Published : 09 May 2019 09:09 PM
Last Updated : 09 May 2019 09:09 PM

அனுபவத்திற்கும் இளமைக்குமான போட்டி: தோனியின் சூட்சுமங்களை உடைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்?

ஐபிஎல் குவாலிஃபையர் 2வது நாக்-அவுட் ஆட்டத்தில் நாளை (10-5-19) விசாகப்பட்டினத்தில் அனுபவ கேப்டன், வீரர்கள் கொண்ட சிஎஸ்கே அணியை இளமை துள்ளலுடன் உள்ள ஷ்ரேயஸ் அய்யர் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் எதிர்கொள்கிறது.

 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசியில் ஒரு ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக் கனவுப்பிரதேசத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. கடினமான பாதையைக் கடந்து வந்து ‘சோக்கர்ஸ்’ என்று பெயர் எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் நேற்றும் ‘சோக்’ ஆகியிருக்கும். ஆனால் ரிஷப் பந்த் ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றிவிட்டார்.

 

சேப்பாக்கத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெல்லி அணியின் டாப் 2 இடங்களுக்குள் வரும் வாய்ப்பை சிஎஸ்கே மறுத்தது. இப்போதும் தோனி தலைமை அணி டெல்லி கேப்பிடல்ஸின் ஐபிஎல் இறுதிக்கனவின் பாதையில் வந்துள்ளது.

 

ரிஷப் பந்த் 21 பந்துகளில் நேற்று 49 ரன்கள் சேர்க்க சோஷியல் மீடியாக்களில் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தன. மைக்கேல் வானும் ரிஷப் பந்த்தை அணியில் எடுக்க ஆதரவாகப் பேசியுள்ளார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலவீனம் பவர் ப்ளேயான முதல் 6 ஓவர்களில் இவர்களது சராசரி ஐபிஎல் அணிகளிலேயே படுமோசமாக உள்ளது, ஷேன் வாட்சன் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சன் ரைசர்ஸுக்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த பிறகு ஒன்றும் சோபிக்கவில்லை. ஆகவே மீண்டுமொரு முறை பவர் ப்ளேயில் சென்னையின் முதிய வீரர்களைக் கட்டிப்போடுவதும் இறுதி ஓவர்களில் தோனியைக் கட்டிப்போடுவதும் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியை உறுதி செய்யும்.

 

ஏனெனில் தோனி இந்த சீசனில் எடுத்த 405 ரன்களில் சுமார் 200 ரன்களுக்கும் மேல் ஓவர் எண் 18-20-களில் வந்ததே. கிறிஸ் மோரிசை அணியில் எடுக்க வேண்டும், ஏனெனில் நேற்று கடைசியில் ஆடுவதற்கு ஆளில்லாமல் போனது, மேலும் கிறிஸ் மோரிஸ் இறுதி ஓவர்களை வீசுவதில் நல்ல சாதனை வைத்துள்ளார்.

 

அன்று சென்னையில் 179  ரன்களைச் சேர்க்க முடியாமல் இலக்கை விரட்டி 99 ரன்களுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் சரணடைந்த நினைவை டெல்லி மறக்க வேண்டும்.

 

சென்னை அணியின் பலம் அதன் ஸ்பின்னர்கள், சென்னை ஸ்பின்னர்கள் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மற்ற அணிகளை விட இதுதான் அதிகம், நன்றி குழி சென்னைப் பிட்ச்கள்.  மும்பை இந்தியன்ஸ் எப்படி தோனியின் சூட்சமங்களை உடைத்ததோ அப்படி டெல்லி கேப்பிடல்ஸும் உடைக்க வேண்டும்.

 

சிஎஸ்கேவுக்கு பெரிய அச்சுறுத்தல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவண் அனைத்திற்கும் மேலாக ரிஷப் பந்த். மிடில் ஓவர்கள்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பலவீனம் அதை தோனி சரியாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

 

இன்னொரு மிகப்பெரிய சுவாரஸ்யம் நாளைக்காகக் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x