Published : 13 Sep 2014 04:46 PM
Last Updated : 13 Sep 2014 04:46 PM

500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு ஒரு வரலாற்று கணமாகும்.

ஆனால் இந்த வரலாற்றுக் கணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் விளையாட முடியாமல் போயுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது.

இங்கிலாந்துக்கு எதிரான 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்ல் நூனெஸ். இந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் வெற்றி: பிப்ரவரி 26, 1930ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹெட்லியின் இரண்டு சதங்கள் மூலம் ஜார்ஜ்டவுனில் இங்கிலாந்தை 289 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

3W's என்று அழைக்கப்படும் வொரல், வீக்ஸ், வால்காட் ஆகியோர் 1948ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியைக் கலக்க வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன்சி செய்த முதல் கறுப்பரின வீரர் ஜார்ஜ் ஹெட்லி ஆவார். இவரது தலைமையில் இங்கிலாந்தை 2-0 என்று வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

1948ஆம் ஆண்டு எவர்ட்டன் வீக்ஸ் 5 டெஸ்ட் சதங்களை தொடர்ந்து எடுத்தது இன்றளவும் சாதனையாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்

1958: கேரி சோபர்ஸின் 365 நாட் அவுட்: இந்த சதம் கேரி சோபர்ஸின் முதல் சதம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றினார்

கேரி சோபர்ஸ். சபைனா பார்க் மைதானத்தில் அவர் லென் ஹட்டனின் 364 ரன்கள் என்ற தனிநபர் சாதனையை முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார் சோபர்ஸ். 790 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி தழுவியது.

1959: உலகின் அதேவேகப் பந்து வீச்சாளர் வெஸ்லி ஹால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஹேட்ரிக் எடுத்து முதல் ஹேட்ரிக் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற சாதனையை நிகழ்த்துகிறார்.

1963இல் நடந்த பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவை. ஒரு ஓவர் மீதமுள்ளது. கை உடைந்த கிறிஸ் கவுட்ரி இறங்கினார். வெஸ்லி ஹால் காட்டுத் தனமாக வீசி வரும் நேரம். இங்கிலாந்து 2 ரன்களையே எடுக்க முடிந்தது, ஹாலால் கடைசி விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஆட்டம் டிரா ஆனது.

1975-76: உலக பேட்ஸ்மென்களை அச்சுறுத்திய 4 வேகப்புயல்களான ராபர்ட்ஸ், ஹோல்டிங், கிராஃப்ட், கார்னர் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் வருகின்றனர்.

டிசம்பர் 13, 1975: லில்லி, தாம்சன் போன்ற ஜாம்பவான்களை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் ராய் பிரெடெரிக்ஸ் 145 பந்துகளில் 169 ரன்களை பெர்த் மைதானத்தில் விளாச வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

கிளைவ் லாய்ட் தலைமையில் 1975, 1979 உலகக் கோப்பைப் போட்டிகளில் மேற்கிந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 70களின் மத்தியில் தொடங்கிய ஆதிக்கம் 80கள் இறுதிவரையிலும் அதன் பிறகும் ஓரளவுக்கு நீடித்தது. கடைசியாக 90களில் சரிவு ஏற்பட்டு கடைசியாக 1995-இல் பெர்த்தில் பெற்ற வெற்றியுடன் மேற்கிந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இன்று அது நல்ல நிலையில் இல்லை.

இடையில் விவ் ரிச்சர்ட்ஸிற்குப் பிறகு பிரையன் லாரா வந்து கலக்கினார். சந்தர்பால் அயராது இன்னமும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக போராடி வருகிறார். உலக கிரிக்கெட்டிற்கு அரிய பவுலர்களையும் அசத்தலான பேட்ஸ்மென்களையும் வழங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தனது பழைய ஆதிக்கத்திற்கு இனி திரும்புமா?

இன்று 500வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது வெஸ்ட் இண்டீஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x