Published : 22 Sep 2018 10:10 AM
Last Updated : 22 Sep 2018 10:10 AM

கடும் நெருக்கடி கொடுத்து அச்சுறுத்திய ஆப்கான்: பல கேட்ச்களை விட்டும் பாகிஸ்தான் ‘எஸ்கேப்’ வெற்றி

அபுதாபியில் நேற்று நடைபெற்ற மற்றொரு சூப்பர் 4 ஆட்டத்தில் ஆப்கான் அணி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது, ஆனால் பாகிஸ்தான் கடைசியில் பரபரப்பான முறையில் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றியை ஈட்டி கிரேட் எஸ்கேப் ஆனது.

டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் அஷ்கர் ஆப்கான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், பிறகு ஹஷ்மதுல்லா ஷாகிதியுடன் (97 நாட் அவுட்) இணைந்து 94 ரன்கள் முக்கிய கூட்டணி அமைக்க ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இது சவாலான இலக்காகும். பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டிய போது 194/4 என்று 42வது ஓவரில் இலக்கை நோக்கி திணறி வந்தது, ஆனால் ஷோயப் மாலிக் 51 ரன்கள் எடுக்க அந்த அணி 49.3 ஓவர்களில் 258/7 என்று போராடி வெற்றி பெற்றது. ரஷீத் கான் மீண்டும் சிறப்பாக வீசி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆப்கன் அணி செய்த பெரிய தவறு அனுபவமற்ற அஃப்தாப் ஆலமிடம் கடைசி ஓவரை கொடுத்தது. மாறாக அங்கு அனுபவமிக்க ஷோயப் மாலிக் கிரீசில் நிற்கிறார், கடைசி 5 பந்துகளில் 10 ரன்கள் தேவை, ஏனெனில் முதல் பந்தை மாலிக் அடிக்காமல் விட்டு விட்டார். ஆனால் அடுத்த பந்தை ஷார்ட் ஆக வீச சற்றே வேகம் குறைந்த பந்தாகவும் போக ஷோயப் மாலிக் விடுவாரா, டீப் ஸ்கொயர் லெக் மேல் சிக்சர் பறந்தது. நல்ல பந்து அல்ல.

அடுத்த பந்து யார்க்கர் முயற்சி செய்தார், ஆனால் லெக் ஸ்டம்பில் ஓவர் பிட்ச் ஆக ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார் ஷோயப் மாலிக், 43 பந்துகளில் அரைசதம், அதைவிட முக்கியம் கிரேட் எஸ்கேப், பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அப்தாப் ஆலம் முகத்தை கைகளால் மூடிக் கொண்டார்.

இலக்கை விரட்டும் போது பாகிஸ்தானுக்கு பேரடியாக ஃபகர் ஜமான் டக் அவுட் ஆனார். முஜீப் உர் ரஹ்மான் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஆனால் ரிவியூ செய்திருந்தால் அது நாட் அவுட், அது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து அது. அதன் பிறகு பாபர் ஆஸம் (66 ரன்கள் 94 பந்து 4 பவுண்டரி 1 சிக்ஸ்), இமாம் உல் ஹக் (80 ரன், 104 பந்துகள் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸ்) இணைந்து 2வது விக்கெட்டுக்காக 154 ரன்களைச் சேர்த்தனர்.

முதலில் இமாம் உல் ஹக், பாயிண்டில் தட்டி விட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால் ஆப்கான் வீரர் நஜ்புல்லா பந்தை எடுத்து ஓட்டத்திலேயே த்ரோ செய்ய ரன்னர் முனையில் நேரடியாக ஸ்டம்பைத் தாக்க ரன் அவுட் ஆனார். 4 ரன்கள் சென்ற பிறகு 66 ரன்கள் எடுத்த பாபர் ஆஸம், ரஷீத் கானின் லெக் பிரேக் பந்தில் பீட்டன் ஆக பந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல ஷஸாத் ஸ்டம்ப்டு செய்தார். 3வது நடுவருக்குச் சென்ற தீர்ப்பாகும் அது.

