Published : 14 Mar 2018 05:19 PM
Last Updated : 14 Mar 2018 05:19 PM

பவுலர்கள் என்னை ‘ஒர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர்: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கவலை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சதமெடுக்கவில்லை. மாறாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம், டிவில்லியர்ஸ் சதம் எடுத்துள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் 900 தாண்டிய புள்ளிகளுடன் டான் பிராட்மேனை நெருங்கும் தருணத்தில் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இடது கை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்து வருகிறார், மஹராஜிடம் இருமுறை, டீன் எல்கரிடம் ஒருமுறை தவிர ரபாடாவிடம் ஒருமுறை வீழ்ந்துள்ளார், சதங்களுக்குப் பெயர் பெற்ற ஸ்மித் இன்னும் சதமெடுக்கவில்லை என்பது இந்தத் தொடரில் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வானொலி நிலையம் சென் என்பதற்கு பேட்டியளித்த ஸ்மித் கூறியதாவது:

இன்னும் இந்தத் தொடரில் நாங்கள் யாரும் சதமெடுக்கவில்லை. இது நல்லதல்ல. மிட்செல் மார்ஷ் சதமெடுக்கத் தகுதியானவர், பெரிய சதங்களை எடுத்தால்தான் அணிக்கு நல்லது.

துரதிர்ஷ்டவசமாக இந்தத் தொடரில் அவ்வாறான சதத்தை எங்களால் எடுக்க முடியவில்லை. அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்த நிலை மாறும்.

2014-லிருந்தே அதிகம் விளையாடி வருகிறேன். ஒரு அணிக்கு எதிராக அதிகம் ஆடும்போது அந்த அணி நம் நீக்குபோக்குகளை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டு விடுகிறது. இதனால் சில வேளைகளில் ரன் எடுக்க முடியாமல் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது, பவுலர்களும் எனக்கு எதிராக திட்டமிட்டு ‘ஒர்க் அவுட்’ செய்கின்றனர்.

இது எந்த ஒரு பேட்ஸ்மெனுக்கும் நடக்கக் கூடியதுதான். சில வேளைகளில் ரன்னுக்காக உண்மையில் கடுமையாகவே போராட வேண்டியுள்ளது. சில நாட்களில் விரைவாகக் குவிக்க முடிகிறது. இருந்தாலும் தொடர்ச்சியாக ஒரு விதமான பவுலிங்கில் ஆட்டமிழப்பது பற்றி கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்மித் ஒரேயொரு சதம் மட்டுமே எடுத்துள்ளார். 14 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்கள் மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x