Last Updated : 23 Jun, 2019 02:23 PM

 

Published : 23 Jun 2019 02:23 PM
Last Updated : 23 Jun 2019 02:23 PM

சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா? பாக்.பிரதமரின் உதவியாளரை கிண்டலால் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

சச்சின் டெண்டுல்கருக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாமல் புகைப்படத்தைப் பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளரை நெட்டிசன்கள் கிண்டலாகவும், மீம்ஸ் மூலமும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தனி உதவியாளர் நீம் உல் ஹக். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருகிரிக்கெட் வீரரின் பழைய படத்தைப் பதிவிட்டு, இவர்தான் இம்ரான் கான் கடந்த 1969-ம் ஆண்டு எடுக்கப்பட்டபுகைப்படம் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், உண்மையில் அது இம்ரான் கானின் சிறுவயது புகைப்படம் இல்லை. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது புகைப்படம் எனத் தெரியாமல் பதிவிட்டு, அவர்தான் இம்ரான் கான் என்று அவரின் உதவியாளர் பெயர் சூட்டிவிட்டார்.

இந்தப் பதிவு ட்விட்டரில் வந்தபின் நெட்டிசன்கள் இம்ரான் கான் உதவியாளரைக் கிண்டல் செய்தும், கலாய்த்தும், மீம்ஸ்களை வெளியிட்டும் கடும் ரகளை செய்துவிட்டனர். இம்ரான் கானுக்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் வித்தியாசம் தெரியாத பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் என்று கிண்டல் செய்தனர்.

நெட்டிசன் ஒருவர் விராட் கோலியின் சிறுவயது புகைப்படத்தைப் பதிவிட்டு, "இதுதான் இம்சமாம் உல் ஹக்-1976-ம் ஆண்டு எடுக்கப்பட்டது" என்று கிண்டல் செய்துள்ளார்.

மற்றொருவர் தோனியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதுதான் பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் ஆண்டு 2007 என்று பதிவிட்டுள்ளார்.

யூனுஸ்கான், முகமது யூசுப் ஆகியோரின் புகைப்படத்தைப் பதிவிட்ட ஒருவர் இதுதான் சச்சின், வினோத் காம்ப்ளி 1982-ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்று பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளரைக் கிண்டல் செய்தனர்.

இந்தி திரைப்படம் 'லகான்' திரைப்படத்தின் ஒரு காட்சியைப் பதிவிட்ட ஒருவர் இவர்கள்தான் ஜோஸ் பட்லர், அஸ்வின். 1980-ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்று ட்வீட் செய்திருந்தார்.

சிறுகுழந்தை கொட்டாவி விடும் புகைப்படத்தைப் பதிவிட்டு, இவர் யார் தெரியுமா பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது என்று கிண்டல் செய்திருந்தனர்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசியின் புகைப்படத்தைப் பதிவிட்டு இவர்தான் சயித் அன்வர் என்று பகடி செய்திருந்தார்கள்.

சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் அடையாளம் தெரியாமல் புகைப்படத்தைப் பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர் நெட்டிசன்களிடம் படாதபாடு படுகிறார்.

தவறுதலாக யாருடைய புகைப்படத்தையும், யாராகவோ சித்தரித்து வெளியிட முடியுமா என்று கேட்டு, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x