158/3 என்ற நிலையில் ஆப்கான் கண்களில் ஒளி தெரிந்தது. ஹாரிஸ் சொஹைல் (13), ஷோயப் மாலிக் இணைய ஸ்கோர் 194 ரன்களுக்கு வந்தது. ஆனால் ஹாரிஸ் சொஹைல் அப்போது முஜீப் கூக்ளிக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் சர்பராஸ் அகமது 8 ரன்களில் குல்பதின் நயீபின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய புல்டாஸில் பவுல்டு ஆனார். ஆசிப் அலி அடுத்ததாக ரஷீத் கான் பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேற 46.3 ஓவர்களில் 226/6 என்று பாகிஸ்தான் தடுமாறியது. மொகமது நவாஸ் 1 சிக்சருடன் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ரஷீத் கானிடம் பவுல்டு ஆக பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் 242/7 என்று தோல்வி பயம் கண்டது, ஆனால் ஷோயப் மாலிக் கடைசியில் எல்லோர் ஓவரும் முடிய அப்தாப் ஆலமின் அனுபவமின்மையை தன் அனுபவத்தினால் முறியடித்து வெற்றி பெறச் செய்தார். முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்கள் 33/2, ரஷீத் கான் 46/3.

பாகிஸ்தானின் மோசமான பீல்டிங், ஷாகிதி, கேப்டன் அஷ்கரின் அபாரக் கூட்டனி:

 

shakidijpg100 

முன்னதாக பாகிஸ்தான் பந்து வீசிய போது பீல்டிங் அதற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. ஷாஹீன் அப்ரீடி முதல் ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இவர் பந்து வீச்சில் 3 கேட்ச்கள் விடப்பட்டன, இவரே 2 கேட்ச்களை விட்டார். 10 ஓவர்கள் 38 ரன்கள் 2 விக்கெட். ஆனால் நல்ல ஊடுருவும் பந்துகளை வீசும் திறமை கொண்டவர் என்பது தெரிகிறது. மொத்தம் 5 கேட்ச்கள் முக்கியத் தருணங்களில் ட்ராப்.

ஆப்கான் அணி மொகமது ஷஜாத், இஷானுல்லா மூலம் மந்தமான தொடக்கம் கண்டு 9 ஓவர்களில் 26 ரன்கள்தான் எடுத்தது. ஷஜாத் 20 ரன்களிலும் இஷானுல்லா 10 ரன்களிலும் வெளியேற 31/2 என்ற நிலையில் ரஹ்மத் ஷா (36), ஷாகிதி இணைந்து 63 ரன்கள் கூட்டணி அமைத்தனர். அப்போது மொகமது நவாஸிடம் ரஹ்மத் ஷா வெளியேற ஸ்கோர் 94/3 என்று இருந்தது. அதன் பிறகு கேப்டன் அஷ்கர் ஆப்கான், ஷாகிதியுடன் இணைந்து மேலும் 94 ரன்களைச் சேர்த்தனர். ஆக 31/2 என்பதிலிருந்து 180/3 என்று உயர்ந்தது ஆப்கான்.

ஹசன் அலி, ஷாகிதியை நோ-பாலில் பவுல்டு செய்து வீணாக்கினார். கடைசி ஓவரில் 13 ரன்களை விளாசினாலும் ஷாகிதியினால் சதம் அடிக்க முடியவில்லை 97 நாட் அவுட் என்று இருந்தார்.

வெற்றிக்காகப் போராடிய வகையில் ஆப்கான் இன்று உணர்வு ரீதியாக வென்றதாகவே கருதப்படலாம். பாகிஸ்தான் அணி கேட்ச்களைக் கோட்டைவிட்டு, மிஸ்பீல்ட் செய்து கடைசியில் இமாம் உல் ஹக், பாபர் ஆஸம், ஷோயப் மாலிக் ஆகியோரால் எஸ்கேப் வெற்றியைத்தான் பெற முடிந்தது, ஷோயப் மாலிக் ஆட்ட நாயகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x