Last Updated : 26 Sep, 2018 07:37 AM

 

Published : 26 Sep 2018 07:37 AM
Last Updated : 26 Sep 2018 07:37 AM

விராட் கோலி, மீராபாய்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் அர்ஜூனா விருதுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்ளிட்ட 20 பேர் தேர்வாகி இருந்தனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், விராட் கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். இருவருக்கும் விருதுடன், சான்று மற்றும் பரிசுத் தொகையாக ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டது. விழாவில் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, தாய் சரோஜ் கோலி, மூத்த சகோதரர் விகாஷ் ஆகியோருடன் கலந்துகொண்டார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்ற 3-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் (1997-ம் ஆண்டு), மகேந்திர சிங் தோனி (2007-ம் ஆண்டு) ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதை வென்ற மற்றொரு நபரான பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, இந்த ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இம்முறை கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகியிருந்தார்.

விழாவில் அர்ஜூனா விருது மற்றும் துரோணாச்சார்யா விருது, தயான் சந்த் விருது ஆகியவையும் வழங்கப்பட்டன. அர்ஜூனா விருதை நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ் (தடகளம்), ஷிக்கி ரெட்டி (பாட்மிண்டன்), சதிஷ் குமார் (குத்துச்சண்டை), ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்), சுபாங்கர் சர்மா (கோல்ஃப்), மன்பிரீத் சிங், சவிதா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ராகி சர்னோபத், அங்குர் மிட்டல், ஸ்ரேயாஷி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா, சத்யன் (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), சுமித் (மல்யுத்தம்), பூஜாகதியான் (வூஷூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மனோஜ் சர்க்கார் (பாரா பாட்மிண்டன்) ஆகியோர் பெற்றனர். இதில் ஸ்மிருதி மந்தனா, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளதால் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர்.

குட்டப்பா (குத்துச்சண்டை), விஜய் சர்மா (பளு தூக்குதல்), ஸ்ரீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்), சுக்தேவ் சிங் பானு (தடகளம்), கிளாரன்ஸ் லோபோ (ஹாக்கி), தாராக் சின்ஹா (கிரிக்கெட்), ஜீவன் குமார் சர்மா (ஜூடோ), வி.ஆர்.பீடு (தடகளம்) ஆகிய 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், சத்ய தேவ் பிரசாத் (வில்வித்தை), பாரத் குமார் ஷேத்ரி (ஹாக்கி), பாபி அலோசியஸ் (தடகளம்), சவுகலே டடு தத்தாத்ரே (மல்யுத்தம்) ஆகி யோருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டது. அர்ஜூனா, துரோ ணாச்சார்யா, தயான் சந்த் விருதை பெற்றவர்களுக்கு சான்று மற்றும் பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x