Last Updated : 01 Apr, 2019 09:41 AM

 

Published : 01 Apr 2019 09:41 AM
Last Updated : 01 Apr 2019 09:41 AM

சிஎஸ்கேன்னா சும்மாவா...: அனைத்தும் தோனிதான்: திருப்புமுனை பிராவோ: ராஜஸ்தான் பரிதாபம்

தோனியின் அமர்க்களமான பேட்டிங், திருப்புமுனை ஏற்படுத்திய பிராவோவின் கடைசி ஓவர் ஆகியவற்றால், 12-வது ஐபிஎல் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  

இதன் மூலம் சிஎஸ்கே அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3  போட்டிகளிலும் விளையாடி மூன்றாவு தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 ரன்களில் தோல்வி அடைந்தது.

தோனி வந்தவுடனே ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆர்ச்சர் வீசிய 6-வத ஓவரில் தோனி சந்தித்த முதல் பந்து உடலில் பட்டு ஸ்டெம்பின் மீது பட்டது ஆனால், அதிர்ஷ்டவசமாக ஸ்டெம்பில் இருந்த பைல்ஸ் கீழே விழவில்லை. இதனால் தோனி தப்பித்தார்.

16-க்கு 42 ரன்கள்

தலைசிறந்த கேப்டன் என்பதை தோனி இந்த போட்டியில் நிரூபித்துவிட்டார். அணியை இக்கட்டான நேரத்தில் இருந்து வழிநடத்திச் சென்று 46 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

30 பந்துகளுக்கு 33 ரன்கள் சேர்த்திருந்த தோனி, ஆட்டம் முடிந்தபோது, 46 பந்துகளுக்கு 75 ரன்கள் சேர்த்தார். அதாவது, 16  பந்துகளில்42 ரன்கள் சேர்த்து தான் எந்தவிதத்திலும் அதிரடியில் குறையவில்லை என்பதை விமர்சகர்களுக்கு நிரூபித்தார்.

கடைசி 18 பந்துகளில் மட்டும் தோனி, பிராவோ  அதிரடியால், சிஎஸ்கோ அணி 60 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தோனி மயம்

 இந்த போட்டியில் அனைத்தும் தோனி மயம் என்றுதான் கூற வேண்டும். 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியபோது, களமிறங்கிய தோனி கடைசிவரை நிலைத்து ஆடினார்.

 தான் சிறந்த கேப்டன் மட்டுமில்லை "சிஎஸ்கே அணிக்கு ஏணி", சிஎஸ்கே அணி தோல்வியில் இருந்து கரைகடக்க உதவும் "தோணி"(சுமத்தல்) என்று தோனி நிரூபித்துவிட்டார்.

10 ஓவர்களில் 55 ரன்கள் இருந்த சிஎஸ்கே அணி அடுத்த 10 ஓவர்களில் தோனியின் அதிரடி பேட்டிங்கால், 125 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடியதில் தன்னுடைய அதிகபட்சமான ஸ்கோரான 75 ரன்களை தோனி நேற்று பதிவு செய்தார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

வயதான வீரர்களை கொண்ட அணி, அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்ய முடியும் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு தோனி, தனது ஸ்மார்ட்டான பேட்டிங், சூழலுக்கு தகுந்த மதிநுட்பத்துடன் கூடிய யோசனைகள் மூலம் பதில் அளித்தார்.

எந்த பந்துவீச்சாளரை எந்த ஓவரில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து தோனி செயல்படுத்துவதில் வல்லவர் என்பதை வெளிக்காட்டினார்.  அதிலும் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் அழகு... அற்புதம். அமர்க்களம் என்றுதான் கூறவேண்டும். தோனியின் இயல்பான ஆட்டத்தை காண வந்திருந்த ரசிகர்களுக்கு நேற்று விருந்து அளித்துவிட்டார்.

கோலிக்கு பாடம்

கேப்டன்ஷிப் என்ன என்பதை தயவு செய்து தோனியிடம் இருந்து கோலி கற்றுக்கொள்ள வேண்டும். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் தோனியின் அறிவுரையும், வழிகாட்டலும் கோலிக்கும், அணிக்கும் அவசியம் என்பதை இந்த போட்டியில் இருந்து அறிய முடியும்.

பிராவோ பலம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலம் பிராவோவின் பந்துவீ்சும், பேட்டிங்கும்தான். பிராவோ எந்தநேரத்தில் பேட்டிங்கில் வெடித்துச்சிதறுவார் , பந்துவீச்சில் எவ்வாறு சூழலுக்கு தகுந்தவாறு பந்துவீசுவார் என்பதை எதிரணிகள் கணிப்பது மிகக்கடினம்.

