Last Updated : 26 Mar, 2018 12:21 PM

 

Published : 26 Mar 2018 12:21 PM
Last Updated : 26 Mar 2018 12:21 PM

பாடாய்படுத்தும் ‘பால்டாம்பரிங்’: ஸ்டீவ் ஸ்மித்தை ‘அசிங்கப்படுத்திய’ ஆஸ்திரேலிய ஊடகங்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் செயலை அந்த நாட்டு ஊடகங்கள் தலைப்புச் செய்தியில் பிரசுரித்து அசிங்கப்பட்டுத்தியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் மட்டுமல்ல, இனிமேல் எந்த ஆஸ்திரேலிய வீரரும் இதுபோன்ற காரியத்தை செய்ய துணியக்கூடாத அளவுக்கு செய்திகளில் வசைபாடியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் நடந்த ‘அசிங்கமான, கெட்டுப்போன கிரிக்கெட் கலாச்சாரம்’ என்று காரசாரமாக விமர்சனம் செய்துள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது. இந்த போட்டியலும் ஆஸ்திரேலிய அணி தார்மீக ரீதியான நம்பிக்கையை இழந்ததால், படுதோல்வி அடைந்தது.

பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஊடகங்கள் மத்தியில் ஒப்புக்கொண்டபின், அவரை அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக வசைபாடினார்கள். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவும், அணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். ஆனால், அவரிடம் இருந்து கேப்டன் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஸ்மித்துக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியத்தின் 100 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் நாளேடுகள் தலைப்புச்செய்தியாக ஸ்டீவ் ஸ்மித்தின் லீலைகளை குறிப்பிட்டு அசிங்கப்பட்டுதியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டு தேசிய விளையாட்டும் அதில், நடக்கும் தில்லுமுல்லு சம்பவங்களை அந்த நாட்டு ஊடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆதங்கத்தை கொட்டியுள்ளன.

தி ஆஸ்திரேலியன்

தி ஆஸ்திரேலியன் என்ற நாளேடு ‘ ஸ்மித்தின் அசிங்கங்கள்’ என்ற தலைப்பில் மிக மோசமாக வர்ணித்துள்ளது. ஸ்மித்தின் இந்த மோசடிச் செயல் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கால் ஷூ முதல் தலையில் அணியும் ஹெல்மெட் வரை பாதித்துவிட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் சதர்லாந்து 20 ஆண்டுகளாக அந்தபதவியில் இருந்தும், இதுபோன்ற கெட்டுப்போன கிரிக்கெட் கலாச்சாரத்தை ஒழிக்க அவரால் முடியவில்லை. சிறிய அளவில் மட்டுமே மாற்றம் கொம்டுவர முடிந்தது. இந்த அசிங்கமான செயலால், நாட்டுக்கு பெரிய அவமானமும், தலைகுணிவும் ஏற்பட்டுள்ளது.

இப்படிச் செய்வார்களா?

கிரிக்கெட் குறித்து எழுதிவரும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் பீட்டர் லாலர் குறிப்பிடுகையில், ஓய்வு அறையில் முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களா அப்படி இருந்திருந்தால், இதுபோன்ற கேவலமான வேலைகளை செய்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெய்லி டெலிகிராப்

‘சிட்னி டெய்லி டெலிகிராப்’ நாளேட்டின் விளையாட்டு ஆசிரியர் ராபர்ட் கிராட்டாக் குறிப்பிடுகையில், ஸ்மித்தின் செயல் என்பது அந்த நேரத்தில் எடுத்த பைத்தியக்கார முடிவு அல்ல. திட்டமிட்டு எடுக்கப்பட்ட முட்டாள்தன முடிவு. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒழுக்க நெறிகளை மீறி நடந்த சம்பவத்தால், கிரிக்கெட் உலகத்தின் முன் ஆஸ்திரேலியா தலைகுணிந்து நிற்கிறது.

ஸ்டீவ் ஸ்மித்தின் மரியாதை மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணியின் கண்ணியம், மரியாதையும் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு மீளப்போவதில்லை எனத் தெரிவித்தள்ளார்.

சிட்னி ஹெரால்டு

‘சிட்னி ஹெரால்டு’ நாளேடு குறிப்பிடுகையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சதிக்குள் விழுந்துவிட்டார். அந்த சதிக்குள் விழுந்ததற்கு தகுந்த விலையை இப்போது கொடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் மோசமானதாக அவப்பெயர் பெற்றுத்தரக்கூடியதாக அமைந்துள்ளது. ஒரு வீரரின் செயல்பாடு ஒட்டுமொத்த அணியின் மதிப்பையும் கெடுத்துவிட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தாழ்ந்துவிட்டது. இதை மீட்டெடுக்க நீண்ட காலம் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x