Published : 29 Apr 2019 08:41 AM
Last Updated : 29 Apr 2019 08:41 AM

ஹைதராபாத் - பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் குறைந்தது இரு ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையிலேயே இன்றைய ஆட்டத்தை இரு அணிகளும் எதிர்கொள்கின்றன. ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும், பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் தோல்வி கண்டிருந்தன.

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, உலகக் கோப்பை பயிற்சி முகாமை கருத்தில் கொண்டு ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்த சீசனில் 445 ரன்கள் குவித்திருந்த அவர், இல்லாதது கடந்த ஆட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 611 ரன்கள் வேட்டையாடி உள்ள மற்றொரு தொடக்க வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர், இன்றைய ஆட்டத்துடன் இந்த சீசனில் இருந்து விடைபெறுகிறார். உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக அவர், தாயகம் புறப்பட்டு செல்ல உள்ளார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்த சீசனை உயர்மதிப்புடன் நிறைவு செய்வதில் வார்னர் கவனம் செலுத்தக்கூடும். வார்னர், ஜானி பேர்ஸ்டோ கூட்டணி ஹைதராபாத் அணிவெற்றி பெற்ற 5 ஆட்டங்களிலும் ரன்வேட்டைநிகழ்த்தியிருந்தது. தோல்வியடைந்த 6 ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணியின் நடுவரிசை பேட்டிங் பெரும் சரிவை கண்டிருந்தது. மேலும் இறுதிக்கட்ட பந்து வீச்சும் கடும் சிதைவுக்கு உள்ளாகியிருந்தது.

கடந்த இரு ஆட்டங்களிலும் டாப் ஆர்டரில் களமிறங்கி வரும் மணீஷ் பாண்டேஅதிரடியாக விளையாடி அரை சதம் அடித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக் கூடும். விஜய் சங்கர், தீபக் ஹூடா, ஷகிப்அல் ஹசன், விருத்திமான் சஹா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் அணிக்கு வலு சேர்க்கலாம்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். வேகப் பந்து வீச்சில் மொகமது ஷமி வலுசேர்ப்பவராக உள்ளார். இந்த கூட்டணி ஹைதராபாத் அணி வீரர்களின் நடுவரிசை பேட்டிங்குக்கு தொல்லைகள் கொடுக்கக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணியை போன்றே பஞ்சாப் அணியுடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே நம்பி உள்ளது.

டாப் ஆர்டர்ல் கிறிஸ் கெயில் 444 ரன்களையும், கே.எல்.ராகுல் 441 ரன்களையும் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மயங்க் அகர்வால் 262 ரன்கள் எடுத்துள்ளார். டேவிட் மில்லர் (9 ஆட்டங்களில் 202 ரன்கள்), சர்ப்ராஸ் கான் (8 ஆட்டங்களில் 180 ரன்கள்) ஆகியோருக்கு போதிய அளவிலான வாய்ப்புகள் வழங்கிய போதிலும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை.

அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் நடுவரிசை வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் ஹைதராபாத் அணிக்கு சவால் கொடுக்கலாம்.

அணிகள் விவரம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கே.எல். ராகுல், கிறிஸ் கெயில், மயங்க்  அகர்வால், கருண் நாயர் டேவிட் மில்லர், சர்ப்ராஸ் கான், சேம் கரன், மொகமது ஷமி, ஆன்ட்ரூ டை, நிக்கோலஸ் பூரன், மோசஸ் ஹென்ரிக்ஸ், ஹர்டஸ் வில்ஜோயன், தர்ஷன் நல்கண்டே,  அர்ஷ்தீப் சிங், அக்னிவேஷ் யாச்சி, ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, அங்கித் ராஜ்புத், மன்தீப் சிங், சிம்ரன் சிங், , முஜீப் உர் ரஹ்மான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, மார்ட்டின் கப்டில், ரிக்கிபுயி, டேவிட் வார்னர், தீபக்ஹூடா, முகமது நபி,யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விருத்திமான் சாஹா, சித்தார்த் கவுல்,கலீல் அகமது, புவனேஸ்வர் குமார், ரஷித் கான், பசில் தம்பி, பில்லி ஸ்டான்லேக், டி.நடராஜன், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம்.

நேரம்: இரவு 8

இடம்: ஹைதராபாத்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x