Published : 15 Mar 2018 03:07 PM
Last Updated : 15 Mar 2018 03:07 PM

அபராதம் பெற வெண்டுமென்று கால்பந்தாட்ட சேட்டையா?: ஸ்மித்தைக் கேலி செய்யும் ட்வீட்; மறுக்கும் பிலாண்டர்

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா அவருடன் உரசினார், இது சர்ச்சையாகி ரபாடாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்பட்டது, அவர் அதை மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்மித்தும் தவறிழைத்தவர்தான் என்கிற தொனியில் தென் ஆப்பிரிக்க மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் ட்விட்டர் கணக்கில் பதிவொன்று வெளியாக சர்ச்சை கிளம்பியது.

இதனையடுத்து பிலாண்டர் தன் ட்விட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்துள்ளனர், அதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அந்த பொய் ட்வீட்டை நீக்கிவிட்டு புதிய ட்வீட் செய்துள்ளார்.

பிலாண்டர் வெளியிட்டுள்ள மறுப்பில், “அனைவருக்கும் காலை வணக்கம், இன்று காலை ஏகப்பட்ட ட்விட்டர் பைத்தியக்காரத்தனத்தின் முன் கண் விழிக்க நேரிட்டது. என் கணக்கை யாரோ ஹேக் செய்து என் பெயரில் ஒரு சிறு பிரசுரம் வெளியிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அனைத்து நாடகங்கள் அல்லது பொழுதுபோக்குக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய முந்தைய ட்வீட்டில், “ஸ்டீவ் ஸ்மித் ரபாடாவுக்கு தோள் கொடுத்தார். ஸ்மித் இதனை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவரும் சரி சமமாக தவறிழைத்தவரே. அபராதம் பெறவேண்டுமென்றே கால்பந்து சேட்டைகளை முயற்சி செய்தாரோ??? நல்ல வேளை இதற்காக இடித்த பிறகு டைவ் அடிக்காமல் போனாரே” என்று கேலியாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது, பிலாண்டர் கணக்கில் வந்திருந்த இந்த ட்வீட்தான் சர்ச்சையாக அதற்கு ஹேக் செய்யப்பட்டதாக பிலாண்டர் விளக்கம் அளித்து தற்போது மேற்கூறிய ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x