Published : 11 Apr 2019 01:10 PM
Last Updated : 11 Apr 2019 01:10 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் 6-வது மெதுவான சதம்: மீண்டும் 13-17 ஓவர்களில் சொதப்பிய கே.எல்.ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சதநாயகன் கே.எல்.ராகுல் நேற்று 63 பந்துகளில் சதம் கண்டார், பலருக்கும் இந்தச் சதம் பெரிய சதமாகத் தெரிந்தாலும் இந்த சதம் கிங்ஸ் லெவன் தோல்வியில் சிறிதளவு பங்களிப்பு செய்திருப்பது தெரியாது.

 

கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 63 என்று வெளுத்துக் கட்டிய நிலையில் ராகுல் 41 பந்துகளில்தான் அரைசதம் கண்டார்.

 

முதல் 10 ஓவர்களில் கிங்ஸ் லெவன் கெய்ல் அதிரடியில் 93/1 என்று இருந்ததது, கெய்ல் இருக்கும் போது இன்னொரு முனையிலும் கொஞ்சம் ரன்களை கூடுதல் விரைவில் சேர்த்திருந்தால் நிச்சயம் 10 ஓவர்களில் 100-103 இருந்திருக்க வேண்டும் ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் போது இன்னொருவர் உறுதுணை ஆட்டம் ஆடுவது என்பதெல்லாம் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ஆனால் டி20 கிரிக்கெட்டில் இருமுனைகளிலும் அடிக்க வேண்டும்.

 

ஏனெனில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் ரஸல், பொலார்ட், பிராவோ போன்ற பவர் ஹிட்டர்கள் உள்ள அணிகளுக்கு எதிராக இன்னும் 10 ரன்கள் இருந்திருக்கலாம் என்ற நிலையே ஏற்படும். அதனால்தான் இருமுனைகளிலும் ரன்களை விரைவு கதியில் எடுப்பது அவசியம்.

 

நேற்றும் 10 ஒவர்களி 93/1 என்ற நிலையிலிருந்து 11-17 ஓவர்களுக்கிடையில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது கிங்ஸ் லெவன். இதில் குறிப்பாக 13-17 ஓவர்களில் ராகுல் ரன்களை விரைவாகச் சேர்ப்பதில் முனைப்பு காட்டாமல் ஆடினார். இதனால் இந்த 4 ஒவர்களில் 30 ரன்களே வந்தன. சொதப்பிய இந்த 4 ஓவர்கள்தான் கிங்ஸ் லெவன் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்த ஓவராக இருந்தது.

 

தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது இது குறித்து ராகுலிடம் மஞ்சுரேக்கர் கேட்க, “ஆம்! இடையில் கொஞ்சம் பாதை தவறிவிட்டோம்” என்று ஒப்புக் கொண்டார் ராகுல்.

 

அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் ராகுல், சர்பராஸ் கான் ஜோடி இதே ஓவர்களில் சொதப்பினர், ஆனால் அப்போது விக்கெட்டுகளும் விழவில்லை, இருந்தும் பவுண்டரிகளே அடிக்க முயற்சி செய்யாமல் இருவரும் ஆடியது புரியாத புதிர், உஷ் கண்டுக்காதீங்க தருணம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

 

நேற்றும் இடையில் விட்டுவிட்டு கடைசியில் அதிரடி காட்டியும் பயனில்லாமல் போனது.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் சதத்திற்கு அதிகபந்துகள் எடுத்துக் கொண்ட, அதாவது மெதுவான ஐபிஎல் சதங்கள் இதோ:

 

மணீஷ் பாண்டே 2009-ல் 67 பந்துகள்.

சச்சின் டெண்டுல்கர் 2011-ல் 66 பந்துகள்

டேவிட் வார்னர் (டெல்லி) 2010-ல் 66 பந்துகள்

கெவின் பீட்டர்சன் (டெல்லி) 2012-ல் 64 பந்துகள்

விராட் கோலி - 2016-ல் 63பந்துகள்

ராகுல் - 2019-ல் 63 பந்துகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x