Published : 22 Jun 2019 07:25 am

Updated : 22 Jun 2019 08:14 am

 

Published : 22 Jun 2019 07:25 AM
Last Updated : 22 Jun 2019 08:14 AM

ஹீரோ மலிங்கா, மேத்யூஸ்: 12 ஆண்டு வரலாற்றை தக்கவைத்த இலங்கை: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சித் தோல்வி; அரையிறுதி செல்லுமா?

12

அனுபவம் மிக்க மலிங்காவின் பந்துவீச்சு, டிசில்வாவின் திருப்புமுனை விக்கெட், மேத்யூஸின் அரைசதம் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இ்லங்கை அணி.

 

உலகக்கோப்பைப் போட்டி இப்போதுதான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான புள்ளிகள் வித்தியாசம் ஒரு புள்ளியில் இருப்பதால், அடுத்தடுத்து போட்டிகளின் வெற்றி, தோல்விகள் சுவாரஸ்யமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

 

முதலிடத்தில் உள்ள ஆஸி.10 புள்ளிகள் இருக்கும் நிலையில் முறையே நியூஸி(9), இங்கிலாந்து(8), இந்தியா,(7), இலங்கை(6), வங்கதேசம்(5) என ஒரு புள்ளி இடைவெளியில் செல்கிறது. “கரணம் தப்பினால் மரணம்” என்ற கணக்கில் கத்தி மீது நடப்பதுபோன்று வரும் போட்டிகள் அணிகளுக்கு அமையும். இங்கிலாந்து அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வி தழுவினால் நிச்சயம் பெரிய சிக்கல்தான். மேலும் எதற்கெடுத்தாலும் 500 அடிப்போம் 600 அடிப்போம் என்று இறுமாப்பில் பேசி வந்தவர்களுக்கு இலங்கை பேரிடியை இறக்கியுள்ளது.

 

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு232 ரன்கள் சேர்த்து. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணஇ 47ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

கடந்த ஆட்டத்தில் பாவம் புள்ளபூச்சி அணியான ஆப்கானி்ஸ்தானை கதற, கதற அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 397 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் 232 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் தடுக்கிவிழுந்துவிட்டது. கடந்த 10 போட்டிகளாக தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தவந்த இங்கிலாந்துக்கு இந்த தோல்வி பேரதிர்ச்சிதான்.

அதுமட்டுமல்ல கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து (2007,2011,2015) இலங்கை அணியிடம் தொடர்ந்து இங்கிலாந்து 4-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. 12 ஆண்டுகள் வரலாற்றை இலங்கை அணி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

 

இதைக்காட்டிலும் முக்கியமான விஷயம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பதுதான். இங்கிலாந்துக்கு அதற்குரிய திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.ஆனால், வரலாறு மீண்டும் உண்மையாகிவிடக்கூடாது.

 

என்னவென்றால், கடந்த 27 ஆண்டுகளாக உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை இங்கிலாந்து வென்றதே இல்லை. இந்த சூழலில் அடுத்து இங்கிலாந்து அணி, இந்த 3 அணிகளுடன்தான் மோதப்போகிறது முடிவுகள் எப்படி அமையுமோ….

 

இலங்கை அணியினர் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்கள். தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா தான் வழக்கமாக நிலைத்து ஆடுவார்கள் ஆனால், நேற்று அவர்கள் ஏமாற்றம் அளிக்க நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நம்பி்க்கை அளித்தார்கள்.

 

பெர்ணான்டோ(49), மெண்டிஸ்(45), மேத்யூஸ்(85) ஆகியோர் அடித்த ஸ்கோர்தான் ஒரளவுக்கு அணியை கவுரவமான எண்ணிக்க பெறவைத்தது.

 

ஆனால், குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு வலிமையான இங்கிலாந்து அணிைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தொடக்கத்திலேயே பேர்ஸ்டோ விக்கெட்டை எடுத்து மலிங்கா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து கடைசிவரை மீளவில்லை என்றே சொல்லலாம்.

