Published : 17 Mar 2018 05:17 PM
Last Updated : 17 Mar 2018 05:17 PM

இலங்கைக்கு எதிராக காட்டிய அதே ஆக்ரோஷம் இந்தியாவிடம் எடுபடுமா? நாளை இந்தியா-வங்கதேசம் இறுதியில் மோதல்

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 லீகில் சர்ச்சைக்குரிய விதங்களில் வாக்குவாதங்களில் ஈடுபட்டு ஆனாலும் தங்கள் உறுதியை விட்டுக் கொடுக்காமல் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது வங்கதேசம். இந்திய அணி சிலபல தொழில்நேர்த்தியற்ற கிரிக்கெட்டுக்குப் பிறகே தன்னம்பிக்கை அணியாகக் களமிறங்குகிறது.

சிறிய நாடாக இருந்தாலும் கிரிக்கெட் பித்துப் பிடித்த மக்கள் என்பதால் வங்கதேசம் தான் தோற்றால் அது எப்போதுமே புறக்காரணங்களினால்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்தான் போட்டிகளில் சில வேளைகளில் தொழில் நேர்த்தியில்லாமல் வாக்குவாதங்கள், சர்ச்சைகளில் ஈடுபடுவதும், எதிரணியினரின் வெற்றி குறித்து தத்துப் பித்து என்று பேட்டியளிப்பதையும் வங்கதேச வீரர்களும், கேப்டன்களும், அந்நாட்டு ஊடகங்களில் சிலவும் செய்து வருகின்றன.

2015 உலகக்கோப்பைக் கிரிக்கெட் காலிறுதியில் ரோஹித் சர்மாவுக்கு தாங்கள் கேட்ச் பிடித்த பந்தை நடுவர் எப்படி நோ-பால் சொல்லலாம் என்று இந்திய வெற்றியையே அதன் பிறகு இழிவு படுத்தி அதன் பயிற்சியாளரும் ஊடங்களும் பேசிவந்தனர். அது நோ-பால் என்பதற்கான தகுதியுடையது என்றாலும் நடுவர் தீர்ப்பு குறித்து சர்ச்சையைக் கிளப்புவது, எதிர்ப்பது நெருப்பில் கை வைப்பது போன்றது என்று தெரியாத சிறுபிள்ளைத் தனமான விளையாட்டில் அந்த அணி எப்போதும் இறங்குவதை நாம் பார்த்து வருகிறோம்.

இலங்கை அணிக்கு எதிராக யார் தூண்டினார்கள் என்று தெரியவில்லை, இதற்கு முந்தைய தொடரிலிருந்தே பாம்பு டான்ஸ் ஆடி கேலி செய்யும் போக்கை இரு அணிகளுமே கடைபிடித்தனர், நேற்றும் அதை வங்கதேசம் செய்து காட்டியது. இத்தகைய கோணங்கித் தனங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய கேப்டன், சூடாகும் தருணங்களில் சமாதானத் தூதராகச் செயல் படவேண்டிய கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் இத்தகைய சில்லுண்டித்தனங்களில் பங்கேற்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக பெரிய வைரி என்றெல்லாம் வங்கதேசத்தைக் கூற முடியாவிட்டாலும், 2007 உலகக்கோப்பையில் தோல்வி தழுவிய பிறகு, வங்கதேசத்தில் போய் தோனி தலைமையில் ஒருநாள் தொடரை இழந்த பிறகு இந்திய அணி வீரர்களை கேலியும் கிண்டலும் அவர்கள் செய்திருப்பதால் இந்திய ரசிகர்களுக்கு வங்கதேச அணி மீது ஒரு எரிச்சலும் கோபமும் உருவாகியிருப்பது தவிர்க்க முடியாததே. அதேபோல் வங்கதேச வீரர்களின் கருத்துக்கள் அந்நாட்டு ஊடகங்களின் பார்வைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு மனநிலையில் இந்திய அணி மீதும் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஒரு வெறுப்பு இருந்து வருவதும் தெரிகிறது. கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் பகைமை போல் இந்தியா-வங்கதேசப் பகைமையை உருவாக்க முடியாது, காரணம் அதற்கு வங்கதேச அணி தன் தரநிலையை இன்னும் எக்கச்சக்கமாக உயர்த்த வேண்டியுள்ளது, மேலும் இந்தியா, பாகிஸ்தான் பகைமை என்பது கிரிக்கெட்டையும் கடந்த வரலாறு கொண்டது.

