Published : 16 Sep 2014 08:55 PM
Last Updated : 16 Sep 2014 08:55 PM

அதிரடி பேட்டிங் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்துமா கொல்கத்தா?

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் பிரதான சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் நாளை ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித், பிரெண்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் சதங்களை எடுத்த தென் ஆப்பிரிக்காவின் டுபிளேசி, கேப்டன் தோனி, அதிரடி பார்மில் உள்ள சுரேஷ் ரெய்னா, ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, டிவைன் பிராவோ என்று ஒரே அதிரடிக் கும்பல் உள்ளது. இவர்களை சற்றே ஆட்டம் காண வைக்க கொல்கத்தா அணியில் மோர்னி மோர்கெல் இல்லை.

ஆனால் சுனில் நரைன், மற்றும் பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ் உள்ளனர். ஜாக் காலிஸ் இருக்கிறார்.

சென்னை அணியின் பந்து வீச்சும் நன்றாகவே உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடம்பெறுவார்கள். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஆசிஷ் நெஹ்ரா இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நெஹ்ராவுக்குப் பதிலாக ஜான் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றால் மெக்கல்லம் நீக்கப்படுவார். ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற முடியும்.

கொல்கத்தா அணியில் உத்தப்பா ஒரு மிரட்டல் வீரர். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களில் 660 ரன்கள் எடுத்துள்ளார். இவருடன் கவுதம் கம்பீர் தொடக்கத்தில் களமிறங்கலாம். மேலும் ஜாக் காலிஸ், மணீஷ் பாண்டே, அதிரடி மன்னன் யூசுப் பத்தான், டஸ்சாத்தே ஆகியோர் உள்ளனர்.

சென்னை அணி உண்மையில் பலம் மிகுந்த அணியாகவே தெரிகிறது.

மேலும் கொல்கத்தா அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இதுவரை சொதப்பியே வந்துள்ளது. இதுவரை குரூப் சுற்றைத் தாண்டியதில்லை என்பதே வரலாறு.

சாம்பியன்ஸ் லீகில் 10 அணிகள் மோதுகின்றன. தகுதிச் சுற்றிலிருந்து 2 அணிகள் தகுதி பெறும் அது இன்று தெரிந்து விடும்.

பிரிவு ஏ-யில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெறுகிறது.

“பி” பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கேப் கோப்ராஸ், பர்படாஸ் டிரைடென்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறது.

இரு பிரிவுகளிலும் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x