Last Updated : 02 Apr, 2019 07:18 AM

 

Published : 02 Apr 2019 07:18 AM
Last Updated : 02 Apr 2019 07:18 AM

8 ரன்களுக்கு 7 விக்கெட்: சாம் கரன் ஹாட்ரிக்: பஞ்சாப்பிடம் டெல்லி சரணடைந்தது எப்படி?

21 பந்துகளுக்கு 23 ரன்கள் சேர்த்தால் வெற்றி, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தது, இரு பேட்ஸமேன்கள் களத்தில் இருந்தார்கள். நிச்சயமாக தோல்வியை நினைத்துப் பார்க்கமுடியாத சூழலில் ஒரு அணி இருந்தபோது, தோல்வி அடைந்தால் எப்படி இருக்கும். அதுதான் நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கதையில் நடந்தது (உஷ் கண்டுக்காதீஙக?).

 

இப்படிப்பட்ட தோல்விகள், சரிவுகள்தான் ஐபிஎல் கிரிக்கெட் மீதான சந்தேகங்களை அதிகப்படுத்துகிறது.

 

‘மார்ச் ஃபாஸ்ட்’ என்பார்களே அது போன்று கடைசி 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தேநீர் குடிக்கும் இடைவெளியில் இழந்து எதிர்பாராத தோல்வி அடைந்தது. அடுத்த பேட்ஸ்மெனுக்கு பேட் கட்ட நேரம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை, அவ்வளவு அவசரமாக விக்கெட்டுகள் சரிந்தன. கிங்ஸ்லெவன் பஞ்சாப் பந்துவீச்சாளர் சாம் கரன் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 முக்கிய விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு ரன் அவுட் செய்ய டெல்லி அணி அசிங்கமாகத் தோற்றது.

 

சாம்கரன், முகமது ஷமி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் 12-வது ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது அஸ்வின் தலைமையிலான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

 

இங்கிலாந்து வீரர் சாம் கரண் 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் வீசிய கடைசி 8 பந்துகள் இவருக்கு 4 விக்கெட்டுகளையும் வாரிக்கொடுத்தது. பேட்டிங்கில் 10 பந்துகளுக்கு 20 ரன்கள், என்று தன்னை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது சரிதான் என்பதை நேற்று சாம் கரண் உணர்த்திவிட்டார். ஆட்டநாயகன் விருதும் சாம் கரணுக்கு வழங்கப்பட்டது.

 

முகமது ஷமியின் பந்துவீச்சு நேற்று முத்தாய்ப்பாக அமைந்தது. ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை தகர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஷமி ஏற்படுத்தினார்.

 

டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மோரிஸ், ஹனுமா விஹாரி, படேல் இந்த மூவர்தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். இந்த மூவரில் ஒருவர் நிலைத்து ஆடியிருந்தாலும் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம். நடுவரிசையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் 3 பேர் இருந்தும் ஒருவர் கூட நிலைத்து ஆடாவிட்டால் தோல்வியைத் தவிர வேறு எதை அடைய முடியும்.

 

 நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், வெற்றி பெற வேண்டிய அழுத்தம், நெருக்கடியை தாங்கி விளையாட முடியாத நிலை ஆகியவற்றால் விக்கெட்டுகளை இழந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

 

144 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்த 8 ரன்களுக்குள் அதாவது 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

டெல்லி அணயின் பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோன்றதுதான் பஞ்சாப் அணி வீரர்களின் பேட்டிங்கும் இருந்தது. 120 ரன்களுக்கு 4 –வது விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி அடுத்த 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததையும் என்னவென்று சொல்வது. இரு அணிகளிலும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நேற்று பொறுப்பற்ற முறையில் பேட் செய்தனர்.  யார் தோற்கிறார்கள் பார்ப்போமா? என்று இரு அணிகளும் விளையாடியது போல் இருந்தது.

 

முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம்புகுந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து 8 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

கிங்ஸ் லெவன் அணிக்கு கே.எல்.ராகுல், சாம் கரண் தொடக்கம் அளித்தனர். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ராகுல் 15 ரன்கள் சேர்த்த நிலையில், மோரிஸ்வீசிய 2-வது ஓவரில் எல்பிடபில்யு முறையி்ல ஆட்டமிழந்தார்.

 

ராகுல் தேவையா

 

திறமையான பேட்ஸ்மேன்களுக்கு அர்த்தமே எப்படி ஷாட் அடிக்கிறார் என்பது அல்ல, பந்துகளுக்கு ஏற்றார்போல் கால்களை எவ்வாறு நகர்த்தி விளையாடுகிறார் என்பதில்தான் இருக்கிறது. ஆனால், ராகுல் கிரீஸில் சிமெண்ட் போட்டதுபோன்று நகராமல் இருந்தார்.

