Published : 27 Jun 2019 07:45 PM
Last Updated : 27 Jun 2019 07:45 PM

கோலி அபார ஆட்டம்; டாட் பால்களை ஈடுகட்ட கடைசி ஓவரில் ஸ்ட்ரைக் ரேட்டை தேற்றிய தோனி அரைசதம்: இந்திய அணி 7 விக் இழப்புக்கு 268 ரன்கள்

மான்செஸ்டரில் நடைபெறும் உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது.

 

இந்த ரன் எண்ணிக்கையை வெஸ்ட் இண்டீஸ் அணி சுலபமாக விரட்டி விட முடியாது என்றாலும் அதிரடி வீரர்கள் வரிசை கொண்ட அணியில் அன்று பிராத்வெய்ட் நியூஸிக்கு எதிராக ஆடியது போல் ஒரு வெறிகொண்ட இன்னிங்ஸையோ, கெய்லுக்கு ஆட்டம் பிடித்தாலோ இந்திய அணி மைதானம் நெடுக ஓட வேண்டியதுதான், அதனால்தான் 300 பிட்ச் என்றால் அதில் 300 ரன்களை எடுக்க வேண்டும். 163 டாட்பால்களை இந்திய அணி விட்டதால் 300 வாய்ப்பு இல்லாமல் போனது.

 

ராகுல் 64 பந்துகளில் 48 ரன்களையும் விராட் கோலி 82 பந்துகளில் 8 அருமையான பவுண்டரிகளுடன் 72 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 46 ரன்களையும் தோனி தொடக்கத்தில் தடவு தடவென்று தடவி, ஷார்ட் பிட்ச் பந்துகளையெல்லாம், புல்டாசையெல்லாம் ஒன்று டாட் பால்களாகவோ அல்லது சிங்கிளாகவோ ஆடி வெறுப்பேற்றி கடைசியில் ஒஷேன் தாமஸ் ஒரு ஓவரை படுமோசமாக ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீச 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்து தோனி 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 56 ரன்களில் முடிந்து தனது தொடக்க சொதப்பல்களுக்கு ஒப்பேற்றிக் கொண்டார்.

 

இதில் ஷேய் ஹோப் மிக மோசமாக ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார். இது தோனிக்குச் சாதகமாக அமைந்தது.  268 ரன்கள் வெற்றி ரன்களாக இருக்கலாம் ஆனால் 300 ரன்கள் சென்றிருக்க வேண்டிய ரன் எண்ணிக்கையை ‘இதுதான் நான் நினைக்கும் இலக்கு’ என்று ஆட ஒருவருக்கும் உரிமையில்லை.

 

ஆனாலும் இந்தக் கடைசி ஓவர் சிக்சர்கள் மற்றும் பவுண்டரி வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாக இருக்க வாய்ப்புள்ளது. மொத்தம் 163 டாட்பால்களை இந்திய அணி விட்டுக் கொடுத்தது இதில் 32 ரன்களை எடுத்திருந்தாலே 300 ரன்கள் என்ற வெற்றி ஸ்கோரை எடுத்திருக்கும்.

 

கேதார் ஜாதவ் அவுட் ஆன பிறகு விராட் கோலி களத்தில் இருந்த போது 32 பந்துகளைச் சந்தித்த தோனி 20க்கும் மேற்பட்ட டாட்பால்களை விட்டுக் கொடுத்து 17 ரன்களை மட்டுமே எடுத்ததாலும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாமல் தோனி ஆடியதாலும் 24 பந்துகள் பவுண்டரியே வரவில்லை. இதில் கோலி வெளிப்படையாகவே அதிருப்தி அடைந்திருந்தார்.

 

அதன் பிறகு 39வது ஒவரில் விராட் கோலி., ஹோல்டர் வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே பிட்ச் ஆன பந்தை மிக பிரமாதமாக மிட் விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பி பவுண்டரி வறட்சியை நீக்கினார், ஆனால் அடுத்த பந்தே அரைக்குழி ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடுகிறேன் என்று சர்க்கிளுக்குள்ளேயே பிராவோவிடம் கேட்ச் கொடுத்து 72 ரன்களில் வெளியேறினார்.

