Published : 09 Apr 2019 02:30 PM
Last Updated : 09 Apr 2019 02:30 PM

தோனியா- தினேஷ் கார்த்திக்கா?- இன்று வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்: சுனில் நரேனை தோனி எதிர்கொண்ட 57 பந்துகளில் 29 டாட் பால்கள்- புள்ளிவிவரங்கள்

சென்னையில் இன்று நடைபெறும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்குஇடையிலான ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

12-வது ஐபிஎல் டி20 போட்டித்தொடர் தொடங்கி நடந்துவருகிறது. ஏற்குறைய 22 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்று 23-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கேகேஆர் அணி மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் மோதி, தலா 4 வெற்றிகளுடன் உள்ளன.

இதில் நிகர ரன்ரேட் அடிப்படையில் கேகேஆர் அணி முதலிடத்திலும், 2-வது இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெல்லும், தோற்கும் அணி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை சந்திக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக முயற்சிக்கும்.

ஆனால், இரு அணிகளும் கடந்த சீசன்களில் மோதிய விதம், புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால், இன்றைய போட்டி யாருக்கு சாதகம் என்பதை கணிக்க முடியும்.

1. சென்னைப் சேப்பாக்கத்தில் கடந்த 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி  அதில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே சிஎஸ்கே அணியை வீழ்த்தியுள்ளது. மற்ற எந்த அணிகளும் சிஎஸ்கே அணியை வீழ்த்தியதாக வரலாறு இல்லை.

2. சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 8 முறை சிஎஸ்கே அணி மோதியுள்ளது. இதில் 2 முறை கொல்கத்தா அணியும், 6 முறை சிஎஸ்கே அணியும் வென்றுள்ளன.

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனுக்கு எதிராக தோனி 50.88 ஸ்ட்ரைக் ரேட் மட்டும் வைத்துள்ளார். 57 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள தோனி, 29 பந்துகள் டாட்பந்துகளாக்கியுள்ளார். நரேன் பந்துவீச்சில் இதுவரை ஒரு பவுண்டரி மட்டுமே தோனி அடித்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட நரேன் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்தது இல்லை.

4. சுனில் நரேன் பந்துவீச்சில் அதிகபட்சமாக 90 ரன்கள் சேர்த்துள்ளார் ரெய்னா. இந்த 90 ரன்களை 66 பந்துகளில் ரெய்னா சேர்த்தார், இதில் 5பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த சீசனின்போது மட்டுமே நரேன்  பந்துவீச்சில் ரெய்னா ஆட்டமிழந்தார்.

5. கேகேஆர், சிஎஸ்கே அணிகள் மோதும் இந்த போட்டி, பியூஷ் சாவ்லாவுக்கு 150-வது போட்டியாகும். இதுவரை பியூஷ் சாவ்லா 143 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

6. சிஎஸ்கே அணிக்கு எதிராக கேகேஆர் வீரர் ஆன்ட்ரூ ரஸலின் பேட்டிங் ஸ்டிரைக்  ரேட் 194 ஆக இருக்கிறது. கடைசியாக சிஎஸ்கேவுடன் மோதிய 7 ஆட்டங்களில் ரஸல் 224 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். இதில் 5 இன்னிங்ஸ்களில் மட்டும் 164 ரன்கள் சேர்த்துள்ள ரஸலின் சராசரி 54 ஆக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ரஸலை கட்டுப்படுத்துவது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

7. சிஎஸ்கே அணிக்கு எதிராக மட்டும் 500 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த 4 வீரர்களில் ராபின் உத்தப்பாவும் ஒருவர். உத்தப்பா 527 ரன்கள் சேர்த்துள்ளார். 18 இன்னிங்ஸ்களில் 527 ரன்கள் சேர்த்து சராசரியை 35 ஆக வைத்துள்ளார்.

8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரெய்னா 746 ரன்கள் சேர்த்துள்ளர். டேவிட் வார்னர் 762 ரன்கள், ரோஹித் சர்மா 757 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இரு அணிகளுமே சம வலிமை படைத்தவையாக இருக்கின்றன. பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் இரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. சிஎஸ்கே அணியில் வாட்ஸன், ரெய்னா இருப்பதைப் போல்,கேகே ஆர் அணியில் தினேஷ் கார்த்திக், ரஸல், நரேன், லின் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடந்த கால புள்ளிவிவரங்கள் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x