Last Updated : 30 May, 2019 09:08 AM

 

Published : 30 May 2019 09:08 AM
Last Updated : 30 May 2019 09:08 AM

10 அணிகள், 48 ஆட்டங்கள்: கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்ற இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஒரு முறை மகுடம் சூடிய பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணி களுடன் 45 வருடங்களாக முடிசூட தவம் கிடக்கும் இங்கிலாந்து, கடந்த முறை கோப்பையை நழுவவிட்ட நியூஸிலாந்து, நாக் அவுட் சுற்றுடன் மூட்டை கட்டும் பழக்கம் கொண்ட தென் ஆப்பிரிக்கா, வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான், அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வங்கதேசம் என 10 அணிகள் வரிந்துகட்டுகின்றன. மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இங்கிலாந்து, இந்தியா இந்த கிரிக்கெட் விழாவை சந்திக்கின் றன. அதேவேளையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இழந்த பார்மை மீண்டும் அடைந் துள்ளதால் கோப்பையை தக்க வைத்துக்கொள் வதில் தீவிர முனைப்புடன் உள்ளது. இவர்களுடன் நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் கோப்பையை வெல்வதற்கான திறன்களை கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை உள்ளடக்கியபடி மறு ஒருங்கிணைப்புடன் மீண்டும் மிரட்ட ஆயத்தமாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் வார்னர் ரன் வேட்டை யாடிய நிலையில் (692 ரன்கள்), ஸ்டீவ் ஸ்மித் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசி மிரட்டினார். உஸ்மான் கவாஜா, கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்கள். பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஆடம் ஸம்பா கூட்டணி சவால் கொடுக்க தயாராக உள்ளது.

1975-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை கைகளில் ஏந்த துடிக்கும் கிரிக்கெட் பிறந்த மண்ணைச் சேர்ந்த இங்கிலாந்து அணி இம் முறை இயன் மோர்கன் தலைமையில் அதீத நம்பிக்கையில் களமிறங்குகிறது. 2015-ம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு இங்கிலாந்து அணி பெரிய அளவில் உருமாற்றம் அடைந்துள் ளது. தாக்குதல் வகையிலான பேட்டிங்கை கையா ளும் அந்த அணி பெரிய அளவிலான இலக்கை கொடுப்பதிலும், இலக்கை அடைவதிலும் பயமில்லாத பேட்டிங்கை வெளிப்படுத்துகிறது.

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஆஸ்தி ரேலியாவுக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஆட்டத்தில் 481 ரன்கள் குவித்து மிரளச் செய்தது.

ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், மோர்கன், ஜோ ரூட் ஆகியோருடன் முப்பரிமான திறன்களை கொண்ட மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் என பேட்டிங் வரிசையில் 7 பேர் மிரட்டக்கூடியவர்கள். பந்து வீச்சில் கடைசியாக சேர்க்கப்பட்டுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் கூடுதல் பலத்தை கொடுப்பவராக உள்ளார்.

பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வி களை சந்தித்த நிலையில் உலகக் கோப்பை தொடரை அணுகுகிறது. பந்து வீச்சில் செயல் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனு பவத்தை கருத்தில் கொண்டு இறுதிகட்டத்தில் சீனியர் வீரர்களான மொகமது அமிர், வகாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங்கில் பஹர் ஸமான், இமாம் உல் ஹக், மொகமது ஹபீஸ், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், ஷோயிப் மாலிக் என திறன் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் ஒரு அணியாக இவர் களிடம் இருந்து கூட்டு செயல் திறன் இல்லாதது பலவீனமாக உள்ளது.

நியூஸிலாந்து அணியானது கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போன்று உயர் மட்ட செயல்திறனை வெளிப்படுத்த காத்திருக் கிறது. அந்த அணி முதிர்ச்சியடைந்த கேப்டனும், உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்குகிறது. மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ, ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். டிரென்ட் போல்ட்டின் ஸ்விங் பந்து வீச்சு, எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூடும்.

எதிர்பாராத வகையில் வெற்றி அல்லது தோல்வியை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இம்முறை அதிரடி பட்டாளங்களுடன் களத்தில் குதிக்கிறது.

‘உலக நாயகன்’ என தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் 50-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆந்த்ரே ரஸ்ஸல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கார்லோஸ் பிராத் வெயிட், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் வலுவான ஹிட்டர்களாக உள்ளனர். அந்த அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சு மட்டும் சற்று பலவீனமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இம்முறைதான் பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் தொடரை சந்திக்கிறது. உலகக் கோப்பை தொடர்களில் நாக் அவுட் ஆட்டங்களில் வெற்றியை கோட்டைவிடும் அந்த அணிக்கு இம்முறை டு பிளெஸ்ஸிஸ் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். காயம் காரணமாக டேல் ஸ்டெயின் அவதிப்பட்டாலும் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி மிரட்டக் காத்திருக்கின்றனர். சுழலில் இம்ரன் தகிர் மாயாஜாலம் நிகழ்த்தக்கூடும்.

உலக அரங்கில் அற்புதமான வளர்ச்சி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொகமது ஷசாத், ஹர்ஸதுல்லா ஸசாய், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, மொகமது நபி ஆகியோரது செயல்திறன் கவனிக்கத் தக்க வகையில் இருக்கக்கூடும். சுழலில் சவால் கொடுக்க ரஷித் கான் தயாராக உள்ளார்.

மஷ்ரஃப் மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் கோப்பையை வென்றுள்ளதால் அந்த அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால், மஹ்மதுல்லா ரியாத், முஸ்பிகுர் ரகிம் ஆகியோர் வலுசேர்க்கக்கூடும்.

இலங்கை அணி இம்முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக பழக்கம் இல்லாத திமுத் கருணா ரத்னே தலைமையில் களமிறங்குகிறது. வேகப்பந்து வீச்சில் லஷித் மலிங்கா பலம் சேர்க்கக்கூடும். பேட்டிங்கில் லகிரு திரிமானே, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஆல்ரவுண்டரான திஷாரா பெரேரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

தொடக்க நாளான இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது இங்கிலாந்து அணியின் மிரட்டலான பேட்டிங் வரிசைக்கும், தென் ஆப்பிரிக்க அணியின் அதிவேக பந்து வீச்சு வரிசைக்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

5 வெற்றிகள் கட்டாயம்

1992-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதனால் அனைத்து ஆட்டங்களிலும் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. ரவுண்ட் ராபின் முறை என்பதால் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இந்த வகையில் ஒரு அணி 9 ஆட்டங்களை சந்திக்கும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதில் அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் குறைந்தது 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 9, 11-ம் தேதிகளில் மான்செஸ்டர், பர்மிங்காமில் நடைபெறுகிறது. சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் ஆட்டம் ஜூலை 14-ம் தேதி புகழ்வாய்ந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

360 டிகிரி  ரீப்பிளே

ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது 32 கேமராக்கள்

பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 8 அல்ட்ரா மோஷன் ஹவாக்-ஐ கேமராக்கள், ஸ்டெம்பு பகுதியின் முன் பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்கள், ஸ்பைடர், டிரோன் கேமராக்களும் அடங்கும். முதன்முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் 360 டிகிரி கோணத்தில் ரீப்பிளே ஒளிபரப்பப்படும். ஆட்டத்தின் பெரிய தருணங்களை ஆழமான வகையில் பகுப்பாய்வு செய்வதற்கு இது பெரிய அளவில் உதவியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

நேரம்: பிற்பகல் 3

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x