Published : 14 Mar 2018 09:56 AM
Last Updated : 14 Mar 2018 09:56 AM

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் ஸ்ரீஜேஷ்- மூத்த வீரர் சர்தார் சிங் அதிரடி நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கோல்கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு மீண்டும் இடமளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்பிரீத் சிங் இந்த அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ல் நடந்த அஸ்லான் ஷா கோப்பைக்குப் பிறகு ஸ்ரீஜேஷ் காயமடைந்தார். இதையடுத்து அவர் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ளதன் மூலம் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், மலேசியாவில் நடைபெற்ற அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் சரியாக விளையாடவில்லை. இதனால் அவர் தனது இடத்தை இழந்துள்ளார்.

அதேவேளையில் அஸ்லான் ஷா போட்டியில் சிறப்பாக விளையாடிய ரமன்தீப் சிங் நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நியூஸிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் தில்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விவரம்

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ். சூரஜ் கர்க்கேரா.

தடுப்பாட்டம்: ரூபிந்தர் பால், ஹர்மன்பிரீத் சிங், வருண், கோதஜித், குரீந்தர், ரோஹிதாஸ்.

நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்கிளென்சனா சிங் (துணை கேப்டன்), சுமித், விவேக் சாகர் பிரசாத்.

முன்களம்: ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி. சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாயா., தில்பிரீத் சிங்.

பயிற்சியாளர்: ஜோயர்ட் மரிஜின். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x