 கால்களை நகர்த்தி ஆடுவதில்தான் பேட்ஸ்மேன்களின் அனுபவமும், திறமையும் வெளிப்படும், இந்த தொடரில் 4 போட்டிகளிலும் சோபிக்காத ராகுலை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்தால், அது கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயம்.

 

அடுத்து மயங்க் அகர்வால் களமிறங்கினார். லாமிஷேன் வீசிய 4-வது ஓவரில் சாம்கரண் எல்பிடபில்யு முறையில் வெளியேறினார். சாம் கரண் 20 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து சர்பிராஸ் கான் களமிறங்கினார். பவர்ப்ளே ஓவரில் பஞ்சாப்அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

 

நிலைத்து ஆடாத மயங்க் அகர்வால் 6 ரன்களில் ரன்அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி. 4-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் கானுடன், மில்லர் சேர்ந்தார். இருவரின் நிதான ஆட்டத்தில்தான் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தனர், மில்லர் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

 

லாமிசான் வீசிய 14 ஓவரில் 39 ரன்கள் சேர்த்திருந்த சர்பிராஸ்கான் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சிறிது நேரத்தில் மில்லரும் 43 ரன்களில் வெளியேறினார் மோரிஸ் வீசிய 17-வது ஓவரில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து மில்லர் ஆட்டமிழந்தார்.

 

137 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி, அடுத்த 30 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய விலோயன், முருகன் அஸ்வின்,  ரவி அஸ்வின், ஷமி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மன்தீப் சிங் 29 ரன்னில் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

20ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 156 ரன்கள் சேர்த்தது. டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, லாமிசான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

எளிதான இலக்கு

 

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி அசத்திய பிரித்வி ஷா, அஸ்வின் வீசிய முதல் பந்திலிலேயே விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.

 

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், தவணுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி   ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரில் 49 ரன்களைச் சேர்த்தது டெல்லி அணி.

 

விலோயன் வீசிய 8-வது ஓவரில் 28 ரன்கள் சேர்த்திருந்த அய்யர் போல்டாகி ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த அடுத்த சில ஓவரில் தவணும் நடையைக்கட்டினார்.

 

அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் எல்பிடபில்யு முறையில் தவண் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த், இங்ராம் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் களத்தில்  நிலைத்ததால், அணியின் வெற்றி உறுதியாகிவிடும் என நம்பப்பட்டது.

 

திருப்புமுனை ஷமி

 

ஆனால், முகமது ஷமி வீசிய 17-வது ஓவரில் இருந்துதான் திருப்புமுனை ஏற்பட்டது. ரிஷப்பந்த் 39 ரன்கள் சேர்த்த நிலையில் 4-வது பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்தனர். இதுதான் டெல்லி அணியின் அதிபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும். அதன்பின் வந்த வீரர்கள் களத்துக்கு வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர்.

 

 

அடுத்து மோரிஸ் களமிறங்கினார். ஷமி வீசிய அதே ஓவரின் 5-வது பந்தில் ரன் அவுட் செய்யப்பட்டு மோரிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.

 

சாம்கரன் 18-வது ஓவரை வீசினார்.4-வது பந்தில் நாயரிடம் கேட்ச் கொடுத்து இங்ராம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த படேல் ஒரு பந்து சந்தித்த நிலையில் அதேஓவரின் கடைசிப்பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரிலும் இரு விக்கெட்டுகளை இழந்ததால், ஆட்டம் டெல்லி அணியிடம் இருந்து பஞ்சாப் அணி வசம் சென்றது.

 

விஹாரி, ரபாடா களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் க்ளீன் போல்டாகி விஹாரி 2 ரன்களில் வெளியேறினார். 144 ரன்களுக்கு 4 விக்கெட்டையும் அடுத்த 4 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளையும் டெல்லி இழந்தது.

 

ஹாட்ரிக் சாதனை

 

20ஓவரை சாம் கரண் வீசினார். தான் வீசிய இருபந்துகளிலும் ரபாடாவையும், லாமிசாவைனையும் க்ளீன் போல்டு செய்து வெற்றியை உறுதி செய்தார் கரண். 18-வது ஓவரின் கடைசிப்பந்தில் ஒருவிக்கெட்டும், அடுத்துதான் வீசிய 20ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார் கரண்.

 

19.2ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில் சாம் கரண் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x