Published : 18 Sep 2014 03:03 PM
Last Updated : 18 Sep 2014 03:03 PM

பந்து வீச்சிற்கான ரன் அப் ஆரம்பித்த பிறகு பவுலரை மாற்ற முயன்ற தோனி

பொதுவாக அடுத்த ஓவரை யார் வீசுவது என்பதை கேப்டன்கள் முன்கூட்டியே தீர்மானித்து விடுவார்கள். ஆனால் தோனி இதற்கும் விதிவிலக்கு.

பவுலர் பந்து வீசுவதற்கான ரன் அப் தொடங்கிய பிறகு அவரை நிறுத்தி வேறொரு பவுலரை வீசக்கூறினார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி.

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு நேற்று கொல்கத்தா அணியின் ஆந்த்ரே ரசல் தனது அதிரடி மூலம் அதிர்ச்சி அளித்தார்.

சென்னை இன்னிங்சின் போது கொல்கத்தா வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஒரு பந்தை தோனிக்கு மட்டையில் சிக்காதவாறு வீச நடுவர் வைடு என்று அறிவித்தார். ஆனால் அது வைடு அல்ல. இதனால் ஆத்திரமடைந்த கவுதம் கம்பீர் நடுவரிடம் கையை ஆட்டி பயங்கரமாக சத்தம் போட்டார்.

நடுவர் அவரிடம் ஏதோ கெஞ்சும் பாவனையில் கூற முயன்றார். லட்சம் ரசிகர்கள் பார்க்கும் ஒரு சர்வதேச அளவிலான போட்டியில் நடுவரை ஒரு கேப்டன் பகிரங்கமாக வசைபாடுவதன் அநாகரிகம் பற்றி கம்பீர் அறியவில்லை. வர்ணனையாளர்களும் கம்பீரின் இந்தச் செயலைக் கண்டிக்காமல் ‘கம்பீர் மிகவும் தீவிரமானவர்’, ‘அவர் அப்படித்தான் கடினமாக தனது கிரிக்கெட்டை ஆடுகிறார்’, ‘ஆக்ரோஷமான அணுகுமுறை’ என்று பாராட்டித் தள்ளினர்.

இது ஒரு புறமிருக்க கொல்கத்தா தனது 158 ரன்கள் இலக்கைத் துரத்தக் களமிறங்கிய போது, சென்னை பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா 2 விக்கெட்டுகளைச் சாய்க்க கொல்கத்தா 10/2 என்று ஆனது.

அப்போது 3வது ஓவரை வீச மோகித் சர்மா வந்தார். பந்தை எடுத்துக் கொண்டு ரன் அப் செய்யவும் தொடங்கிவிட்டார். ஆனால் 'உள்ளுணர்வு’ அறிவுறுத்துவதன் பேரில் கேப்டன்சி செய்து வருவதாகக் கூறப்படும் தோனி, மோகித் சர்மாவின் ஓட்டத்தை நிறுத்தி பந்தை ஈஷ்வர் பாண்டேயிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் நடுவர் சரியாகத் தலையிட்டு இந்த நிலையில் பவுலரை மாற்ற முடியாது, மோகித் சர்மாவே தொடர வேண்டும் என்றார். அங்குதான் தோனியின் அதிர்ஷ்டம் இருக்கிறது. மோகித் சர்மா பந்தை யூசுப் பத்தான் ஆடி டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நடுவர் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x