Last Updated : 14 Jul, 2015 02:01 PM

 

Published : 14 Jul 2015 02:01 PM
Last Updated : 14 Jul 2015 02:01 PM

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.

மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்தத் தடை காரணமாக, அடுத்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாட முடியாது.

இந்த தண்டனை, பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தனது பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு விவரம்:

பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் போட்டிகள், விவகாரங்கள் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், மற்றும் ராஜ் குந்த்ரா ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிரிக்கெட் விவகாரத்திலும் ஈடுபட இருவருக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் செயல்முறை பகுதியை வாசித்த நீதிபதி, மெய்யப்பன் செயல்பாடுகள் பற்றி கூறும்போது, “அவர் ஊழல்-தடுப்பு விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளார். ஐபிஎல் செயல்முறை விதிகளை மீறியுள்ளார். ஒரு அணியின் அதிகாரியாக, விளையாட்டில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை குருநாத் மெய்யப்பன் கடைபிடிக்கவில்லை” என்றார்.

மேலும், குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் இழந்திருக்கிறார். இது மிகவும் பயங்கரமான சூதாட்டப் பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அவர் தனது 40 வயதில், தான் செய்யும் செயல்களின் விளைவுகள் பற்றி அறியவில்லை என்றும், ஆட்டத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் தனக்கு தெரியாது என்றும் கூறலாகாது.

அதே போல் ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மீதான தடை உத்தரவு பற்றி கூறும்போது, குந்த்ரா தான் பிரிட்டன் குடிமகன் என்கிறார். மேலும் சூதாட்டம் இங்கு சட்டவிரோதமானது என்று தனக்கு தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. "உண்மையில் ஆட்டத்தை நேசிப்பவராக அவர் இருந்தால் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தீர்ப்பில், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா செய்த தவறுகள், விதிமீறல்கள் பிசிசிஐ-யின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தவறுகள் இவர்களுடன் மட்டும் நின்று போய் விடுவதில்லை என்பதால் இவர்கள் சார்ந்த அணியையும் அதன் உரிமையாளரையும் தடை செய்ய வேண்டியுள்ளது.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் காலவரிசை:

மே, 16, 2013, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கல், ஸ்ரீசாந்த், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் சூதாட்டம் தொடர்பாக பிடிபட்டனர்.

மே, 24, சூதாட்ட குற்றச்சாட்டில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 2: என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

அக்.8 : நீதிபதி முத்கல் தலைமையிலான விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டது.

பிப்.10, 2014: விசாரணைக் குழு சூதாட்டத்துக்காக மெய்யப்பன் மீது குற்றஞ்சாட்டியது.

ஏப்.22. விசாரணையை கமிட்டி தொடருமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நவ. 17: வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதை சீனிவாசன் புறக்கணித்துள்ளார் என்று விசாரணைக்குழு குற்றம்சாட்டியது.

ஜனவரி 22, 2015, சூதாட்ட நடைமுறைகளை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், மேலும் முறைகேடுகளை மறைக்க முயன்றதாகவும், விசாரணைக்குழுவை திசை திருப்பியதாகவும் சீனிவாசன் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியது.

ஐபிஎல் ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதி முகுல் முத்கல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறும்போது, "இது ஒரு வலுவான தண்டனைதான். இது மிகவும் சரியானதுதான். கிரிக்கெட் ஆட்டத்தை சுத்தப்படுத்துவதில் இத்தகைய தண்டனைகள் நீண்ட காலம் தன் பங்களிப்பை ஆற்றும். பொதுமக்கள் நம்பிக்கையும் தக்கவைக்கப்படும். ஒருநபர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை பாயும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஒரு சிறு குறிப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் அந்த அணியை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடத்த முடியாது. எனவே இந்தியா சிமெண்ட்ஸ், மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் அணிகளான முறையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமைதாரர் தகுதியை கைவிட்டால், மற்றவர்கள் இந்த அணியை வாங்கி விளையாடச் செய்ய வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x