Last Updated : 16 Apr, 2019 05:49 PM

 

Published : 16 Apr 2019 05:49 PM
Last Updated : 16 Apr 2019 05:49 PM

2007-ல் எனக்கு நடந்தது இன்று ராயுடுவுக்கு நிகழ்ந்துள்ளது: கம்பீர் மனமார்ந்த வேதனை

3 ஆட்டங்களில் சரியாக ஆடாததற்காக ராயுடுவை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது ‘இருதயம் நொறுங்கும்’ விஷயமாகும். ஆனால் ரிஷப் பந்த்தை நீக்கியது தொடர்பாக விவாதங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர் கொடுத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை எனவே ராயுடுவை ஒதுக்கியது பற்றித்தான் விவாதிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிடிஐ- நிறுவனத்திடம் கம்பீர் கூறும்போது, “ரிஷப் பந்த்தை நீக்கியது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.  ஆனால் 48 ரன்கள் சராசரி வைத்திருக்கும் ஒருவரை, அதுவும் 33 வயதுதான் ஆகும் ஒருவரை (ராயுடு) அணியில் தேர்வு செய்யாமல் விட்டது பெரிய துரதிர்ஷ்டம். இதுதான் உண்மையில் இருதயத்தை நொறுக்குவதாகும்.

 

உண்மையில் ராயுடுவுக்காக வருந்துகிறேன், 2007-ல் இதே நிலைமையில்தான் நானும் இருந்தேன். அப்போது என்னை அவர்கள் உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை.  உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு நன்றாக புரியும்.  உலகக்கோப்பையில் ஆட வேண்டுமென்பது எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் இளம்பிராயக் கனவாகவே இருக்கும். ஆகவே  அணியில் தேர்வு செய்யப்படாத மற்ற எந்த ஒரு கிரிக்கெட் வீரரிடம் எனக்கு ஏற்படும் அனுதாபத்தை விட ராயுடு மீதுதான் அதிக அனுதாபம் ஏற்படுகிறது.

 

 பந்த்தைப் பொறுத்தமட்டில் இது பின்னடைவு அல்ல ஏன் பின்னடைவு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் சீரான முறையில் அணியில் இல்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. எனவே அதைப் பின்னடைவு என்று கூற முடியாது.

 

பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகிறார். அவர் அதில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதே நல்லது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அவர் ஆடுகிறார் என்றால் அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு இட்டுச் செல்வதைப் பற்றித்தான் அவர் யோசிக்க வேண்டும்.

 

பந்த் தரப்பில் வயது இருக்கிறது, நன்றாக ஆடிக்கொண்டேயிருந்தால் போதும். அவர் சீரான முறையில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இல்லை, இவருக்கும் தினேஷ் கார்த்திக்கும் இடையே முடிவு செய்வது தேர்வாளர்களின் வேலை, அவர்கள் தினேஷ் கார்த்திக் பெட்டர் என்று முடிவு செய்துள்ளனர். ஆகவே ரிஷப் பந்த் இது பற்றி அதிகம் சிந்திக்கலாகாது.

 

தினேஷ் கார்த்திக் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாக பேக்-அப் கீப்பராக செயல்பட்டு வருகிறார். பந்த்தை விட சிறந்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை தேர்வுக்குழுவினர் பரிசீலித்திருக்கலாம். இதைத்தான் எம்.எஸ்.கே.பிரசாத்தும் கூறுகிறார்.  அவரும் ஒரு நல்ல பினிஷர், எனவே  அவர்கள் இப்படி யோசித்திருக்கலாம்.

 

ஆனால் என்னைப் பொறுத்தவரை 2வது விக்கெட் கீப்பர் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்க்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்போதுள்ளவர்களில் அவர்தான் சிறந்தவர். அவரும் 4ம் நிலையில் இறங்கி நீண்ட காலம் ஆடக்கூடிய தரமுள்ளவர்தான்.

 

இவையெல்லாம் தேர்வுக்குழு கையில் உள்ளது, ஆனால் இப்போது யார் விடுபட்டவர்கள், யார் தேர்வானவர்கள் என்பதைப் பார்ப்பதை விடுத்து உலகக்கோப்பையை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் கவனம் தேவை

 

அவர்கள் இதுதான் சிறந்த 15 வீரர்கள் கொண்ட அணி என்று முடிவெடுத்தால் அதை நாம் ஆதரிக்க வேண்டும், இப்போதைக்கு யார் உலகக்கோப்பை ஆட்டங்களுக்குச் செல்கிறார்கள் அல்லது செல்லவில்லை என்பது விஷயமல்ல, உலகக்கோப்பையை மீண்டும் வெல்வதுதான் முக்கியம்” இவ்வாறு கூறினார் கம்பீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x