இந்நிலையில்தான் ஏகப்பட்ட தகராறுகளுடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள வங்கதேச அணி, இந்திய அணியை தங்கள் ஆக்ரோஷம், சேட்டைகள் மூலம் சீண்டிப்பார்க்க ஆசைப்படும்.

ஆனால் வங்கதேச அணியினரின் இத்தகைய உற்சாக சேஷ்டைகளுக்கு இணையான கிரிக்கெட் திறன் அவர்களிடம் இருந்ததில்லை. ஆனாலும் அவர்கள் அபாய அணி என்ற தோற்றத்தை தங்களுக்கு அளித்துக் கொண்டுள்ளனர்.

ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா, சவுமியா சர்க்கார் ஆகியோர் பேட்டிங்கில் திறமைசாலிகள் என்றால், பவுலிங்கில் ரூபல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோரும் சிறந்தவர்களே. ஆனால் வங்கதேசத்தில் இந்தியா அளவுக்கு பவர் ஹிட்டர்கள் இல்லை. பீல்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியான தரத்தில் இல்லை. இதற்கு இந்திய அணியும் விதிவிலக்கல்ல, ஆனாலும் ரோஹித், ஷிகர் தவண், ரெய்னா ஆகியோருக்கு ஆட்டம்பிடித்தால் எந்தப் பந்துவீச்சுமே திண்டாடும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஷிகர் தவண் இந்தத் தொடரில் சுமார் 200 ரன்கள் பக்கம் எடுத்துள்ளார். ரோஹித் சர்மாவை அன்று பார்முக்குக் கொண்டுவந்தது வங்கதேசம் அதன் பலனை நாளை அவர்கள் அனுபவிக்கலாம். மஹ்முதுல்லா அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் இல்லாவிட்டாலும் மணீஷ் பாண்டேயின் திறமை வேறு ஒரு வகையானது.

பந்துவீச்சில் இந்திய அணி உண்மையில் சொல்லப்போனால் வாஷிங்டன் சுந்தர், சாஹலை நம்பியுள்ளது, ஏனெனில் ஷர்துல் தாக்குர் அன்று இலங்கையின் குசல் பெரேராவிடம் சாத்து வாங்கினார். ஆனால் அதன் பிறகு நன்றாக வீசினார். சிராஜ் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. விஜய் சங்கர் நன்றாக வீசுகிறார் ஆனால் அவருக்குக் கேட்ச் விட்டுக் காலி செய்தனர். ஜெயதேவ் உனாட் கட் அருமையாகவே வீசி வந்தார், ஐபிஎல் ஒப்பந்தம் ரூ.11.5 கோடிக்கு கிடைத்த பிறகே அவர் பந்துவீச்சில் கூடுதல் முயற்சி தெரியவில்லை, ரன்களை வாரி வழங்குகிறார். ஆனாலும் இந்தியப் பந்து வீச்சில் வெரைட்டி உள்ளது, வேகப்பந்து வீச்சாளர்களின் சில மாற்றுப் பந்து வீச்சு முறைகளும் எதிரணியினரை திணறடித்து வருகிறது.

பிட்ச் கடுமையாக மந்தமாக இருக்கும் என்பதால் அக்சர் படேலை அணிக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது. ரிஷப் பந்த்திற்கு இன்னொரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x