Last Updated : 15 Jun, 2019 01:14 PM

 

Published : 15 Jun 2019 01:14 PM
Last Updated : 15 Jun 2019 01:14 PM

நானும், பாக். வீரர் யூசுப்பும் முள் கரண்டியுடன் அடிதடியில் இறங்கினோம்: நினைவுகளைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங்

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் போது ஹர்பஜன் சிங்கும், பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப்பும் சாப்பிடும்முள் கரண்டியுடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. சென்சூரியன் நகரில் நடந்த அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சச்சின் சிறப்பாக தொடக்கம் அளித்து 98 ரன்களில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 50, திராவிட்44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து 6 விக்கெட்டில் அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்தப் போட்டியின் போது நடந்த சம்பவத்தை ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டித்தொடர், செஞ்சூரியன் நகரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் போட்டியில் என்னை அணியில் சேர்க்கவில்லை. என்னைக் காட்டிலும் அணில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

போட்டி தொடங்கும் அன்று மதியம் சாப்பிடுவதற்காக நான், ஸ்ரீநாத், கும்ப்ளே, ராகுல் திராவிட் அனைவரும் மேஜைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மேஜையின் மறுபுறம் பாகிஸ்தான் வீரர்கள் முகமது யூசுப், ஷோயிப் அக்தர், சயித் அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

நான்  நகைச்சுவையுடன் பேசத் தொடங்கினேன். மறுமுனையில் அக்தரும், முகமது யூசுப்பும் பஞ்சாபி மொழியில் ஏதோ பேசினார்கள். எனக்கு அவர்கள் பேசியது புரிந்தது. முதலில் என்னைப் பற்றி முகமது யூசுப் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். பின்னர் என் மதத்தைப் பற்றி விமர்சித்தார்.

இதனால் ஆத்திமரமடைந்த நான் யூசுப்பின் காலைப் பற்றி இழுத்தேன். அவரும் என் காலைப் பிடித்து இழுக்க இருவரும் எழுந்தோம். சாப்பிடப் பயன்படும் முள்கரண்டியை கையில் எடுத்துக்கொண்டு முகமது யூசுப்பை நோக்கி நகர்ந்தேன். அவரும் முள்கரண்டியை எடுத்து என்னை நோக்கி நகர்ந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வாசிம் அக்ரம், சயித் அன்வர் ஆகியோர் முகமது யூசுப்பைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். என்னை திராவிட்டும், ஸ்ரீநாத்தும் அமைதியாக அமர வைத்தனர். இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அப்போது திராவிட்டும், ஸ்ரீநாத்தும், யூசுப் பேசியது தவறானது, இது சரியான நடத்தை அல்ல என்று எச்சரித்தார்கள்.

அதன்பின் 16 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நானும், முகமது யூசுப்பும் சந்தித்தபோது, இந்தச் சம்பவத்தை நினைத்து சிரித்தோம்.

களத்துக்கு வெளியே பாகிஸ்தான் வீரர்களுடன் நாங்கள் நட்புறவோடு இருப்போம். குறிப்பாக எனக்கு அக்தரிடமும், அப்ரிடியிடமும் நல்ல நட்பு உண்டு. நாங்கள் பஞ்சாபி மொழில் பேசிக்கொள்வோம். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம். இசை, இலக்கியம், புத்தகம் குறித்து அதிகமாகப் பேசி இருக்கிறோம்.

ஆனால், மைதானத்தில் பவுண்டரி கோட்டைக் கடந்துவிட்டால் நாங்கள் இருவரும் வேறு, வேறு. நட்பைத் தூக்கி முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டுத்தான் களத்தில் நுழைவோம்''.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x