Last Updated : 24 Apr, 2019 12:02 PM

 

Published : 24 Apr 2019 12:02 PM
Last Updated : 24 Apr 2019 12:02 PM

தோனிக்கும், பிளெம்மிங்கிற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: ஷேன் வாட்ஸன் உருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்ஸன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல்டி20 போட்டியின் 41-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் 175 ரன்களை இலக்கை வெற்றிகரமாக விரட்டி வெற்றியைப் பெற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்ஸன் முக்கிய துணையாக இருந்தார். 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார் வாட்ஸன்.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வாட்ஸன் இந்த போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை. இந்த ஐபிஎல் போட்டியில் வாட்ஸனின் அதிகபட்சமே 44 ரன்கள் மட்டுமே இருந்தது. தொடர்ந்து இதுபோல் விளையாடினால், வாட்ஸனுக்கு பதிலாக சாம்பில்லிங்ஸை களமிறக்கலாம் என்றுகூட யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் வாட்ஸன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பளித்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் வாட்ஸன் ஆட்டத்தின் பெரும்பகுதி ரன்களை எடுத்து வெற்றிக்கு துணையாகினார்.

வெற்றிக்குப் பின் ஷேன் வாட்ஸன் ஊடகங்களிடம் கூறுகையில், "  என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் ரன்கள் சேர்க்கமுடியவில்லை என்பதற்காகத்தான். அதைத்தவிர வேறேதும் இல்லை. ஆனால், என் மீது கேப்டன் தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தனர், அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு என்னால் வார்த்தையால் நன்றி சொல்ல முடியாது.

இதற்கு முன்நான் நான் ஏராளமான அணிகளில் விளையாடி இருக்கிறேன். இதுபோல் நான் ரன்களை எடுக்காமல் விளையாடி இருந்தால், என்னை எப்போதோ அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். ஆனால், தோனியும், ஸ்டீபனும் என் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் திறமையான பந்துவீச்சாளர். பந்துகளை லெக்கட்டர், இன்கட்டர் என நன்றாக ஸ்விங் செய்யும் திறமை படைத்தவராக இருக்கிறார் " எனத் தெரிவித்தார்.

வாட்ஸன் குறித்து தோனி கூறுகையில், " சில போட்டிகளில் ஒரு தனிபேட்ஸ்மேனே ஏராளமான பங்களிப்புகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன், மற்ற வீரர்கள்தான் சிறிதளவு செய்தால் போதும். அந்த வகையில் எங்களுக்கு மேட்ச் வின்னர் வாட்ஸன்

வலைபயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்டார் வாட்ஸன். எந்த ஒரு சிறிய இன்னிங்ஸில் அவர் விளையாடினாலும், சிறிது தொடக்கத்தில் தடுமாறினாலும் அதன்பின் நிலைத்துவிடுவார். வாட்ஸன் ஃபார்முக்கு வந்துள்ள நேரம் சரியானது. இன்னும் அதிகமான வாய்ப்புகளே வாட்ஸனுக்கு நிர்வாகம் வழங்கும் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x