Published : 26 Mar 2018 08:31 PM
Last Updated : 26 Mar 2018 08:31 PM

ஜெர்மனியிடம் 7-1 தோல்வி இன்னமும் எங்களை பேயாய் அச்சுறுத்துகிறது: பிரேசில் பயிற்சியாளர்

2014 உலகக்கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் பிரேசில் அணி தங்கள் சொந்த மண்ணில், தன் நாட்டு மக்கள் முன்னிலையில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் சின்னாபின்னமானது இன்னமும் தங்களை பேயாய் அச்சுறுத்தி வருகிறது என்று பிரேசில் பயிற்சியாளர் டைட் தெரிவித்துள்ளார்.

அன்று அந்த 6 நிமிடங்கள் ஒரு தேசத்தின் கனவு சிதைந்தது, ஒரு தேசமே கண்ணீர் விட்டு அழுததைப் பார்க்க அனைவருக்குமே மனத்தாங்கல் ஏற்பட்டது.

அந்த ஆட்டம் பற்றி தி இந்துவில் (தமிழ்) அப்போது எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி:

“இந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23வது நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரைமணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டை விட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிபேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டா டா காண்பிக்கவைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை.”

இன்று 2018 உலகக்கோப்பைக் கால்பந்து திருவிழா ரஷ்யாவில் தொடங்க கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரேசில்-ஜெர்மனி அணிகள் நட்பு ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியில் செவ்வாயன்று மோதுகின்றனர். 2014 சின்னாபின்னத் தோல்வியின் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்கிறார் பயிற்சியாளர் டைட்.

ஜெர்மன் இதழ் கிக்கருக்கு அவர் கூறும்போது, “அந்தத் தோல்வி (1-7 கோல்) மிகப்பெரிய உளவியல் அர்த்தம் கொண்டது, அது பற்றி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள இடமில்லை.

உலகக்கோப்பையில் சொந்த மண்ணில் 7-1 தோல்வி பேயாய் ஆட்டுகிறது. அது இன்னமும் பேசப்படுகிறது, மக்கள் இன்னும் அதை மறக்கவில்லை. எனவே இது வெறும் விளையாட்டுக்கான சவால் அல்ல, அதையும் தாண்டிய உணர்ச்சிகர சவால்.

எனவே நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்த தயாராகி வருகிறோம்.

2014 உலகக்கோப்பையின் அந்த அரையிறுதிப் போட்டியை நான் வீட்டிலிருந்து என் மனைவியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். 3வது கோல் விழுந்தவுடன் அவள் அழத்தொடங்கி விட்டாள். அந்த ஷாட் முதல் ஒவ்வொரு ஜெர்மனி ஷாட்டுமே கோல் ஷாட்தான். வீடியோ கேமில் கூட இப்படி நடக்காது.

துல்லியத்தை நோக்கிச் செல்லும் அணி அப்படி விளையாடும் தன்மை கொண்டதே, ஜெர்மனி அன்று அப்படித்தான் ஆடியது.

எனவே அந்தத் தோல்வியின் காயம் இன்னமும் திறந்துதான் உள்ளது. செவ்வாய் நடைபெறும் போட்டி அந்தக் காயத்தை மூடுவதற்கான தருணம்” என்றார் டைட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x