Published : 29 Apr 2019 04:03 PM
Last Updated : 29 Apr 2019 04:03 PM

ரஸலை விடவும் சிறந்த இன்னிங்ஸ்... எப்படி?  கொல்கத்தாவை நடுநடுங்கச் செய்த ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2019-ன் மிகச்சிறந்த போட்டியாக நேற்று நடைபெற்ற கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்ற போட்டியைக் குறிப்பிடலாம். ஆந்த்ரே ரஸல் தான் சொன்னதைச் செய்து காட்டி 40 பந்துகளில் 80 ரன்களை எடுக்க, ஹர்திக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை எடுத்தார்.

 

ஆந்த்ரே ரஸல் 8 சிக்சர்கள் 6 பவுண்ட்ரிகளை தனது 80 ரன்களில் விளாச, ஹர்திக் பாண்டியா தனது ஆகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்சில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.

 

இந்த இரண்டு இன்னிங்ஸுமே நேற்று சரியான சவால் போட்டிகளை விரும்பும் கொல்கத்தா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆட்டத்தின் சூழ்நிலையை கொஞ்சம் உற்று நோக்கினால் ஹர்திக் பாண்டியா அந்தச் சூழ்நிலையில் ஆடிய இந்த இன்னிங்ஸ் நிச்சயம் ரஸலைக் காட்டிலும் ஒரு படி மேலே உள்ளது என்றே கூற வேண்டும். இதற்கான காரணங்களை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின்  ‘சூப்பர் ஸ்டாட்ஸ்’ விளக்கியுள்ளது.

 

எப்படி?

 

ஹர்திக் பாண்டியா நேற்று களமிறங்கும் போது இமாலய இலக்கான 232 ரன்களை எதிர்த்து மும்பை இந்தியன்ஸின் ரன் விகிதம் 7 ரன்களுக்கும் குறைவாக இருந்தது. வெற்றி பெறத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 15 ரன்கள் என்று எகிறியிருந்தது.

 

மாறாக ஆந்த்ரே ரஸல் இறங்கிய போது கொல்கத்தாவின் ரன் ரேட் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் சென்று கொண்டிருந்தது.  மேலும் ரஸல் இறங்கி அதிரடியாக ஆடத்தொடங்கிய போது எதிர்முனை வீரர் 24 பந்துகளில் 49 ரன்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் ரஸல் மேல் சுமை அதிகம் ஏற்றப்படவில்லை. சுதந்திரமாக சுழற்றினார்.

 

ஆனால் ஹர்திக் பாண்டியா பேட் செய்த போது எதிர்முனை வீரர் 24 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனாலும் தேவைப்படும் ரன் விகிதம் 15 ரன்கள் என்பதால் ஹர்திக் பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட் 267.64 என்ற விகிதத்தில் சென்று கொண்டிருந்தது, ரஸலைக் காட்டிலும் அதிக நெருக்கடியில் ஆடி அவரை விடவும் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் ஹர்திக் பாண்டியா.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலக்கு 233 என்பது இமாலய இலக்கானதால் தோல்வியின் பக்கம் இருக்கிறார் ஹர்திக் பாண்டியா, ஆனால் தனிப்பட்ட முறையில் அதிரடியில் ரஸலை விஞ்சிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x