Published : 16 May 2019 07:02 PM
Last Updated : 16 May 2019 07:02 PM

ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சர்ச்சை:  சிஓஏ உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறுவது என்ன?

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு  இடையே ஹைதராபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிசிசிஐ தற்காலிகப் பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் வழங்கினார்.

 

ஆனால் கோப்பையை வழங்க உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி விரும்பியதாகச்  செய்திகள் எழுந்தன. ஆனால் இது நடைமுறை விதிகளுக்குப் புறம்பானது, அது வழக்கமல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன.

 

ஆனால் இது குறித்து டயானா எடுல்ஜி இன்று விளக்கம் அளிக்கையில், இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் இறுதியில் சிகே.கண்ணா நடைமுறை மரபுகளை மீறினார் என்று குற்றம்சாட்டினார்.

 

“ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்ற நிர்வாகக் கமிட்டி கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது விவாதத்தில் நான், எப்படி பிசிசிஐ பொறுப்புத் தலைவர் கண்ணா, அன்று இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் கோப்பையை வழங்கும் தன் உரிமையிலிருந்து விலகினார், அன்று அவர் விதியை மீறினார், மாநிலக் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கோப்பையை வழங்கினார். ஆகவேதான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கோப்பையை சாம்பியன் அணிக்கு வழங்க வேண்டும் என்று கூறினேன். ஏனெனில் அன்று அவர் பிசிசிஐ பொறுப்புத் தலைவர் என்ற தன் பதவிக்கு நியாயம் செய்யாமல் கோப்பை வழங்குவதிலிருந்து விலகினார்

 

விநோத் ராய் இருந்தால் அவர்தான் ஐபிஎல் கோப்பையை வழங்க வேண்டும் என்று கூறினேன், ஆனால் விநோத் ராய் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகுதான் கூறினேன் ஜெனரல் தாட்கேவும் நானும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்கிறோம் நாங்கள் இருவரும் டிராபியை அளிக்கிறோம் என்றோம். அங்கேயே அது முடிந்து விட்டது.

 

அன்று ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வழங்குவதிலிருந்து சிகே கண்ணா விலகியது ஏன்? இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டுக் கேட்டு சலித்து விட்டோம் அவரிடமிருந்து பதில் இல்லை.

 

இந்த கோப்பை வழங்கும் சர்ச்சையில் நானாகவேதான் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன், காரணம் இது மிகவும் அசிங்கமான பரிமாணங்களை எட்டும் போல் தெரிந்தது, என்னால் கடினமாக உழைக்கும் அதிகாரிகள் இதன் ‘பின்விளைவுகளை’ சந்திக்க வேண்டாம், சர்ச்சை வேண்டாம் என்று நான் ஒதுங்கிவிட்டேன்.

 

ஆனால் இந்த விவாதங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருசார்பாக வெளி உலகிற்கு அளிக்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அரைவேக்காட்டுத் தகவல்களை அளித்த குறிப்பிட்ட அதிகாரி சிறுதுளியை பெருவெள்ளமாக்க முயன்றது அவரது பயத்தையும், திறமையின்மையையும் காட்டுகிறது. ” என்றார்.

 

இது குறித்து சிகே. கண்ணாவிடம் கேட்ட போது,  ‘கருத்துக் கூற ஒன்றுமில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x