 

குறிப்பாக மலிங்கா மீண்டும் தான் “மேட்ச்வின்னர்”, “மாஸ்டர்கிளாஸ்” பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டா். பேர்ஸ்டோ, ஜோ ரூட், வின்ஸ், பட்லர் ஆகிய 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவானார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

 

மலிங்காவுக்கு துணையாக பிரதீப், உதனாவின் பந்துவீச்சும் அமைந்தது. மோர்கனை அபாரமான கேட்சால் வீட்டுக்கு அனுப்பிய உதனா, கடைசிநேரத்தில் மார்க்உட் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்த பிரதீப், சுழற்பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்திய டி சில்வா ஆகியோரும் வெற்றிக்கு துணை செய்தார்கள். ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றிதான் இது.

இங்கிலாந்தின் அசுரத்தனமான ஃபார்ம் முன் இலங்கை எங்கே வெல்லப்போகிறது என நினைத்தவர்களின் முகத்தில் இந்த வெற்றி அறையாக விழுந்துள்ளது. அரையிறுதி வாய்ப்பை கெட்டியாக பிடித்துள்ளது இலங்கை அணி. அடுத்து மேற்கிந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுடன் இலங்கை மோத உள்ளது.

 

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை அதீத தன்னம்பிக்கையால் தோற்றார்களா என்ற கேள்வி எழுகிறது. தொடக்கத்தில் பேர்ஸ்டோ விக்கெட்டை இழந்ததில் இருந்தே மற்ற வீரர்கள் தங்களின் வழக்கமான “அட்டாக்கிங் கேம்” விளையாடுவதில் இருந்து தவறிவிட்டார்கள். பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கோட்டை விட்டது.

 

இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு விக்கெட் வீழ்ந்ததைப் பார்த்தால், இலங்கை வைத்த பொறிக்குள் சரியாகச் சிக்கிவிட்டதையே காட்டுகிறது. மலி்ங்கா எடுத்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் திட்டமிட்டு பீல்டிங் செட் செய்து விக்கெட்டை வீழ்த்தினார்.

 

அதுமட்டுமல்லாமல் திடீரென விக்கெட் சரிவைச் சந்தித்தவுடன் பதற்றத்தில் எவ்வாறு விளையாடுவது எனத் தெரியாமல் இங்கிலாந்து வீர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து தென் ஆப்பிரிக்காவைப் போல் “சோக்கர்ஸ்(chockers) ஆகிவிட்டார்களா என்ற சந்ேதகத்தை எழுப்புகிறது.

 

கடைசிநேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அணிய வெற்றியை நோக்கி நகர்த்தியது அருமை. சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை ஸ்டோக்ஸ் நிரூபித்தார். ஆர்ச்சர், மார்க் உட் இருவரையும் வைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால் ஆர்ச்சரின் தேவையற்ற “லாங் ஆன்” ஷாட்டால் வெளியேறினார்.

 

ஆனால், பிரதீப்பின் 47-வது ஓவரில் ஸ்ட்ரைக்கை கடைசிப் பந்தில் மார்க் உட்டிடம் வழங்காமல் ஸ்டோக்ஸ் இருந்திருந்தால், முடிவு தலைகீழாக மாறி இருக்கும். ஸ்டோக்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருப்பார்.

 

வெற்றிப் படிக்கட்டில் பயணித்து வந்த இங்கிலாந்துக்கு இ்ந்த தோல்வி திடீர் சறுக்கலாக அமைந்துள்ளது. அரையிறுதிக்கான அடுத்த 3 போட்டிகளும் இங்கிலாந்துக்கு கத்திமேல் நடப்பது போன்றதுதான் என்பதில் சந்தேகமில்லை.

