Published : 26 Jun 2019 03:45 PM
Last Updated : 26 Jun 2019 03:45 PM

ஸ்டார்க்கைக் கண்டு மோர்கன் பயந்தார்- கெவின் பீட்டர்சன்; அப்படியா எனக்குத் தெரியவில்லையே: மோர்கன் கிண்டல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய சில நாட்களில் கெவின் பீட்டர்சன்  ‘இங்கிலாந்திடம் உலகக்கோப்பையை ஒப்படையுங்கள்’ என்றார். ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அடைந்த தோல்விகளை அடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தற்போது அந்தர்பல்ட்டி அடித்துள்ளார்.

 

இயன் மோர்கன் நேற்று ஸ்டார்க் பவுன்சருக்கு இரையாகி வெளியேறினார்.

 

இதனையடுத்து கெவின் பீட்டர்சன் தன் ட்வீட்டில், “ஓ! நோ! இயன் மோர்கன் பயந்து விட்டார்.  இது பயங்கர அறிகுறி” என்று கூறியிருந்தார்.

 

பிறகு இங்கிலாந்து 64 ரன்களில் தோல்வி அடைந்தவுடன் கெவின் பீட்டர்சன் தன் ட்வீட்டில், “ஸ்டார்க் முதல் பந்தை வீசும் போது மோர்கன் ஸ்கொயர் லெக் பக்கம் ஒதுங்கினார். இது எனக்கு இங்கிலாந்து அணி வரும் வாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையை நோக்கி என்னை சிந்திக்க வைக்கிறது. ஆனால் அப்படி ஆகாது என்று நம்புகிறேன், ஆனாலும் ஒரு கேப்டன் இவ்வளவு பலவீனம் காட்டியதை நான் சமீபமாகப் பார்க்கவில்லை” என்று மேலும் மோர்கனைச் சீண்டினார்.

இது குறித்து மோர்கனிடம் செய்தியாளர்கள் பிற்பாடு கேட்ட போது புன்னகையுடன், “அப்படியா? எக்செலண்ட், நான் அப்படி உணரவில்லை. தன்னம்பிக்கையில் கொஞ்சம் அடி விழுந்தது உண்மைதான்.

 

ஆனால் ஓய்வறையில் ஒருவரையும் இது ஒன்றும் செய்யவில்லை. வழக்கமாக நாங்கள் தோல்வியடையும் போது என்ன செய்வோம், எதனை இதுவரை நன்றாகச் செய்தோமோ அதனை மீண்டும் செய்வோம் அப்படித்தான் ஞாயிறு அன்று போட்டிக்கு நாங்கள் தயாராகிறோம்” என்றார்.

 

500 அடிப்போம், ஆயிரம் அடிப்போம் என்று தங்களைத் தாங்களே கொம்பு சீவி விட்டுக் கொண்ட இங்கிலாந்து தற்போது அரையிறுதிக்குத் தகுதி பெறுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் தோல்விகள் மற்ற அணிகளின் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

 

அடுத்த 2 போட்டிகள் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடன். இது நிச்சயம் கடினம். ஆகவே ஸ்டீவ் வாஹ் தீர்க்க தரிசி போல் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்று கூறியதுதான் நடந்து விடுமோ என்று இங்கிலாந்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x