Published : 25 Sep 2018 01:58 PM
Last Updated : 25 Sep 2018 01:58 PM

தோனி புதிய மைல்கல்லை எட்டுவாரா?: சச்சின், டிராவிட், கங்குலி சாதனையை நெருங்கினார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு நாள் போட்டியில் புதிய மைல்கல்லைஎட்டுவதற்கு இன்னும் 95 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், ஆசியக் கோப்பைப் போட்டியில் அதைஎட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்களை எட்டிவிட்டார் என்பதுஅனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த 10 ஆயிரம் ரன்களில் 174 ரன்கள் ஆசிய லெவன் அணிக்கு எதிராகச் சேர்க்கப்பட்டவை, ஆதலால் இந்த ரன்களை அவர் சர்வதேச அணிகளுக்கு எதிராக சேர்க்கப்பட்ட ரன்கள் என்ற முழுமையான ரன்கணக்கில் சேர்க்க முடியாது.

அவரின் முழுமையான ரன்கணக்கில் சேர்க்க வேண்டுமெனில் அதாவது 10 ஆயிரம் ரன்களை எட்ட வேண்டுமெனில் இன்னும் தோனிக்கு 95 ரன்கள் தேவைப்படுகிறது.

தோனி 95 ரன்களைச் சேர்த்துவிட்டால், 10 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது இந்திய வீரர் எனும் பெருமையைப்பெறுவார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டி சாதனையைச் செய்துள்ளனர்.

ஆனால், ஆசியக்கோப்பைப் போட்டி தொடங்கியதில் லீக் போட்டிகள் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் தோனி நிலைத்து ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவண் நிலைத்து ஆடி இந்திய அணியை பைனல்வரை கொண்டுவந்து விட்டனர்.

ஹாங்காங் அணிக்கு எதிராக டக் அவுட்ஆகிய தோனி, வங்கதேசம் அணிக்கு எதிராக 33 ரன்களில்ஆட்டமிழந்தார். அதன்பின் நடந்த போட்டியில் தோனிக்கு பேட் செய்ய போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்னும் இந்திய அணிக்கு இரு போட்டிகள் மட்டுமே இருப்பதால், 95 ரன்களை தோனி அடைந்துவிடுவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி தற்போது 505-வது சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர் எனும் பெருமையை தோனி பெற்றுள்ளார். சச்சின் 665 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x