 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 20,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்தார்.

 

தொடக்கத்தில் ரோஹித் சர்மா 1 பவுண்டரி ஒரு அரக்க புல்ஷாட் சிக்ஸ் மூலம் 18 ரன்கள் எடுத்து இன்சைடு எட்ஜில் அருமையான ரோச் பந்துக்கு வெளியேறினார், ரிவியூவில்தான் அவுட் கொடுக்கப்பட்டது, ஆனாலும் ரோஹித்திற்கு திருப்தி இல்லை.

 

விராட் கோலி, ராகுலுடன் இணைந்தார், ஆனால் ஜேசன் ஹோல்டர் இருவருக்கும் மிக அருமையாக வீசினார் இருவருக்கும் மெய்டன்களை வீசி 5 ஒவர்களில் 5 ரன்கள் என்று மிகப்பிரமாதமாக வீசினார். கிமார் ரோச், ஹோல்டர் டைட்டாக வீச ஸ்பின்னர் ஆலனும் கட்டுப்படுத்த ராகுலும் கோலியும் 14 ஒவர்களில் 69 ரன்களையே சேர்க்க முடிந்தது அப்போது ராகுல் முன்னால் நன்றாக முன்னால் வராமல் ஷார்ட் பிட்ச் பவுலிங்கினால் ஏற்பட்ட சந்தேகத்தினால் புல் லெந்த் பந்தில் ஹோல்டரிடம் பவுல்டு ஆனார்.

 

விஜய் சங்கர் பாசிட்டிவாக ஆடி 19 பந்துகளில் 14 ரன்களை எடுக்க கேதார் ஜாதவ் 7 ரன்களை எடுக்க இருவரையும் கிமார் ரோச் வீழ்த்தினார். 28.5 ஒவர்களில் 140/4 என்று இருந்த போது  தோனி இறங்கினார். 10 ஒவர்களில் 40 ரன்களே வந்தது. இதுதான் பெரிய கேள்வி. ஏன் அப்படி ஆட வேண்டும்? கோலி இருக்கும் போது ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், இல்லையெனில் அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க வேண்டும். ஆனால் அடிப்பதில்லை. ஏன்? தோனியிடம் யாராவது கேட்டுச் சொல்லுங்கள். ஆனால் அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்காமல் எதிர்முனையில் இருக்கும் கோலியையும் வெறுப்பேற்றுவது ஏன் என்று புரியவில்லை. கோலி 72 ரன்களில் மிட்விக்கெட்டில் அரைக்குழி பந்தை கேட்ச் கொடுத்துச் சென்றார், காரணம் அவரது ரிதம் தோனியின் மந்தமான பேட்டிங்கினால் கெட்டுப் போனதே.

 

கடைசியில் ஹர்திக் பாண்டியா இறங்கி 5 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க கோலி அவுட் ஆன பிறகு 10 ஓவர்களில் தோனியும், பாண்டியாவும் 70 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இதன் மூலம் 250 ரன்கள் வந்தது, இந்த 70 ரன்கள் கூட்டணியில் 46 ரன்களை பாண்டியா எடுத்தார்.

 

கடைசி ஓவரை ஒஷேன் தாமஸ் மவுட்டீகமாக ஷார்ட் பிட்ச் ஆக வீச தோனி திடீர் எழுச்சியில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடிக்க ஸ்கோர் 268 ஆனது.

 

கிமார் ரோச் 10 ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சிறந்த பந்து வீச்சாளர் ஹோல்டர் 10 ஓவர் 2 மெய்ட்ன 33 ரன்கள் 2 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ஆலன் 52 ரன்கள் விக்கெட் இல்லை, பிராத்வெய்ட்  3 ஓவர் 33 ரன்கள் விக்கெட் இல்லை. ஒஷேன் தாமஸ், பிராத்வெய்ட் 10 ஓவர்களில் சேர்ந்து 96 ரன்களை கொடுத்ததே இந்திய அணி இந்த ரன் எண்ணிக்கையை எட்ட ஏதுவாக அமைந்தது.

 

ஆனாலும் மே.இ.தீவுகள் அணி 269 ரன்களை எட்டுவது கடினமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x