Published : 19 Jun 2019 06:51 PM
Last Updated : 19 Jun 2019 06:51 PM

‘உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்’ - வங்கதேசத்தைக் கண்டு பீதியில் ஆஸ்திரேலிய அணி விவாதம்

ஷாகிப் அல் ஹசன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் ஆடிய இன்னிங்ஸ் அடுத்ததாக வங்கதேசத்துடன் மோதும் ஆஸ்திரேலிய அணியை பீதியில் தள்ளப்போக, ‘ஷாகிப் அல் ஹசன் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்’ என்ற அளவுக்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தரப்பில் விவாதங்கள் கிளம்பியுள்ளது.

 

அதே வேளையில் உ.கோப்பைக்கு முன்பாக வங்கதேச ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம், வெறும்  பாடி லாங்குவேஜ்தான் உள்ளுக்கு ஒண்ணுமில்லையப்பா என்று வடிவேலு பாணியில் பின் வாங்கினார் கேப்டன் மோர்டசா. ஆனால் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்க வெற்றிகளுக்குப் பிறகு ‘நாகின் டான்ஸ் கும்பல்’ மீண்டும் வாயைத் திறந்து உதார் விடத் தொடங்கியுள்ளது.

 

அதுவும் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை என்று வங்கதேச ‘ஆல்ரவுண்டர்’ ஷாகிப் அல் ஹசன் சூளுரைத்து ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார். இளம் கன்று பயமறியாது என்கிறார் ஷாகிப் அல் ஹசன்.

 

மே.இ.தீவுகள் அன்று வீசிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் அல்லது ஷார்ட் பிட்ச் பந்துகளில் மட்டும் வங்கதேசம் 150 ரன்களுக்கும் மேல் குவித்ததாக கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

பாகிஸ்தான் அணியை விடவும் வலுவாக உள்ளது வங்கதேசம், அணி ரீதியாக பேப்பரில் பாகிஸ்தான் நல்ல அணிதான் ஆனால் அந்த அணியை நல்ல முறையில் வழிநடத்தும் கேப்டன் அங்கு இல்லை.

 

மேலும் ஷாகிப் அல் ஹசன் தன்னை 5ம் நிலையிலிருந்து 3ம் நிலைக்கு களமிறங்க உயர்த்துமாறு கோரினார். அதிலும் அவர் வெற்றி கண்டார்.

 

அன்று உலகக்கோப்பையில் ஆசிய நாடு ஒன்றின் சாதனை விரட்டலை தன் 124 ரன் அதிரடி இன்னிங்சினால் சாதித்தார். இரண்டு சதங்கள் 75 மற்றும் 64 ஆகிய ஸ்கோர்களும் ஷாகிப் பேட்டிங் ரன் எண்ணிக்கைகளில் அடங்கும்.

 

இந்நிலையில் ஜஸ்டின் லாங்கர் ஆஸி. ஊடகம் ஒன்றிற்கு கூறும்போது, “ஷாகிப் அல் ஹசன் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று கருதுகிறேன், இடது கை ஸ்பின்னும் அவரது கைவசம் உள்ள ஒரு ஆயுதமாகும். எங்களிடம் அவரை வீழ்த்த திட்டம் உள்ளன, ஆனால் அவர் நன்றாக ஆடுகிறார். நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்றே நான் அவரைக் கருதுகிறேன். அது ஆச்சரியமானதல்ல, அவர் நல்ல கிரிக்கெட்டர்” என்றார்.

 

இதுவரை 19 போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே வங்கதேசம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அது 2005-ல் கார்டிப்பில் நடந்த போட்டி, அன்று ஆஸி. வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் ‘நெற போதை’யில் வந்ததில் ஆஸ்திரேலிய அணியின் கவனம் சிதறி சின்னாபின்னமானது.

 

20ம் தேதி, வியாழனன்று ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x