Last Updated : 17 Mar, 2018 08:54 PM

 

Published : 17 Mar 2018 08:54 PM
Last Updated : 17 Mar 2018 08:54 PM

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் லீக் டி20 போட்டியில் குயிட்டா அணி பிரதானச் சுற்றுக்கு தகுதிபெற பீட்டர்சன் முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, பிரதானச் சுற்று போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. இந்நிலையில், பிரதானச் சுற்றுகளில் குயிட்டாஅணியில் விளையாடப் போவதில்லை எனவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பீட்டர்சன் ட்விட்டரில் , இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமாட்டேன், நன்றி எனத்தெரிவித்துள்ளார். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பீட்டர்சன் எழுதியுள்ளதில், ‘ உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் 4 ஆஷஸ் வெற்றிகள், ஒரு டி20 உலகக்கோப்பை வெற்றி, இந்தியாவை அவர்கள் நாட்டிலேயே தோற்கடித்தது, டெஸ்ட்போட்டி விளையாடுகளுடன் சதம் அடித்துவிட்டேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆதரவாகவும் எனது குடும்பத்தார் இருந்தற்கு நன்றியை தெரிவிக்கிறேன். இக்கட்டான தருணங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் எனக்கு ஆதரவு அளித்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உங்களை என் விளையாட்டால் மகிழ்ச்சிப்படுத்தி இருப்பேன். கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் ரசிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் முடிவை பாகிஸ்தான் லீக் அணியில் உள்ள குயிட்டா அணியும் வரவேற்றுள்ளது. அந்த அணியில் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் ‘ உங்களை குயிட்டா அணி மிகவும் இழக்கிறது. அனைத்துக்கும் நன்றி. பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்முடியும் வரை நீங்கள் தொடர வேண்டும். உங்கள் முடிவை மதிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி அந்த நாட்டுக்காக விளையாடி, ஓய்வு பெற்றவர் கெவின் பீட்டர்சன். ‘ஸ்விச் ஹிட்’ முறையை கிரிக்கெட்டில் பிரபலப்படுத்தியதில் பீட்டர்சனுக்கு முக்கியப் பங்காகும். அதாவது, வலதுகை பேட்ஸ்மேனான பீட்டர்சன் பந்துவரும்போது இடதுகை பேட்ஸ்மேன் பாணியில் அடித்து நொறுக்கி, பந்துவீச்சாளரை திணறடிப்பதுதான் ஸ்விச் ஹிட் முறைபேட்டிங்காகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்களில் ஒருநாள், டெஸ்ட், டி20 என 3 தரப்பு போட்டிகளிலும் அதிகமான ரன்கள் அடித்த 2-வது வீரர் பீட்டர்சன் ஆவார். இங்கிலாந்து வென்ற 4 ஆஷஸ் கோப்பைகளிலும் இவர் இடம் பெற்றுளார்.

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 8 ஆயிரத்து181 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 23 சதங்கள், 35அரைசதங்கள் அடங்கும். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 4ஆயிரத்து 440 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9சதம், 25 அரைசதங்கள் அடங்கும். 37 டி20 போட்டிகளில் விளையாடி, 1,176 ரன்களும் சேர்த்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியில் ஓரம் கட்டப்பட்டார் பீட்டர்சன். அப்போதே அனைத்து ஊடகங்களும் பீட்டர்சன் கதை முடிந்தது என எழுதின. இதையடுத்து உள்ளூர் போட்டிகளிலும், கிரி்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக இப்போது அறிவித்துள்ளார்.

பீட்டர்சன் முடிவை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் வரவேற்றுள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில்,’ பீட்டர்சன் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக முடித்துவிட்டீர்கள். இனிமேல் இருவரும் ஒரு கோப்பை தேநீரை சேர்ந்து குடிக்கலாம். சிறந்த பேட்ஸ்மேனான உங்களுடன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x