 

232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே அதிரடி வீரர் பேர்ஸ்டோவை எல்பிடபில்யு முறையில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தா். அடுத்துவந்த ரூட், வின்ஸுடன் இணைந்தார். வின்ஸின் பலவீனத்தை புரிந்து கொண்ட மலிங்கா தான் வீசிய 7-வது ஓவரில் ஸ்லிப்பில் பீல்டிங்கை நிறுத்தினார்.

 

கடைசிப்பந்தில் ஒரு லெக்-கட்டரை வீசியவுடன் வின்ஸ் அதை தேவையில்லாமல் தொட்டவுடன் மென்டிஸ் கைகளில் கேட்சானது. வின்ஸ் 14 ரன்னில் வெளியேறினார். 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் சேர்த்திருந்தது.

 

அடுத்துவந்த மோர்கன், ரூட்டுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்து விக்கெட்டை தக்கவைத்தனர். உதனா வீசிய ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து மோர்கன் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பட்லர் களமிறங்கினார்.

 

78 பந்துகளில் ரூட் அரைசதம் அடித்தார். நிதானமாக பேட் செய்துவந்த ரூட் 57 ரன்னில் மலிங்கா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆபத்தான ஜோஸ் பட்லரையும் 10 ரன்னில் மலிங்கா எல்பிடபிள்யு முறையில் வெளியேற்றினார். இதனால் 144 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

 

அடுத்துவந்த பென்ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து ஆட விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. மொயின் அலி் 16 ரன்னில் டிசில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிசில்வா வீசிய 31-து ஓவரில் கிறிஸ் வோக்ஸ்(2), ரஷித்(1) என விக்கெட்டுகள் சரிய 178 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சி்க்கியது.

 

விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்டோக்ஸ் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்னை உயர்த்திவந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வந்து ஸ்டோக்ஸுடன் சேர்்ந்தார். ஆர்ச்சரை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்ட ஸ்டோக்ஸ் ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார்.

 

ஆனால், உதானா பந்துவீ்ச்சில் தேவையில்லாமல் ஒருஷாட்டை லாங்-ஆன் திசையில் ஆர்ச்சர் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது. 3 ரன்னில் ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். 186 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

 

அடுத்துவந்த மார்க் உட், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். மார்க் உட்டுக்கு ஸ்ட்ரைக் வழங்காமல் ஸ்டோக்ஸ் ஆடினார். உதாானாவின் ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி 61 பந்துகளில் அரைசதம் அடித்தார் ஸ்டோக்ஸ். வெற்றியை நோக்கி மெல்ல அணியை நகர்த்தினார் ஸ்டோக்ஸ்

 

பிரதீப் வீசிய 47-வது ஓவரில் 2 பவுண்டரிகளை ஸ்டோக்ஸ் அடித்து ஒரு ரன் எடுத்து மார்க் உட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். 20 பந்துகளில் 21 ரன் தேவைப்பட்டது. ஸ்டோக்ஸ் இருக்கும் வரை வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது. கடைசிப்பந்தை மார்க்உட், கட் செய்ய முயல அது கீப்பர் பெரேராவிடம் கேட்ச்ஆனது.

 

47-ஓவர்களில் இங்கிலாந்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. ஸ்டோக்ஸ் 82ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், டிசில்வா 3 விக்கெட்டுகளையும், உதனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

 

முன்னதாக இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கருணா ரத்னே(1), பெரேரா(2)ஏமாற்றினர். நடுவரிசை வீரர்கள் பெர்னாண்டோ(49),மெண்டிஸ்(46) ஆகியோர் சிறப்பாக பேட் செய்து ஸ்கோர் செய்தனர். மேத்யூஸ் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவில் யாரும் பேட் செய்யவி்ல்லை. கடைநிலை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது

 

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்விஇலங்கை அபார வெற்றிகிரிக்கெட் உலகக்கோப்பை 2019லஷித் மலிங்காமேத்யூஸ் அபாரம்பென் ஸ்டோக்ஸ்மோர்கன்ICC Worldcup 2019: Malinga Mathews Stars as Srilanka Stuns big hitting England

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author