Last Updated : 15 Jun, 2019 04:18 PM

 

Published : 15 Jun 2019 04:18 PM
Last Updated : 15 Jun 2019 04:18 PM

வீழாத இந்தியா; வரலாற்றை மாற்றவிடாத கோலி படை; போராடும் பாகிஸ்தான்: நாளை பரபரப்பான மோதல்

உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டரில் மைதானத்தில் ஞாயிறன்று நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றும் தீர்மானத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

ஆனால், இதுவரை 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து  2015-ம் ஆண்டு வரையிலான 6 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானால் வீழ்த்த முடியாத அணியாகவே இந்திய அணி வலம் வருகிறது.

6 முறை தோல்வி அடையாமல் இருக்கும் நம்பிக்கையே  சாதனையை தக்கவைக்க இந்திய அணிக்கு தூண்டுகோலாக அமையும்.  ஆனால், அதை முறியடிக்க பாகிஸ்தானும் கடுமையாக முயற்சிக்கும்.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய வலிமையான அணிகளை வீழ்த்திய இந்திய அணிக்கு , நியூஸிலாந்துடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால், 5 புள்ளிகளுடன் இந்திய அணி உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி 2 தோல்விகள், மழையால் ஆட்டம் ரத்து என 3 புள்ளிகளுடன் உள்ளது.

இரு நாடுகளும் கடந்த 2012-13-ம் ஆண்டுக்குப்பின் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாத காரணத்தால், இரு அணிகளின் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் நுணுக்கங்களை அறிந்திருக்க வாய்பில்லை. இன்றைய தொழில்நுட்பத்தின்படி வீடியோவில் ஆய்வு செய்திருக்கலாம் என்றாலும் நிதர்சனத்தில் இல்லை.

 குறிப்பாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அதிகமாக சந்தித்திருக்க மாட்டார்கள்.

அதேபோல பாகிஸ்தானின் ஷாகின் அப்பிரிடி, இமாத் வாசிம் உள்ளிட்டோரின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சந்தித்து இல்லை. பாபர் ஆசம், பக்கர் ஜமான்,இமாம் உல் ஹக், ஆகியோரின் பேட்டிங் எவ்வாறு இருக்கும் என்பதும் இந்திய பந்துவீச்சாளர்களுக்குத் தெரியாது. ஆதலால், இரு அணி வீரர்களுக்கும் பந்துவீச்சும், பேட்டிங்கும் புதுவிதமான அனுபவத்தையே தரும்

கடந்த கால உலகக்கோப்பை வரலாற்றைப் பார்க்கும்போது இந்திய அணிக்கே அனைத்தும் சாதகமாக இருந்துள்ளது. நடப்பு தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்திலும் பாகிஸ்தானைக் காட்டிலும் வலிமையாகவே இந்திய அணி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக காகிதத்தில் மட்டுமல்ல, களத்திலும் இந்திய அணி விராட் கோலி தலைமையில் பல வெற்றிகளைப் பெற்று வருகிறது. இந்த தன்னம்பிக்கை தரும் மனநிலையே இந்தியஅணி தொடர்ந்து முன்னேற துணை  புரியும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் காயத்தால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாத சூழல் பாதிப்பாக இருந்தாலும், அவரின் இடத்தை கே.எல்.ராகுல் நிரப்புவார் என்று நம்பலாம். ரோஹித் சர்மாவுடன் இணைந்து ராகுல் நல்லதொரு தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இது தவிர விராட் கோலி, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா என வலிமையான பேட்ஸ்மேன் இருப்பது பலமாகும். வழக்கமான ஆட்டத்தைக் காட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்று வந்துவிட்டால் நமது வீரர்களுக்கு உற்சாகம் வந்துவிடும்.

அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி கடந்த உலகக் கோப்பையில் அடித்த சதத்தை இன்னும் பாகிஸ்தான் அணியினர் மறந்திருக்க மாட்டார்கள். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டிணத்தில் தோனி அடித்த 148 ரன்கள் பேரிடியாக்தான் இருந்திருக்கும். ரோஹித் சர்மாவு பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய அளவுக்கு ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. மற்ற வகையில் பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் இந்த உலகக் கோப்பை புதிதானதானதுதான்.

இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன், நெருக்கடியை சமாளித்து விளையாடும் திறமை ஆகியவற்றுக்காக  அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படலாம். அல்லது கூடுதலாக பந்துவீச்சாளர் தேவை என்றால் விஜய் சங்கர் தேர்வு செய்யப்படலாம்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக ஆடக்கூடியவர்கள் என்பதால், சாஹல், குல்தீப் யாரேனும் ஒருவர் நீக்கப்பட்டு முகமது ஷமி அழைக்கப்படலாம்.

பந்துவீச்சில் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் கூட்டணி சர்வதேச அளவில் அணிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. அதிலும் பும்ராவின் வேகப்பந்துவீச்சு பாகிஸ்தானின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் கிலியாகத்தான் இருக்கும்.

இதுதவிர குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் சந்தித்து இல்லை என்பதால் வித்தியாசமான அனுபவத்தையே தரும்.

இந்திய அணிக்கு வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் வேகப்பந்துவீச்சு தொடக்கத்தில் சிறிய பிரச்சினையை உருவாக்கலாம் என்பதால் கவனத்துடன் விளையாட வேண்டும்.

அதேசமயம், பாகிஸ்தான் அணி வரலாற்றை முறித்து, 27 ஆண்டுகளில் முதல் வெற்றியைப் பெற கடுமையாக முயற்சிக்கும். 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நினைவை மனதில் வைத்து மட்டும பாகிஸ்தான் களமிறங்க வேண்டும்.

மற்ற வகையில் இந்திய அணியை வீழ்த்தியதாக எந்தவகையிலும் பாகிஸ்தான் அணி பெருமை கொள்ள முடியாது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த முகமது அமீர் இருப்பதும், அனுபவம் வாய்ந்த ஷோயிப் மாலிக் இருப்பதும் பக்கபலமாக இருக்கும். வகாப் ரியாஸ் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பக்கர் ஜமான், பாபர் ஆசம், ஆகியோரின் கூட்டணி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இவர்களை சமாளிக்க போதுமான திட்டங்களை இந்திய பந்துவீச்சாளர்கள் வகுக்க வேண்டும்.

கடந்த சில போட்டிகளைப் பார்த்தவகையில் பாகிஸ்தானின் பந்துவீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை, பீல்டிங்கில் படுமோசமாக இருந்தார்கள். குறிப்பாக முகமது அமீர், வகாப் ரியாஸ் தவிர பந்துவீச்சில் மற்றவர்கள் சுமார் ரகம்தான்.

இந்திய நேரப்படி போட்டி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x