Published : 15 Mar 2018 12:54 PM
Last Updated : 15 Mar 2018 12:54 PM

விராட் கோலியின் செயல்பாடு கோமாளி போல் இருந்தது: வம்பிழுக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்

 

தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலியின் செயல்பாடுகள் அனைத்தும் கோமாளியின் செயல்போல் இருந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ் வம்பிழுக்கும் வகையில் கருத்துதெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், காகிசோ ரபாடா ஆகியோருக்கு இடையே நடந்த மோதலோடு, விராட் கோலியின் செயல்பாட்டையும் இணைத்து பேசி பால் ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ஸ்மித் ஆட்டமிழந்து சென்றபோது, அவரின் தோள்பட்டையை இடித்துவிட்டு ரபாடா சென்றார். இதுதொடர்பாக ஐசிசியிடம் நடுவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரணை செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி போட்டி ஒழுங்கு விதிமுறைகளை ரபாடா மீறியது தெளிவாகத் தெரிகிறது. இதனால், அவருக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்தோடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டு தென் ஆப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

''சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது, அந்த அணியின் கேப்டன் விராட் கோலி செயல்பாடு குறித்து நடுவர்கள் ஐசிசியிடம் பல முறை புகார் தெரிவித்தனர். பிரிட்டோரியா நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, எதிரணி வீரர் ஆட்டமிழந்த போது, விராட் கோலி பந்தை தரையில் ஆவேசமாக வீசி எறிந்தது குறித்தும், பந்தை சேதப்படுத்தியதும் நடுவர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், பெயரளவுக்கு விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஒரு மைனஸ் புள்ளியும், 25 சதவீதம் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டது. அவரின் ஒழுங்கு குறைவான நடவடிக்கைக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால், ரபாடாவுக்கு 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலியின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு கோமாளியின் செயலைப் போல் இருந்தது.''

இவ்வாறு ஹாரிஸ் வம்பிழுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x