ஆடினோம். டி20 கிரிக்கெட்டில் எப்படி ஆடுவோம் என்பதை இன்றைய ஆட்டம் அறிவிப்பதாக உள்ளது.

நிச்சயமாக நாங்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளோம். நான் அவுட் ஆவதற்கு முன்பாக பேட்டிங் சிறப்பாக இருந்தது. இது 46-47 ஓவர்களில் முடிந்திருக்க வேண்டிய போட்டி, இதை இப்படித்தான் அணுக வேண்டும், எதிர்மறைக்கூறுகளை யோசித்து அதில் மூழ்கிவிடக்கூடாது” என்றார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற கேன் ரிச்சர்ட்சன் கூறும்போது, கடந்த முறை இதே மைதானத்தில் இதே போன்ற ஒரு ரன் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்காவும் இதே போன்றுதான் ஆடினர், அப்போதும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை ஒரு விக்கெட் விழுந்தால் நிச்சயம் ஏதாவது செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அன்று ஆம்லா விக்கெட்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா சரிந்து தோல்வி தழுவியது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x