 இந்த போட்டியிலும் தோனியுடன் சேர்ந்து கடைசிநேரத்தில் 56ரன்கள் சேர்த்துக்கொடுத்தார் பிராவோ. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் கடைசி ஓவரில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக காரணமாக இருந்தார்.

ஒட்டுமொத்தத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி தனது ஒவ்வொரு போட்டியிலும் நடப்பு சாம்பியன் என்பதை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நிரூபித்து வருகிறது.

ராயுடு,ஜாதவ் தேவையா

சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தது. ராயுடு, வாட்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வேகத்தில் ராயுடு ஒரு ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை சேப்பாக்கம் போன்ற சொத்தை பிட்சிலேயே ராயுடு மோசமாக பேட் செய்தார் என்றால், உலகக் கோப்பைப் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங்க் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் இங்கிலாந்து மைதானங்களில் எவ்வாறு பேட் செய்யப் போகிறார் என்பது சந்தேகமே.

27 ரன்களுக்கு வாட்ஸன்(13), ஜாதவ்(8) உள்பட 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது.

ஐபிஎல் அடிப்படையில்தான் உலகக்கோப்பைக்கு வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளது என்றால், ராயுடு, ஜாதவ், கே.எல்.ராகுல், போன்ற வீரர்களின் நிலை கேள்விக்குறிதான்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி, ரெய்னாவுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தனர். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

உனத்கட் வீசிய 14-வது ஓவரில் நிதானமாக பேட் செய்து வந்த ரெய்னா 36ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். தோனி, ரெய்னா இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து பிராவோ களமிறங்கி தோனியுடன் இணைந்தார். பிராவோ வந்தபின் ரன் எடுப்பதில் வேகம் தென்பட்டது. குல்கர்னி வீசிய 18-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும், பிராவோ சிக்ஸர், பவுண்டரி விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். தோனி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹாட்ரிக் சிக்ஸர்

ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து பிராவோ 27ரன்களி்ல் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 56 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரை உனத்கட் வீசினார்.

ஜடேஜா ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்து ஒரு ரன் ஓடி தோனியிடம் பேட்டிங்கை வழங்கினார். உனத்கட்டின் கடைசி 3  பந்துகளிலும் மூன்று அற்புதமான சிக்ஸர்களை அடித்து சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார் தோனி.

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. தோனி 75 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரஹானா, பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

விக்கெட்சரிவு

14 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி திணறியது. பவர்ப்ளே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்தது. ரஹானே(0), சாம்ஸன்(8), பட்லர்(6) என விரைவாக வெளியேறினார்கள்.

4-வது விக்கெட்டுக்கு திரிபாதியும், ஸ்மித்தும் இணைந்து நிதானமாக பேட் செய்தனர். அவ்வப்போது திரிபாதி சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

இம்ரான் தாஹிர் வீசிய 10-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து திரிபாதி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

இம்ரான் தாஹிர் வீசிய 14-வது ஓவரில் துருவ் ஷோரேயிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 28 ரன்களில் வெளியேறினார். அடுத்து கவுதம் வந்தார். கவுதம் அதிரடியாக தொடங்கினாலும், நிலைக்கவில்லை.

தாக்கூர் வீசிய 17-வது ஓவரில் 9 ரன்கள் சேர்த்திருந்த கவுதம் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்ச்சர் . அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி விளாசினார்.

கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. பிராவோ வீசிய 18-வது ஓவரில் ஸ்டோக்ஸ் சிக்ஸர், பவுண்டரி விளாச, ஆர்ச்சரும் சிக்ஸர் அடித்து 19 ரன்கள் சேர்த்தனர். இதனால், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடித்து 13 ரன்கல் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டதால், ஆட்டம் பரபரப்பை எட்டியது.

திருப்புமுனை ஓவர்

20 ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தில் சின்ன தல ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் 46 ரன்களில் வெளியேற சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அடுத்து கோபால் களமிறங்கினார். கோபால் ஒரு ரன்னும், ஆர்ச்சர் ஒரு ரன்னும் எடுத்தனர். 5-வது பந்தில் கோபால் தூக்கி அடிக்க தேர்ட் மேன் திசையில் தாஹிரிடம் கேட்சானது. கோபால் டக்அவுட்டில் வெளியேறினார். கடைசிப்பந்தில் ஆர்ச்சர் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார்.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 8 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே தரப்பில் சாஹர், தாக்கூர், பிராவோ, தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x