Last Updated : 15 Jun, 2019 03:47 PM

 

Published : 15 Jun 2019 03:47 PM
Last Updated : 15 Jun 2019 03:47 PM

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படுமா?

ஞாயிறன்று இந்த உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு உலகக்கோப்பையில் பெரிய கேள்வியே மழை வருமா, போட்டி நடக்குமா என்பது எல்லா போட்டிகளுக்கும் முன்பாகவும் அனைவரது கேள்வியாக இருந்து வருகிறது.

 

ஏனெனில் இந்த உலகக்கோப்பையில் ஏகப்பட்ட முக்கிய, ஆர்வமூட்டக்கூடிய போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது, இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூக்கி நிறுத்தும் போட்டியாகவும், டி.ஆர்.பி. ரேட்டிங் உள்ளிட்ட ஸ்பான்சர்கள் நல வணிக முன்னெடுப்புகளும் இந்தப் போட்டி குறித்த முஸ்தீபுகளை அதிகரித்துள்ளது.

 

அதுவும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு நடைபெற்றிருந்தால் ஷிகர் தவண் இல்லாத இந்திய அணியின் டாப் 3 எப்படி ஆடும் என்பதும் ஒரு சோதனைக்களமாகியிருக்கும், ஆனால் மழை வந்து ஒரு சிறந்த சவாலை காலி செய்து விட்டது.

 

குறைந்தது பாகிஸ்தான் அணி தோற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சவாலான ஆட்டத்தை ஆடி டச்சில் உள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக கிட்டத்தட்ட நேரடியாக இறங்கும் நிலையில் உள்ளது.

 

இந்நிலையில் ஞாயிறன்று இந்த ஆட்டம் என்றால், வெள்ளியன்று மான்செஸ்டரில் நல்ல மழை பெய்துள்ளது. பிட்ச் முழுதும் கவர் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மழை விட்ட பிறகு  பளீர் சூரிய வெளிச்சம் மைதானத்தை நனைத்தது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் லண்டன் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இந்திய-பாக் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

 

ஆனால் ஞாயிறு மதியம் சிறிய அளவில் மழை பெய்யலாம் என்று வானிலை முன்னறிவுப்பு கூறுகிறது. இதனால் ஆட்டம் சற்று பாதிப்படையலாம் என்றும் கூறப்படுகிறது.  இங்கிலாந்தின் வானிலையை குறிப்பாக கோடைக் காலங்களில் கணிப்பது கடினம் என்று வானிலை நிபுணர்கள் கருதுவதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அக்குவெதர் என்ற வானிலை முன்னறிவுப்பு இணையதளம் ஓல்ட் ட்ராபர்ட் நேரம் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மழை பெய்யும் என்று கணித்துள்ளது.  மேலும் நாள் முழுதும் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் வெப்ப அளவு நாள் முழுதும் 17 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும் என்றும் அக்குவெதர் கூறுகிறது. 

 

மேலும் மே 22ம் தேதி லங்காஷயர், வொர்ஸ்டர்ஷயர் உள்ளூர் போட்டிக்குப் பிறகு ஓல்ட் ட்ராபர்டில் எந்த போட்டியும் நடைபெறவில்லை என்பதும் இந்திய-பாகிஸ்தான் போட்டியின் வானிலை குறித்த ஐயங்களை எழுப்பியுள்ளது.

 

இது போக, கடந்த வாரத்தில் தினமுமே ஓல்ட் ட்ராபர்டில் மழை பெய்துள்ளது. அதனால் பிட்ச் கவருக்கு அடியில்தான் இருந்து வருகிறது. ஆகவே நாளை ஸ்விங் பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

 

ஐசிசியை இந்த மழைக்காக அனைவரும் விமர்சிக்க ஐசிசி-யோ சீசனல்லாத வானிலை எதிர்பாராதது என்று வானிலையைக்  கைகாட்டியுள்ளது.

 

எனவே நாளை இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள், போட்டியை நடத்தும் ஐசிசி என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x